
பிப்., 16 ரத சப்தமி
வீட்டுக்கு சுமங்கலிகள் வந்தால், மஞ்சள், குங்குமம் கொடுத்து அனுப்பும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. குறிப்பாக, வரலட்சுமி விரதம், ஆடிப்பெருக்கு, காரடையான் நோன்பு போன்ற விசேஷ நாட்களில், இது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் மேற்கண்ட விரத நாட்களில் இதைக் கடைபிடித்தாலும், 'ஹால்டி கும்கும் விழா' என்ற பெயரில், ரத சப்தமியன்று, இந்த வழக்கத்தை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் ரதசப்தமியின் அருமை புரிந்தால், இங்கும், அதற்கு முக்கியத்துவம் தருவோம்.
ரத சப்தமி என்பது சாதாரணமான நாளல்ல. சீதோஷ்ண ரீதியாக இது மிக உயர்ந்த நாள். பிப்ரவரி மாத பின்பகுதி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக குளிரும் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் சுபநிகழ்வு நடத்தவும், பயணங்கள் மேற்கொள்ளவும் உகந்த காலம்.
அது மட்டுமல்லாமல், தை முதல் தேதி துவங்கும் உத்ராயண காலத்தில், வடதிசை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பார், சூரியன். ரத சப்தமியன்று, அந்த திசையில் தன்னை நேராக நிலை நிறுத்துவார்.
உத்ரம் என்றால் வடக்கு, அயனம் என்றால் பயணம். தை முதல் நாளிலிருந்து தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என, ஆறு மாதங்களுமே சுப மாதங்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும். இந்த மாதங்களில் தொடர்ச்சியாக கல்யாண மேளச்சத்தம் கேட்கும்.
வட மாநிலங்களில் ரத சப்தமியன்று, மஞ்சள் பொடி மற்றும் குங்குமம் விற்பனை களை கட்டும். 'ஹால்டி கும்கும் விழா' எனப்படும் இந்த நிகழ்விற்காக, மஞ்சளும், குங்குமமும் முதல்நாளே ஏராளமாக விற்பனையாகும். ஹால்டி என்றால் மஞ்சள். கும்கும் என்றால் குங்குமம்.
இளைய சுமங்கலிகளுக்கு நெற்றி உச்சியில் மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வதிப்பர், மூத்த சுமங்கலிகள். ஆஞ்சநேயருக்கு இடும் செந்துாரமும் வைப்பதுண்டு.
மஞ்சள் பூசி குளித்து, மஞ்சள் பொட்டும் வைத்துக் கொள்வர், கன்னிப்பெண்கள். தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சுமங்கலிகளும், தங்களுக்கு உன்னதமான கணவர் கிடைக்க வேண்டி கன்னிகளும், பெரியவர்களிடம் ஆசி பெறுவதே, விழாவின் நோக்கம்.
அன்று, சூரிய உதயத்துக்கு முன்பே நீராடி, பட்டுப்புடவை அணிந்து தயாராகி விடுவர். சூரியன் உதயமானதும், 108 முறை சூரிய நமஸ்காரம் செய்வர். மூத்தவர்களிடம் ஆசி பெற்ற பிறகு தான், இனிப்பு உள்ளிட்ட சிறப்பு உணவை உண்பர்.
இந்நாளில், குளிக்கும் போது தலையில் ஏழு எருக்கு இலைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. எருக்கிற்கு தோல் நோயை போக்கும் சக்தி உண்டு. அக்காலத்தில், தொழு நோயாளிகளுக்கு எருக்கு இலையில் தயிர்சாதம் வைத்துக் கொடுத்துள்ளனர்.
இனிமையான இந்த விழா, அதிக செலவு இல்லாதது. தரமான மஞ்சள், குங்குமம் வாங்கி, தமிழகப் பெண்களும் இந்த விழாவை மங்களகரமாகக் கொண்டாடி மகிழலாமே!
தி. செல்லப்பா