sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (12)

/

குற்றம் குற்றமே! (12)

குற்றம் குற்றமே! (12)

குற்றம் குற்றமே! (12)


PUBLISHED ON : பிப் 18, 2024

Google News

PUBLISHED ON : பிப் 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: தர்மகர்த்தாவின் வீட்டிற்குள் பாம்பு வந்ததை பற்றி விசாரித்தான், தனா. சாமியார் தான் பாம்பாக மாறி, கிராமத்தினுள் உலவி வருவதாகவும், அப்பாம்பு வந்த பின்னரே, கிராமத்தில் குற்ற செயல்கள் குறைந்தன. கோவிலை வியாபார தலமாக கருதியவர்கள், அடுத்தடுத்து இறந்து போனதாகவும் கூறுகிறார். கோவிலுக்கு சொந்தமான நடராஜர் சிலை காணாமல் போனதையும் தெரிவித்தார், தர்மகர்த்தா.

கோவிலுக்குள் செல்கின்றனர், தனஞ்ஜெயனும், குமாரும். அங்கும், லிங்கத்தின் மீது, பாம்பு படம் எடுத்து நின்றதை, தன் மொபைலில் படம் பிடிக்கிறான், தனா.

சென்னை திரும்பும்போது, இன்று இரவுக்குள், கோவிலில் காணமல் போன நடராஜர் சிலையை எடுத்து வந்து வைத்துவிட வேண்டும் என்கிறான், தனா.

ஆச்சரியம் குறையாதபடி, தனஞ்ஜெயனை உற்றுப் பார்த்தான், குமார்.

''அப்படி பார்க்காத. காரை எடு குமார்.'' ''எடுக்கிறேன், ஆனா, இப்ப நீ சொன்னதை என்னால ஜீரணிக்கவே முடியல.''

''ஜீரணிக்க முடியலேன்னா துப்பிடு. வேலையை மட்டும் செய். நான் இப்ப அப்படித்தான்டா இருக்கேன்.''

''தனா, நீ, இந்த விக்ரமாதித்தன் கதையில வர்ற வேதாளத்தை விட, பெரிய புதிரா இருக்கேடா.''

''புதிரா மட்டுமில்ல, குமார், நான் ஒரு பெரிய குற்றவாளியும் கூட.''

''அப்படி என்ன தப்புடா பண்ணின?''

''நான் நேரா செய்தா தானா? செய்தவர்களுடன் கூட சேர்ந்தாலும் குற்றவாளி தானே?''

''ஓ... இப்ப புரியுது, அந்த சிலையை திருடுனது யாரோ? ஆனா, நீ இப்ப அவரோட சேர்ந்திருக்க. அப்படித்தானே?''

''ஆமாம். ஆனா, சத்தியமா தப்பு செய்யல; செஞ்ச தப்பை எல்லாம் திருத்த.''

''என்னடா சினிமா, 'ஹீரோ' மாதிரி பதில் சொல்ற?''

''ஆமா, யாருடா அந்த சிலை திருடன்?''

''வேண்டாம், குமார்... இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காத. காரை எடு, இப்பவே 1:00 மணி ஆகுது. போற வழியில் நல்ல ஹோட்டலா பார்த்து வண்டியை நிறுத்து, 'லஞ்ச்' முடிச்சிடுவோம். அப்புறமா, நான் அந்த சிலையோட வரேன். ராத்திரி, 10:00 மணி போல, நாம திரும்பி இந்த கீழனுாருக்கு வந்து, சிலையை பாம்பு புற்றுக்கிட்ட வைக்கிறோம்.

''நாம அதை செய்யும் போது, தப்பித்தவறி யாரும் பார்த்துடக் கூடாது. நாளைக்கு பொழுது விடியும் போது, திரும்பக் கிடைச்ச நடராஜர் சிலையை பார்த்து, கீழனுாரே சந்தோஷப்படணும். எல்லா, 'டிவி' செய்தியிலும் இந்த சிலை கிடைச்சது தான் பிரதானமா இருக்கணும்,'' என்று அழுத்தம் திருத்தமாக கூறினான், தனஞ்ஜெயன்.

