sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பாரதியின் கண்ணம்மாள்!

/

பாரதியின் கண்ணம்மாள்!

பாரதியின் கண்ணம்மாள்!

பாரதியின் கண்ணம்மாள்!


PUBLISHED ON : பிப் 18, 2024

Google News

PUBLISHED ON : பிப் 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழா சரியான நேரத்தில் முடிந்தது. வசுமதியால் தான் அங்கிருந்து சட்டென்று வெளியேற முடியவில்லை. அறிமுகமானவர்கள், புது நபர் என்று ஒவ்வொருவராக வந்து பேசினர். செல்பி, மொபைல் நம்பரை பகிர்ந்து கொள்ளுதல் என்று சம்பிரதாயங்கள் முடிந்து, இரண்டாவது தளத்திலிருந்து கீழே வருவதற்குள் இரவு, 10:00 மணி ஆகி விட்டது.

வெடிச்சத்தம் கேட்டு ஒரே நேரத்தில், பறந்து சென்ற பறவைகளைப் போல கீழ்தளம் வெறிச்சோடிப் போயிருந்தது. விசில் ஊதியபடி அருகில் வந்தார், செக்யூரிட்டி.

''ஆட்டோ, 'புக்' பண்ணி இருக்கேன். அஞ்சு நிமிஷத்துல வந்துரும்,'' என சொல்லி, டாக்சி, ஆட்டோ என்று, மாறி மாறி முயற்சித்தாள், வசுமதி.

ம்ஹூம் எல்லாமே, 'புக்' ஆகி, 'கேன்சல்' ஆனது.

பொறுத்து பார்த்த செக்யூரிட்டி, சலிப்போடு இவள் அருகில் வந்து, ''மணி, 10:30 ஆகப் போகுதும்மா. கேட்டை பூட்டணும் கிளம்பறீங்களா?'' என்றார்.

கேட்டை கடந்து ரோட்டிற்கு வந்தாள். வாகனங்கள் இன்றி, சாலை வெறிச்சோடி இருந்தது. மொழி தெரியாத அந்நிய தேசத்துக்குள் நுழைந்ததும், விக்கித்து நின்றாள்.

ஆட்டோவும், 'புக்' ஆகவில்லை. பஸ்சில் போகலாமென்றால் இந்நேரத்துக்கு பஸ் சர்வீஸ் இருக்காது. இங்கிருந்து வீட்டுக்கு எப்படி போவது?

காணவில்லை என்று யாரும் தேடப் போவதில்லை. இவளை தேவையில்லாத ஒரு பொருளாகத்தான் அந்த வீட்டார் எண்ணுகின்றனர். காற்றில் உதிர்ந்து இலக்கற்று பறக்கும் இலையைப் போல, வாழாமல் மிச்சமிருந்த வாழ்க்கையை எண்ணி, வசுமதியின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஒருகாலத்தில், வசு, வாசு, மதி, வசும்மா இப்படி விதவிதமான செல்லப் பெயர்களில் அழைத்தனர். வசுமதியை, குடும்பமே தலையில் வைத்து கொண்டாடியது. பொக்கிஷம் போல் அவளை பாதுகாத்தனர்.

'வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், வசுக்கு இந்த கலர் ரொம்ப எடுப்பா இருக்கும்...' என்று அம்மாவும், 'அவளுக்கு ப்ளூ கலர் தான் ரொம்ப பிடிக்கும்...' என்று அப்பாவும், 'வசுமதி கலருக்கு, அடர் கரும்பச்சை நிறம் அழகா இருக்கும்...' என்பார், பாட்டி.

'அவளுக்கு, ஒரு செயின் வாங்கிட்டு வந்தேன். இதை அவளுக்கு போட்டு விடுங்க...' என்பார், மாமா.

இப்படி அனைவரும், அவளை தாங்கி கொண்டாடியதை நினைத்தால், நிலவை தரையில் வீழ்த்தும் ஒளியைப் போல, அவளின் கடந்த காலத்தை கண் முன் நிறுத்தியது.

ரகசியங்கள் என்று மனதில் புதைந்து கிடந்த வடுக்கள், வேதனைகள் அனைத்தும் இதுபோன்ற மேடைகளில் பேசும்போது, மலரத் துவங்கி விடுகிறது. மனமும் சற்று லேசானது போல் தோன்றும். அதற்காகவே இலக்கியக் கூட்டங்களில் பேச ஒப்புக் கொள்கிறாள்.

