sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்! (16)

/

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்! (16)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்! (16)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்! (16)


PUBLISHED ON : பிப் 18, 2024

Google News

PUBLISHED ON : பிப் 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடை கச்சேரிகளில், தமிழிசையைப் பரப்புவதில் பல பிரபலங்கள் ஈடுபட்டனர். அதில், பாகவதரும் குறிப்பிடத்தக்கவர்.

முதல் தமிழிசை மாநாடு, ஆகஸ்ட், 1941ல், சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்தது. முதல் கச்சேரியைத் துவங்கி வைத்தவர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்.

இதில் முதலில், இசையரசர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடினார்.

அதன் பிறகு, பாகவதர் பாடினார். பாகவதர் பாட்டைக் கேட்பதற்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பிக்க, அண்ணாமலை நகரே கிடுகிடுத்துப் போனது.

'கல்கி' இதழை அப்போது தான் ஆரம்பித்திருந்தார், கல்கி. மாநாடு பற்றி அவர் எழுதிய கட்டுரையில், 'பாகவதரின் அதிமதுரமான இசையைக் கேட்ட பிறகு, வேறு யாருடைய பாட்டையும் கேட்கப் பிரியப்படாத நான், அடுத்து யார் பாடுகிறார் என்று கூடக் கேட்க விரும்பாமல், கிளம்பி விட்டேன்...' என்று எழுதியிருந்தார்.

பாகவதரின் பெரும்பாலான படங்களுக்கு பாடல் எழுதியவர், தமிழ் தியாகைய்யர் என்று போற்றப்படும், பாபநாசம் சிவன். பாடலை எழுதும்போதே, அதற்கான ராகத்தையும் குறிப்பிட்டு விடுவார். பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என்று, பன்முகத் திறன் படைத்தவர், சிவன்.

பாபநாசம் சிவன் - பாகவதர் கூட்டணியானது அமோக வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. கர்நாடக சங்கீத ராகங்களை, சினிமாப் பாடல்கள் மூலம், பாமர ஜனங்களும், உணர்ந்து ரசித்து மகிழும்படியாய் செய்த இவ்விருவரும் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

பாகவதரின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளும், தமிழ் இசைக் கச்சேரிகளும் சமூக வலைத்தளத்தில் காணக்கிடைப்பதாய்த் தெரியவில்லை. ஒருவேளை, வானொலி நிலையத்தார் வசம் இருக்கலாம்.

அப்படி இருக்கும் பட்சத்தில், அதை அவர்கள் வெளியிட்டால், இன்றைய தலைமுறையினரும் கேட்டு மகிழும் பாக்கியம் கிடைக்கும்.

'சாரங்கதரா' என்ற புராணக்கதை. சித்ராங்கி என்ற அழகிய இளவரசிக்கு, திருமண ஏற்பாடு நடக்கிறது. அக்காலத்திய வழக்கப்படி, பல இளவரசர்களின் படத்தைப் பார்த்த இளவரசி, சாரங்கதரன் என்ற இளவரசனின் படத்தைப் பார்த்து மயங்கி, அவனையே மணக்க விரும்புகிறாள்.

சாரங்கதரனின் தந்தை கிழட்டு ராஜா, தந்திரம் செய்து, சித்ராங்கியை மணந்து கொள்கிறான். பதறிப் போகிறாள், சித்ராங்கி. அவளும், தந்திரம் செய்து, கிழவனோடு வாழாமல் விரதம் என்ற பெயரில் தப்பித்துக் கொள்கிறாள்.

சாரங்கதரனைக் கண்டு, தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறாள். 'நீங்கள் என் சிற்றன்னை...' என்று கூறி, மறுத்து விடுகிறான், அவன். ஏமாந்து போன அவள், கிழட்டு ராஜாவிடம், பொய் புகார் செய்ய, சாரங்கதரனின் ஒரு கையும், ஒரு காலும் வெட்டப்படுகிறது. தற்கொலை செய்து கொள்கிறாள், சித்ராங்கி.

இதே கதையை, பம்பாயில், ஒரு படக் கம்பெனி எடுத்தனர். கதாநாயகன், கொத்தமங்கலம் சீனு. படம் வெளியாகி, படுதோல்வி அடைந்தது.

சிறிது காலத்திற்கு பின், இதே கதையை இயக்குனர் கே.சுப்ரமணியம், தயாரிக்க நினைத்தார். பாகவதர், ஹீரோ. கதாநாயகியாக, எஸ்.டி.சுப்புலட்சுமியை நடிக்க வைத்தனர்.

கதையின் முடிவை அழகாக மாற்றினார், இயக்குனர். அதாவது, பிற்பகுதியில், சாரங்கதரனும், சித்ராங்கியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த, கிழட்டு ராஜா, மகனின் ஒரு கை மற்றும் ஒரு காலை வெட்ட ஆணையிடுகிறான். ஆணை நிறைவேற்றப்படுகிறது.