சில வினாடிகள் அவனை மவுனமாக பார்த்தபடி காரை எடுத்தான், குமார்.

''குமார், என்னை தப்பா புரிஞ்சுக்காத. நான் சில சத்தியங்கள் செய்திருக்கேன். அதை என்னால மீற முடியாது. நான் கேட்கிற உதவிகளை மட்டும் செய். போகப் போக, உனக்கே நிறைய விஷயங்கள் தானா தெரிய வரும். அதுவரை பொறுமையா இரு.

''இது, கஷ்டமான வேலை தான். துணிஞ்சு தான் நான் ஒத்துக்கிட்டிருக்கேன். உனக்கும் அந்த துணிச்சல் இருக்கணும். இல்லேன்னா இப்பவே நீ போகலாம். ஒரு தனி மனுஷனா, என்னால முடிஞ்சதை பார்த்துக்கிறேன்.''

''மூடிக்கிட்டு வாடா. இனி, நான் எதையும் கேட்க மாட்டேன். சொல்றத மட்டும் கேட்பேன். போதுமா?''

கீழனுாரில், தான் பார்த்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி முடித்த தனஞ்ஜெயனை, புருவ வளைப்போடு பார்த்தாள், கார்த்திகா.

''என்ன மேடம்... பாம்பு வந்தது, லிங்கம் மேலயே படம் எடுத்ததுங்கிறத எல்லாம் நம்ப முடியலியா?''

''ஆமாம்... இந்த காலத்துல இதை எல்லாம் யார் நம்புவாங்க. ஆனா, நீங்க சொல்றதால நான் நம்பறேன், தனா.''

''நமக்கு மேல நம் அறிவுக்கு புலப்படாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கு, மேடம். என் அம்மா, இதை அடிக்கடி சொல்வாங்க. இதையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். அடுத்து, அங்க நமக்கு எதிரானவங்க யாரும் இப்ப இல்லை. 'கொரோனா' அவங்களை கொண்டு போயிடுச்சாம்.''

''அப்ப என்ன பண்ணப் போறீங்க?''

''இன்னிக்கு ராத்திரியே, அந்த கோவில்ல சிலையை சேர்த்துட விரும்புறேன் மேடம்.''

''ஓ... எப்படி?''

அதை அப்படியே துாக்கிச் சென்று, பாம்பு புற்றுக்கு அருகில் வைத்துவிடப் போவதாகவும், நண்பன் குமாரை தன் டிரைவராக சேர்த்துக் கொண்டிருப்பதையும் கூறினான், தனஞ்ஜெயன்.

திரும்பவும், தீர்க்கமாய் அவனைப் பார்த்தாள், கார்த்திகா.

''என்ன மேடம், இதுல உங்களுக்கு விருப்பமில்லையா?''

''அப்படியில்லை. தப்பா எதுவும் நடந்துடக் கூடாதேன்னு பயப்படறேன். ஏன்னா, அந்த சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையது. அதை அவ்வளவு சுலபமா அங்க கொண்டு போக அந்த விவேக்கும், அவன் அப்பன் தாமோதரும் விட மாட்டாங்க.''

''நான், கீழனுார் போய் பார்த்துட்டு வந்தது, அவனுக்கு தெரிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?''

''உங்க தங்கைங்க, விண்ணப்பம் வாங்க, காலேஜுக்கு போறதெல்லாம் தெரியும்போது, இதுவுமா தெரிஞ்சுருக்காது.''

''தெரிஞ்சுருக்கும்ன்னே வெச்சுப்போம். அவன் என்ன செய்யிறான்னு தான் பார்க்கிறேன்.''

''நிச்சயம் தடுப்பான். தடுத்தா கொலை கூட செய்வான். அதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அவனால கொலை செய்யப்பட்டவங்கள்ல, எங்க பங்களா சமையல்கார மாமியும் ஒருத்தங்க.''

''மை காட்... போலீஸ்ல புகார் கொடுக்கலையா?''

