
பா - கே
அலுவலகம், மதிய உணவு இடைவேளை... தன் எதிரில் இருந்த, 'டிவி'யில், செய்தி சேனல் ஒன்றை பார்த்தபடி, 'ரிலாக்ஸ்' ஆக அமர்ந்திருந்தார், லென்ஸ் மாமா.
திடீரென, 'மணி இங்க வந்து பாரேன்...' என்று, 'டிவி'யைச் சுட்டிக் காட்டினார்.
அமைச்சர் ஒருவர், அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி, 'டிவி'யில் ஓடிக் கொண்டிருந்தது.
'மாமா, அமைச்சர், தன் கட்சிக்காரர்கள் மற்றும் தன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஏதோ, 'டிஸ்கஸ்' செஞ்சுட்டு இருக்கிறார். இதில் என்ன விசேஷம்?' என்றேன்.
'நீ சொல்றது சரிதான். ஆனால், ஒண்ணு கவனிச்சியா? அமைச்சர் எதிரில் அமர்ந்திருப்பவர்களில் சிலர், கைக்கட்டியபடி அமர்ந்திருக்கின்றனரே... இதற்கு என்ன அர்த்தம்?' என்றார், மாமா.
'அமைச்சர் சொல்வதை பவ்யமாக கேட்டுட்டு இருக்காங்க...' என்றேன்.
'அதுதான் இல்லை. கைகள் கட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கிறதா, மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க...' என்றார், மாமா.
'அது என்ன?' என்று கேட்டதும், கூற ஆரம்பித்தார், மாமா:
நாம, ஒருத்தர் முன் நின்று பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு வை. கொஞ்ச நேரம் அவர் இயல்பா நின்று கேட்டுக்கிட்டு இருப்பார். அப்புறம் மெதுவா கைகளை கட்டிக்கிட்டு கேட்க ஆரம்பிக்கிறார்ன்னா, அவர், நம் பேச்சை மரியாதையா கேட்கறார்ன்னு அர்த்தம் இல்லை; மரியாதையா நாம பேசறதை நிறுத்திக்க சொல்றார்ன்னு அர்த்தம்.
அந்த உடல் மொழியை புரிஞ்சுக்காம, நாம பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தோம்ன்னா, அவருக்கு, நம் பேர்ல ஒரு வெறுப்பு வந்துடும்.
நம் முன் இருக்கிறவர், கை கட்டை அவிழ்க்கிறதுக்கு சில தந்திரங்கள் இருக்கு. பேச்சுக்கு மத்தியில அவருகிட்ட ஒரு பேனாவோ அல்லது புத்தகத்தை கொடுத்தால், தானாக அவர் கை பிரியும். மறுபடியும் உங்க பேச்சை, அவர் கவனமா கேட்பார்.
ஒருத்தர் கையை இறுக்கமாக கட்டிக்கிட்டு இருக்கார்ன்னா, அவர் மனசுல என்ன நினைப்பு மறைந்திருக்கும் தெரியுமா? நான் தனி, யாரோடும் சேர விரும்பல. எனக்கு, இந்த சூழ்நிலை இயல்பா இல்லை; பிடிக்கல என்று அர்த்தம்.
இதுமாதிரி மறுப்பு எண்ணத்தின் ஒட்டுமொத்த தொகுப்பு தான், கை கட்டறது.
மேலும், ரெண்டு கைகளையும் கட்டிக்கிறப்போ, எதிலேயோ இருந்து தப்பிச்சுக்கிறதுக்கு, ஒரு பாதுகாப்பு கிடைச்ச உணர்வு கிடைக்கும் என்கின்றனர், மனோதத்துவ நிபுணர்கள்.
தற்காப்பு அல்லது கவசம் மாதிரி. அது நமக்கு தெரியும்.
இந்த பழக்கம் நமக்கு எப்படி ஆரம்பிச்சது தெரியுமா?
சின்ன வயசுல, ஏதாவது தப்பு பண்ணிட்டு, அம்மாவுக்கு பின் போய் ஒளிஞ்சுக்கிறது... ஒரு கதவுக்கு பின்புறம் போய் ஒளிஞ்சுக்கிறது... இந்த பழக்கம் தான், நாம வளர்ந்த பிறகு, நம்மளை மறைக்கிறதுக்கு எதுவும் இல்ல. அதனால, கையை முன் பக்கமாக கட்டிக்கிறோம். கையையே ஒரு மறைப்பா உபயோகப்படுத்தறோம். அவ்வளவு தான்.
மேலும், கூட்டத்தின் நடுவில் நிற்கும்போது, நாம கையை கட்டிக்கிட்டு இருந்தோம்ன்னா, ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கறதா, நம் உள் மனசு நினைச்சுக்குமாம்.