அப்போது, ஒரு பெண் துறவி வந்து, சாரங்கதரன் மீது இரக்கப்பட்டு, அவனுக்கு வெட்டப்பட்ட கையையும், காலையும் மீட்டுத் தருகிறார். கிழவன் திருந்துகிறான். சாரங்கதரன் - சித்ராங்கி திருமணம் கோலாகலமாக நடைபெறுகிறது.

இப்படி, மிகவும் சாமர்த்தியமான மாறுதலைச் செய்தார், இயக்குனர் சுப்ரமணியம். அதனால், படத்திற்கு,நவீன சாரங்கதரா என்று, பெயர் சூட்டினார்.

அபாரமான வெற்றியைப் பெற்றது, படம்.

இப்படத்தில் இடம்பெற்ற, 'சிவபெருமான் கிருபை வேண்டும்...' என்ற பாகவதரின் பாடல் ஒலிக்காத இடமேயில்லை என்று ஆனது. அது மட்டுமல்ல, பாகவதர் என்ன நாடகம் போட்டாலும், இந்தப் பாடலை ரசிகர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். நாடகத்திற்கு தொடர்பில்லா விட்டாலும், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, பாகவதரும் கண்டிப்பாகப் பாடுவார்.

நவீன சாரங்கதாரா படத்திற்குப் பிறகு, அதில் நடித்த, எஸ்.டி.சுப்புலட்சுமியை மணந்து கொண்டார், இயக்குனர் கே.சுப்ரமணியம்.

தன் படங்களின் அபார வெற்றியை கண்ட, பாகவதர், தாமே படம் தயாரித்தால் என்ன என்று சிந்தித்தார். விளைவு?

திருச்சி தியாகராஜா பிலிம்ஸ் என்ற படப்பிடிப்பு நிறுவனத்தைத் துவங்கி, சத்திய சீலன் படத்தை வெற்றிகரமாக எடுத்து, முடித்தார். 1936ல் படம் வெளிவந்தது. இப்படத்தின் நாயகி, எம்.எஸ்.தேவசேனா. பிற்காலத்தில், இவர், இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரை மணந்தார்.

இதன் சிறப்பு என்னவென்றால், இந்தப் படத்தில், கத்திச் சண்டை எல்லாம் போட்டு, இரட்டை வேடத்தில் நடித்திருப்பார், பாகவதர்.

இப்படத்தில் இனிமையான பாடல்கள் நிறைந்திருந்தன. ஒரு பாட்டு, குறிப்பாக, 'சொல்லு பாப்பா, சொல்லு பாப்பா, சுகம் பெற வழி ஒண்ணு சொல்லு பாப்பா...' என்று, இருந்தது. 'சுதந்திரம் பெற வழி ஒண்ணு சொல்லு பாப்பா...' என்று தான் முதலில் எழுதப்பட்டிருந்தது.

வெள்ளையர் ஆட்சி அல்லவா நடந்து கொண்டிருந்தது. சென்சாரில் சுதந்திரம் என்ற வார்த்தை வரக்கூடாது என்று நீக்க கூறினர். எனவே, படத்திற்காக, சுகம் பெற என்று மாற்றப்பட்டது. ஆனாலும், பாகவதர் அப்பாடலைப் பாடும் போதெல்லாம், சுதந்திரம் பெற என்றே பாடுவாராம்.

அதிகமான அளவில், பாகவதர் படங்களுக்கு இசையமைத்த, ஜி.ராமநாதன் இப்படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் முழுப்பெருமையும் பாகவதரையே சாரும்.

இப்படத்திற்கான மொத்த செலவு, 52 ஆயிரம் ரூபாய். படத் தயாரிப்பு செலவை விட, பல மடங்கு வசூலை குவித்தது.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 1939 -- 40ல், மீண்டும் திரையிடப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் காமெடி இப்படத்தில் இணைக்கப்பட்டது.

இரண்டு முறை வெளியான ஒரே படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

— தொடரும்

கந்தர்வன் போன்ற பேரழகு படைத்த பாகவதர், 5.5 அடி உயரம் உடையவர். சந்தனத்தை பன்னீரில் அரைத்து உடலில் பூசிக் கொள்வாராம். அது போதாதென்று, புனுகு, ஜவ்வாது அத்தர் என்று அத்தனை வாசனை திரவியங்களையும் பூசிக்கொள்வாராம்.வாளி தண்ணீரில் பன்னீர் ரோஜாப் பூக்களை போட்டு வைத்து, அதில் குளிப்பது தான் வழக்கமாம். பட்டு வேஷ்டி, சட்டை மற்றும் அங்கவஸ்திரத்தை அணிந்து, பாகவதர் வெளியே வந்தால், கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி அவரைப் பார்த்து குதுாகலிப்பர்.இளவரசனைப் போல் இருந்திருக்கிறார். பட்டு சட்டைக்கு பொத்தான் கூட, வைரம் தான் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். வானுலக தேவராஜன் இந்திரன் போன்று தான், அவர் இருந்திருக்கிறார்.

கார்முகிலோன்






      Dinamalar
      Follow us