''நாங்க யோக்யமா இருந்தா தானே அதை செய்ய முடியும். இங்க, என் அப்பா என்ன யோக்யம். ஸ்டெனோவை கெடுத்து, பிள்ளையை கொடுத்து, தற்கொலை செய்துக்க வெச்சவர் தானே?''

''சமையல்கார மாமியை சேர்ந்தவங்க போலீசுக்கு போயிருக்கலாமே?''

''ஏழை சொல் எந்த காலத்துல அம்பலம் ஏறியிருக்கு?''

''சரி, மாமியை ஏன் கொன்னான்?''

''சாப்பாட்டுல விஷம் கலந்து, அப்பாவை கொல்ல சொன்னான். மாமி மறுத்தாங்க. பதிலுக்கு அவனை செருப்பால அடிச்சாங்க. அந்த கோபத்துல அவங்க மேல காரை ஏற்றி, விபத்துங்கிற பேர்ல கொன்னுட்டான்.''

''ஓ... அவ்வளவு குரூரமானவனா அவன்?''

''அண்டர்கிரவுண்ட், தாதாக்கள்ன்னாலே, ஈவு, இரக்கம் இல்லாதவங்க தான், தனா. அப்ப தான் அவங்க ஒரு, 'டானா' வலம் வர முடியும்.''

''சரி மேடம்... நான் இதை எப்படி சமாளிக்கணுமோ அப்படி சமாளிக்கிறேன்.''

''அதான் எப்படி?'' என்று, அழுத்தமாக கேட்டாள், கார்த்திகா.

சில நிமிட சிந்தனைக்கு பின், தன் திட்டத்தைச் சொன்னான், தனஞ்ஜெயன்.

அதைக்கேட்ட நொடி, ''சூப்பர் தனா... நல்ல ஐடியா இது,'' என்றாள், கார்த்திகா.

தனாவின், 'அப்பார்ட்மென்ட்டு'க்குள் டிரைவர் உடுப்பில் நுழைந்தான், குமார். அவனைப் பார்த்த தனாவின் அம்மா, அக்கா மற்றும் தங்கைகள் ஆகியோர், புருவங்களில் அதிர்வலை உண்டாக்கி, வியப்பை காட்டினர்.

'அண்ணா, இது என்ன வேஷம்?' என்றனர், தங்கைகள்.

''வேஷமில்லை... நான் தான் இனி உங்க அண்ணனோட டிரைவர்.''

''அதுக்காகவா, 'போஸ்ட் கிராஜுவேஷன்'லாம் படிச்சீங்க?'' என்றாள், அக்கா சாந்தி.

''கம்ப்யூட்டர் டிப்ளமோவை விட்டுட்டியே?''

''டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்டையும் நாங்க மறக்கல. அவ்வளவு படிச்சிட்டு இந்த வேலைக்கு ஏன் வந்தீங்க?''

''என்னமோ என் படிப்புக்கு சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்பு இருக்கிற மாதிரியே பேசறீங்களே... எவ்வளவு பெரிய கம்பெனிக்கு போனாலும், 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கே யோசிக்கிறாங்க. உங்க அண்ணன் கூட தரேன்னான். வர்ற வேலையை ஏன் விடணும், அதான் சரின்னு சேர்ந்துட்டேன்.''

''சம்பளம் தந்தா, என்ன வேணா செய்வீங்களா?''

''என்ன தப்பு சாந்தி? செருப்பு தைச்சவங்க ஜனாதிபதி ஆகியிருக்காங்க. வரலாறு புத்தகத்தை எடுத்துப்படி, தெரியும்.''

'நல்லா சமாளிக்கிற, அண்ணா. என் அண்ணன் ஒரு மாதிரி அதிர்ச்சி தந்தா, நீங்க ஒரு மாதிரி அதிர்ச்சி தர்றீங்களே. சம்திங்ராங்...' என்று, ஸ்ருதியும், கீர்த்தியும் ஒரே குரலில் கூறினர்.

ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட்டில், அறையிலிருந்து வந்த வேகத்தில், ''கிளம்புடா...'' என்றான், தனஞ்ஜெயன்.

