
இந்திய துாதுக்குழுவின் தலைவராக, கடந்த, 1919ல், இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார், சத்தியமூர்த்தி. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்திய விடுதலையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
அயர்லாந்தில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் எழுந்து, 'இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் வெளியேறினால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நாட்டில், கொலை, கொள்ளை அதிகரிக்கும்...' என்றான்.
சற்றும் தயங்காமல், 'ஆங்கிலேயர்கள் என்ன, அகில உலகத்தையும் ரட்சிக்க வந்த காவல்காரர்களா?' என்று, கேட்டவனின் வாயை அடைத்தார், சத்தியமூர்த்தி.
'உங்களால் சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியாது...' என்று கத்தினான், இன்னொரு வெள்ளையன்.
'நாங்கள் சுதந்திரம் பெறத்தான் போகிறோம். சுதந்திர பூமியில் நல்லாட்சி நடத்தத்தான் போகிறோம். நண்பரே, அந்த காட்சியைக் காண, இறைவன் உனக்கு நீண்ட ஆயுளை அருளட்டும்...' என்றார், சத்தியமூர்த்தி.
அவரது துணிச்சலான பதிலை கேட்டு ஆச்சர்யப்பட்டனர், அயர்லாந்து மக்கள்.
இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில், சத்தியமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது, 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று சொல்லப்படுகிறதே, எங்கள் திறமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...' என்று வினவினான், ஒரு ஆங்கிலேயன்.
'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். காரணம், சூரியன் மறைந்து இருட்டானால், அந்த இருளில் நீங்கள் என்னென்ன பாவங்கள் புரிவீர்களோ என்று அஞ்சித்தான், கடவுள், உங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியனை மறைய விடாமல் வைத்திருக்கிறார்...' என்றார், சத்தியமூர்த்தி.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே சென்று அவருக்கே உரித்தான மிடுக்குடன், அழகான ஆங்கிலத்தில் வன்மையாக சாடிய துணிச்சல், சத்தியமூர்த்திக்கே உரியது.
விருந்து ஒன்றுக்கு ரஷ்ய எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா சென்று திரும்பும்போது, வெளியே வைத்த அவரது குடை காணாமல் போனது.
குடை தானே போனால் போகிறது என விட்டுவிட மனமும் வரவில்லை. காரணம் தான் ஏமாந்தவன் ஆகக் கூடாது, அதே சமயம் அத்தவறு மறுமுறையும் நிகழக்கூடாது என எண்ணினார்.
உடனே, அந்த அமைப்பின் தகவல் பலகையில், 'என் குடையை எடுத்த நேர்மையான மனிதன், அதை திருப்பி அதே இடத்தில் வைக்க வேண்டும்...' என்று, வேண்டுகோள் விடுத்தார், பெர்னாட்ஷா.
அதை பார்த்தவர்கள், 'ஏன் நேர்மையான மனிதர் என்று எழுதி வைத்திருக்கிறீர்கள்... அது சற்று கிண்டலாக இல்லையா?' என்று, கேட்டனர்.
'நிச்சயம் அவன் ஒரு ஜென்டில்மேன் ஆக இருக்க முடியாது. ஜென்டில்மேன்களும், நோபில்மேன்களும் உறுப்பினர்களாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது, இந்த அமைப்பு. அதனால் தான், என் குடையை எடுத்தவனை நோபில்மேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன்...' என்று பதில் அளித்தார், பெர்னாட்ஷா.
ஒருமுறை மொரார்ஜி தேசாயை, இங்கிலாந்திற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமரிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் யாராக இருந்தாலும், தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட பிறகு தான், வெளிநாடு செல்ல வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையற்றவர், தேசாய்.
தன் கொள்கைக்கு மாறாக நடக்க அவருக்கு விருப்பமில்லை.
'தங்கள் நாட்டிற்கு (இங்கிலாந்து) நான், தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாமல் வர அனுமதித்தால், வர சம்மதிக்கிறேன்...' என்று இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதி, தன், விருப்பத்தை தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் அதற்கு சம்மதித்து ஒப்புக்கொள்ள, தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாமலேயே, இங்கிலாந்து சென்றார். காந்தி வழி வந்த தொண்டன் என்பதை ஆங்கில அரசுக்கு புரியவும் வைத்தார், மொரார்ஜி தேசாய்.
- நடுத்தெரு நாராயணன்