
க. சித்தார்த், சென்னை: தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்து, திரைப்படத் துறையை சார்ந்த விஜய், முதல்வராக வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனரே...
அடுத்து, அவர் நடிக்கும் படத்தில் மட்டுமே, தமிழக முதல்வராக வர முடியும்!
ரா. ராஜ்மோகன், விழுப்புரம்: 'ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் தான். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு தான்...' என்கிறாரே, ஓ.பி.எஸ்.,
லோக்சபா தேர்தல் முடிவுகள் வரட்டும்... அப்போது தெரியும், இவர் சொன்னது, சரியா, தவறா என்பது!
ஆதித்த நிமலன், கடலுார்: எந்த நாட்டில், கார், 'டிரைவிங்' செய்வது, மகிழ்ச்சியாக இருக்கும்?
தென் அமெரிக்கா மற்றும் இந்தியா தவிர மற்ற உலக நாடுகளில், கார் ஓட்டுவது மகிழ்ச்சியாக இருக்கும்.
அங்கெல்லாம் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பவர்கள் அதிகம்.
மேலும், அங்கெல்லாம் விதி மீறுபவர்கள் மீது, கடும் சட்டம் பாயும்!
* கே. அப்துல் அஜீஸ், நெல்லை: என் வாழ்க்கையில் துன்பங்கள் அதிகமாக இருக்கிறதே...
துன்பங்களை எதிர்கொள்ள தயாராகா விட்டால், வாழ்க்கையில், உங்களால் எதையும் சாதிக்க முடியாது.
சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்கும்போது, பழி வாங்கும் செயல்களில் ஈடுபட்டு, பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது.
துயரங்களை தாங்கிக் கொள்ள பழகுங்கள். அவை தான் உங்களை துாக்கி நிறுத்தும்!
* ஆ. மகேஸ்வரி, மதுரை: சரளமாக ஆங்கிலம் பேச வரவில்லை என்பது, முன்னேற்றத்திற்கு தடையாகுமா?
இல்லவே இல்லை. தமிழக முதல்வராக இருந்த எத்தனை பேருக்கு, ஆங்கிலத்தில் பேச முடிந்திருக்கிறது! தொழில் அதிபர்களாக இருந்த, இப்போது மறைந்து விட்ட பல பேருக்கு, ஆங்கிலத்தில் பேச வராது.
ஆங்கிலம் பேச முடியாதது, முன்னேற்றத்திற்கு ஒரு தடையே இல்லை!
மு. இசக்கி, சென்னை: எந்த வட்டாரத் தமிழ் தங்களுக்கு தேனமுதம்?
நெல்லை தமிழ், முதலிடம். அடுத்து வருவது, குமரி தமிழ். மூன்றாவது இடத்தில், கோவை தமிழ். சென்னை தமிழ், எனக்கு பேச வராது; புரிவதும் கொஞ்சம் தான்!
எஸ். பாஸ்கரன், கடலுார்: தீமையை எப்படி வெல்ல முடியும்?
நன்மையால் மட்டுமே தீமையை வெல்ல முடியும்.
அதே போல், பொய்யை வெல்ல, உண்மையால் மட்டுமே முடியும். முயற்சித்து பாருங்கள்!