''டேய்... உன் தங்கச்சிங்க, என்னை டிரைவரா ஏத்துக்க மாட்டேங்கறாங்கடா,'' என்று சிணுங்கினான், குமார்.

''இவங்க, என்னையே இன்னும் ஆபீசரா ஏத்துக்கல. இதைப் போய் பெருசா பேசிக்கிட்டு. புறப்படு நேரமாச்சு.''

''கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத, தனா. இந்த ராத்திரியில ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?'' என்று இடைமறித்தாள், அம்மா.

''செகண்ட் ஷோ சினிமாவுக்கும்மா.''

'ஹை... நாங்களும் வர்றோம்...' என்று, தங்கைகள் இருவரும் எழுந்தனர்.

''அது, 'அடல்ட்ஸ் ஒன்லி' படம். போய் படிக்கிற வேலையை பாருங்க,'' என சொல்லி, தங்கைகள் இருவரையும் சமாளித்தான், தனா.

குறுகுறுப்பாக பார்த்துக் கொண்டே, இருவரும் வெளியேறவும், பெருமூச்சு விட்டாள், அக்கா சாந்தி.

''என்னடி பெருமூச்சு விடற?'' என்றாள், அம்மா.

''தப்பா ஏதோ நடக்குதும்மா?''

''ஐயோ, என்னடி சொல்ற?''

''மனசுல பட்டதை சொன்னேன்.''

''அப்ப, தனா, சினிமாவுக்கு போகலையா?''

''நிச்சயமா இல்லை.''

''வேற எங்க போறான்?''

''தெரியாது. ஆனா, நிச்சயம் ஏதோ தப்பான விஷயம் இருக்கு,'' என்று சொல்லி, அம்மாவின் வயிற்றை கலக்கினாள், சாந்தி.

இரவு மணி, 10:00!

கார்த்திகாவின் பங்களாவுக்குள், கார் நுழைந்தது. தனாவும், குமாரும், காரிலிருந்து இறங்கி பங்களாவை ஒட்டியிருந்த, 'ஸ்டோர் ரூம்' போன்ற இடத்துக்கு சென்றனர். அங்கே 5 அடி அகலத்தில் அட்டைப் பெட்டி ஒன்று தயாராக இருந்தது.

அதை சுமந்து வெளியே வரவும், தயாராக இருந்த மெடிக்கல் வேனில், அட்டை பெட்டியை ஏற்றினர்.

''இந்த பெட்டியில் தான் அந்த சிலை இருக்கா?'' என்று யூகமாக கேட்டான், குமார்.

''ஆமாம்.''

''காரில் போனா எதிரிக்கு தெரிஞ்சு, 'பாலோ' பண்ணுவான்னு மெடிக்கல் வேனா?''

''எக்ஸாக்ட்லி.''

''ஆமா... இது, யாரோட பங்களா?''

''போகும் போது சொல்றேன். வண்டியை எடு.''

டிரைவிங் சீட்டில் அமர்ந்து வண்டியை கிளப்பினான், குமார். வேகமாக வண்டியில் ஏறிக்கொண்டான், தனா.

''நேரா இப்ப கீழனுார் போறோம். பெட்டியில இருக்குற, நடராஜர் சிலையை பாம்பு புற்றுகிட்ட இறக்கி வைக்கிறோம். அப்படியே, உன் மாமா சதாசிவத்துக்கு போன் பண்ணி, புற்றுகிட்ட வரச்சொல்றோம். அவர் வந்து, நம்மள பார்க்கிறதுக்கு முன், அந்த இடத்தை காலி பண்ணிடறோம். இதான் பிளான்.''

வேகமெடுத்தது, வேன். நள்ளிரவில், கீழனுாருக்கு, 10 கி.மீ., முன்பாக ஒரு சாலை வளைவில் திரும்பிய போது, டயரில், எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தாறுமாறாக ஓடி, ஒரு மரத்தில் மோதி நின்றது, வேன்.

அந்த மரத்துக்கு சற்று தள்ளி, ஒரு படகு கார் நின்றிருந்தது.

அதில் விவேக்!

- தொடரும்.- இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us