அச்சுறுத்தற சந்தர்ப்பங்கள், பதட்டம், பலர் முன் நிற்க வேண்டிய சூழ்நிலை, மேடை மாதிரி இடங்கள்ல நம் கைகளை மார்புல கட்டிக்கிட்டா, மனசுக்கு ஒரு நிம்மதி. அதேபோல், பிடிக்காத இடம், பிடிக்காதவர் மத்தியில் நிற்க வேண்டிய சந்தர்ப்பம் மற்றும் பிடிக்காத சூழ்நிலை போன்ற நேரங்கள்ல முன் கை கட்டறது, ஒரு வழக்கமான அறிகுறி.
ஒரு காவல்துறை அதிகாரி, இடுப்புல துப்பாக்கி வச்சுருக்கார்ன்னா, அவர், நிச்சயம் கை கட்ட மாட்டார். ஏன்னா, துப்பாக்கி இருக்குங்கிற நினைப்பு மனசுல தைரியத்தை கொடுத்துடுது.
கூட்டம் ஒன்றில் மனோதத்துவ நிபுணர், வேணும்ன்னே அவங்க உணர்ச்சியை பாதிக்கிற மாதிரி ரொம்ப சீரியசாக பேச, 90 சதவீதம் பேர் கையை கட்டிக்கிட்டு இருந்தாங்களாம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்னு இவரு சொன்னதும், எல்லாரும் சிரிச்சுக்கிட்டே, கையை எடுத்துட்டாங்களாம்.
நம் மனசு என்ன நினைக்குதுங்கிறதை, நமக்கு தெரியாமலே நம் உடம்பு வெளிப்படுத்திடும். அதனால தான், இதை மெய்ப்பொருள்னு சொல்றாங்க.
ஒரு வகுப்புல, கை கட்டாமல் பாடம் கேட்கிறவங்களை விட, கை கட்டிக்கிட்டு பாடம் கேட்கிறவங்க, 38 சதவீதம் குறைவாதான் பாடத்தை கவனிச்சு இருக்காங்கங்கிறது ஒரு சோதனை மூலமா தெரிய வந்துருக்கு.
மேடையில பேசறப்போ கூட எதிரில் உள்ளவங்க நிலைமையை கவனிச்சுப் பார்க்கணும். நிறைய பேரு கை கட்ட ஆரம்பிச்சாங்கன்னா, பேச்சாளரின் கருத்தை, அவங்க மனசு ஏத்துக்கலேன்னு அர்த்தம்.
- இப்படி, மாமா கூறி முடிக்கவும்,'கைக்கட்டறதில் இவ்ளோ விஷயம் இருக்கா...' என்று, ஆச்சரியப்பட்டேன்.
ப
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒருவர் நிறுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்படி அவர் செய்தால், 20 நிமிடங்களுக்குள், உயர் ரத்த அழுத்தம், உடல் வெப்பம், நாடித் துடிப்பு இதெல்லாம் சரியான நிலைக்கு வந்துவிடும். எட்டு மணி நேரத்துக்குள், ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு குறைந்து, ஆக்சிஜன் அளவு கூடி, சரியான அளவுக்கு வந்துவிடும்.
ஒருவர், கடைசி சிகரெட்டை துாக்கி எறிஞ்சுட்டார்ன்னா, 24 மணி நேரத்துக்குள் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். 48 மணி நேரத்துக்குள், உணர்வு நரம்புகளின் முனைப் பகுதிகள் மறுபடி ஒன்று சேரும்.
அதனால், நாவின் சுவை உணர்வு, மூக்கின் முகரும் சக்தி இதெல்லாம் மேம்பட்டு, நல்ல நிலைக்கு வரும்.
சிகரெட்டை நிறுத்தின மூன்று நாளைக்குள், மூச்சு விடறது சுலபமாகும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள், ரத்த ஓட்டம் மேம்படும். நடக்கறது சுலபமாகும். நுரையீரல் கொள்ளளவு, 30 சதவீதம் அதிகரிக்கும்.
ஒன்று முதல் ஒன்பது மாதங்களுக்குள், சுவாச குறைபாடுகள் நீங்கி, நுரையீரலில் உள்ள அசுத்தம் வடிகட்டும் திசுக்கள், சரியா வேலை செய்ய ஆரம்பிக்கும். ஒரு ஆண்டுக்குள், இதய அழுத்த நோய்க்கான வாய்ப்பு பாதியாக குறையும்.
ஐந்து ஆண்டுக்குள்...
ஒரு நாளைக்கு, ஒரு பாக்கெட் சிகரெட் பிடிக்கிறவர்கள், நுரையீரல் புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையும்.
தீர்மானம் செய்து, தன் கையில் இருக்குற சிகரெட்டை, 'இது தான் கடைசி...' எனச் சொல்லி துாக்கி எறிந்தால், இவ்வளவு நன்மைகளும், மாற்றங்களும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது, அமெரிக்க கேன்சர் சொசைட்டி.
அதனால், புகை பழக்கம் உள்ளவர்கள், இதையெல்லாம் கொஞ்சம் யோசித்து பார்த்து, அந்த பழக்கத்தை விட்டுவிடுவது நல்லது.
எங்கோ, எப்போதோ, எதிலோ படித்தது.