PUBLISHED ON : பிப் 18, 2024

உங்கள் அடையாளத்தை
சூட்டிய பெயரிலோ
பரம்பரை சொத்திலோ
படித்த படிப்பிலோ
வைக்காதீர்...
கனிவோடு செய்கிற
சேவைகளில் வைத்திடுங்கள்!
உங்கள் அடையாளத்தை
வசித்த இடத்திலோ
வாங்கிய பதக்கங்களிலோ
இருக்கிற சேமிப்பிலோ
வைக்காதீர்...
இல்லாதோர் மீதான
இரக்கத்தில் வைத்திடுங்கள்!
உங்கள் அடையாளத்தைநிறைந்த திறமையிலோ
அடைந்த புகழிலோ
ஈட்டிய வாழ்த்துக்களிலோ
வைக்காதீர்...
தடுமாற்றம் இல்லாத
நேர்மையில் வைத்திடுங்கள்!
உங்கள் அடையாளத்தைவகித்த பதவிகளிலோ
சூழும் சுற்றங்களிலோ
தொடரும் வாரிசுகளிலோ
வைக்காதீர்...
வாக்கில் நிலைக்கும்
உண்மையில் வைத்திடுங்கள்!
உங்கள் அடையாளத்தைகிடைத்த அதிகாரத்திலோ
எழும்பும் சிலைகளிலோ
சேர்ந்திடும் பட்டங்களிலோ
வைக்காதீர்...
மனதில் உறையும்
மனிதாபிமானத்தில் வைத்திடுங்கள்!
உங்கள் அடையாளத்தைஅச்சுறுத்தும் கோபத்திலோ
அளவில்லா அடக்குமுறையிலோ
கருணையில்லா அதிரடியிலோ
வைக்காதீர்...
அன்பினால் பூத்திடும்
புன்னகையில் வைத்திடுங்கள்!
— ஆர்.செந்தில்குமார், மதுரை.