
இரக்கப்பட்டு சிக்கலில் மாட்டிய, விமானப் பயணி!
தொழிலதிபரான நண்பர் ஒருவர், 'பிசினஸ்' விஷயமாக, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு, விமானப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அண்மையில் அவரைச் சந்தித்த போது, சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.
சிங்கப்பூரில், 'பிசினஸ் மீட்டிங்கை' முடித்து, விமான நிலையம் வந்தவரிடம், வயதான பெண்மணி ஒருவர், 'என்கிட்ட, 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' இருக்கு தம்பி... உங்க, 'லக்கேஜ் வெயிட்' குறைவா தானே இருக்கு. கொஞ்சம் என், 'லக்கேஜையும்' வெச்சுக்கிட்டு வர்றீங்களா... சென்னையில் இறங்கியதும், வாங்கிக்கிறேன்...' என்று, கேட்டிருக்கிறார்.
'சாரி மேடம்... என்னால உங்களுக்கு அந்த உதவியை பண்ண முடியாது...' என்று மறுத்திருக்கிறார், நண்பர். அதன்பின், வேறொருவரை அணுகி, அவரிடம் தன், 'லக்கேஜை' ஒப்படைத்திருக்கிறார், அந்தப் பெண்மணி.
விமானம், சென்னை வந்ததும், அப்பெண்மணியின், 'லக்கேஜை' கொண்டு வந்தவர், கடத்தல் பொருளை எடுத்து வந்ததாகக் கூறி, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். அந்தப் பெண்மணியோ, எதுவுமே நடக்காதது போல், அங்கிருந்து நழுவியிருக்கிறார்.
இதை என்னிடம் கூறிய நண்பர், 'விமானப் பயணங்களின் போது, மற்றவர், 'லக்கேஜை' வாங்கவே கூடாது. இரக்கப்பட்டு வில்லங்கத்தில் மாட்டாமலிருக்க, 'முடியாது' என, சொல்லி விட வேண்டும்...' என்று அறிவுறுத்தினார்.
வெளிநாட்டுக்கு பயணிப்பவர்கள், இந்த எச்சரிக்கையை கண்டிப்பாக கவனத்தில் வைத்திருப்பது நல்லது.
— பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.
ஏமாற்றாதே, ஏமாறாதே!
பிரமாண்டமான பங்களாக்கள் நிறைந்த, வசதியானவர்கள் வசிக்கும் பகுதியின் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, சில விடலை பசங்களை திட்டி, விரட்டிக் கொண்டிருந்தார், பங்களா வாசலிலிருந்த வாட்ச்மேன்.
அவரிடம், 'என்ன பெரியவரே... எதுக்கு, பசங்களை விரட்டுறீங்க?' என்றேன்.
'இவங்களால, பெரிய தொல்லையா போச்சு, சார்... ஹோட்டலில் வேலை பார்க்கிறாங்க. நண்பர்களிடம் ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட், ஷூ எல்லாம் கடன் வாங்கி போட்டுக்கிட்டு, யாரிடமாவது, 'ஓசி' பைக் கேட்டு எடுத்து வந்து, இதுபோன்று, பங்களா வாசலில் நின்று, புகைப்படம் எடுத்துக்குவாங்க...' என்றார்.
'எதுக்கு?' என்று கேட்டேன்.
'அந்த புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு, 'இதுதான் எங்க பங்களா. பைக்கில் இன்ஜினியரிங் காலேஜுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்'னு, 'ஸ்டேட்டஸ்' போடுவானுங்க. அதை பார்த்து, பொண்ணுங்க மயங்கி, இவனுங்கக்கிட்ட மாட்டிக்கும்...' என்றார்.
அவர் சொன்னதை கேட்டதும், எனக்கு துாக்கி வாரிப் போட்டது.
'அடப்பாவிகளா... பெண்களை கவர்ந்து, ஏமாற்ற, எப்படி எல்லாம் தந்திரம் செய்கின்றனர்...' என்று, மனம் பதைபதைத்தது.
பெண்களே... வலைதளத்தில் அறிமுகமாகுபவர்களை பற்றி, முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தொடர்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது, ஆபத்தில் முடியும் என்பதை, இனியாவது உணருங்கள்.
— அண்ணா அன்பழகன், சென்னை.
உறவினர் மகளின் உபகாரம்!
சமீபத்தில், என்னை பார்க்க, பக்கத்து ஊரிலிருந்து தன் ஸ்கூட்டியில் வந்திருந்தார், உறவினர் மகள்.
அவர் புறப்படும்போது, என் மனைவி தந்த பொருட்களை வைக்க, ஸ்கூட்டியின் சீட்டை திறந்தார். அதில், புடவை, ரவிக்கை, பாவாடை ஒரு செட்டும், சட்டை, வேட்டி ஒரு செட்டும் இருந்தது.
அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
'சாலைகளில் எதிர்பாராத விபத்து நிகழ்வது, சர்வ சாதாரணமாகி விட்டது. அதிலும், இருசக்கர வாகன விபத்து அடிக்கடி நிகழ்கிறது.
'அவ்வாறு, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், திடீர் சாலை விபத்தில் சிக்கும் பெண்ணுக்கும், ஆணுக்கும், காயம், வலி ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயத்தில், ஆடைகள் கிழிந்து, மானம் போகும் சூழ்நிலை, கொடிய வலியை தரும்.
'எனவே தான், ஸ்கூட்டியில் எப்போதும், இரண்டு செட் துணிகள் தயாராக வைத்திருப்பேன். பயணிக்கும் போது, சாலை விபத்தில் ஆடைகள் கிழிந்து தவிப்போரின் மானத்தை காப்பாற்ற, இந்த துணிகளை தந்து உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்...' என்றார்.
மானம் காக்க, மனிதாபிமானத்துடன் உதவும் உறவினர் மகளை, மனதார பாராட்டினோம்!
— வெ.பாலமுருகன், திருச்சி.