சாலையின் இருபுறமும் பார்த்தவளின் கண்களுக்கு, துாரத்தில் மஞ்சள் ஊர்தி ஒன்று வருவது தெரிந்தது. மாலைக்கண் நோய் தாக்கியவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தோன்றும் என்பர். அப்படித்தான் அந்த மஞ்சள் குவியல் கிட்ட நெருங்க நெருங்க, அது ஒரு ஆட்டோ. பட்டென்று குறுக்கே சென்று, கைகளை அசைத்தாள்.

வேகமாகச் சென்ற ஆட்டோ, சற்றுத் தள்ளி, 'பிரேக்'கிட்டு நின்றது.

''அண்ணே, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுகிட்ட இறக்கி விடுறீங்களா?''

ஆட்டோ உள்ளிருந்து, ''அட வசுவா... இங்க என்ன பண்ற?'' என்று கேட்டாள், மாமி.

''மாமி, நீங்களா... எங்க போறீங்க?'' என கேட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

''சுதா வீட்டுக்கு போயிட்டு வரேன். வசு, நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?'' என்றாள், மாமி.

''என்ன கேள்விப்பட்டீங்க?''

''ஒண்ணும் இல்லடி, உன் புருஷன் விசுவ, 'டைவர்ஸ்' பண்ணிட்டியாமே... அவனுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சாமே... உண்மையா?''

''ஆமாம் மாமி.''

''இந்த கொடுமையை எங்க போய் சொல்றது. கட்டிக்கிட்டு போய் ரெண்டு வருஷம் கூட வாழல, அதுக்குள்ள உனக்கு என்னடி இவ்வளவு அவசரம். நல்லவனோ, கெட்டவனோ அவன் கூட வாழ்வது தானே ஒரு பொண்ணுக்கு அழகு. நாங்களெல்லாம் இத்தனை வருஷமா...''

''போதும் மாமி... இதுக்கு மேல ஒண்ணும் சொல்லாதீங்க. இப்படி சொல்லி சொல்லியே என் வாழ்க்கையை பாழ் பண்ணிட்டீங்க. யாரு கேட்டா இந்த வாழ்க்கையை... படிக்கணும், பெரிய ஆளாகணும், சம்பாதிக்கணும்ன்னு, எவ்வளவு கனவுகளோடு இருந்தேன் தெரியுமா... என் வாழ்க்கையை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்களே.''

''இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலடி, நீ அவனோட போய் வாழறது தான் உனக்கு நல்லது,'' என்றாள், மாமி.

''மாமி... இப்ப கூட, கூட்டத்துல பெண் சுதந்திரம், விடுதலை பற்றி தான் பேசிட்டு வரேன். ஆனால், அந்த விடுதலை, உங்களுக்கும், எனக்கும் கிடைத்ததைக் கூட உணராமல் தானே வாழ்ந்துகிட்டு இருக்கோம்,'' என்றாள், வசுமதி.

''அப்படி என்னதான் பண்ணினான், விஸ்வநாதன். அவனை இப்படி ஒரேடியா தள்ளி வச்சுட்டு வந்துட்ட?''

''ஒரு விஷயத்தை நல்லா கேட்டுக்கங்க மாமி... பாட்டியோட கடைசி ஆசைன்னு, என் அத்தை பையன் விசுவையே, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... இந்த கல்யாணத்துல, எங்க ரெண்டு பேருக்குமே விருப்பமில்லேன்னு எத்தனையோ முறை சொன்னோம்.

''அவன் ஒரு பொண்ணை விரும்புறதா சொல்லியும், காதுல வாங்காம, எங்களை மிரட்டி, உருட்டி, கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டு போய் சேர்ந்துட்டா, பாட்டி. கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு பெத்த பிள்ளைங்ககிட்ட கேட்கணுமா வேண்டாமா?''

''எதுக்கு கேட்கணும்... நல்லது எது, கெட்டது எதுன்னு பெத்தவங்களுக்கு தெரியாதா?''

''ம்... விசுவுக்கு, அவர் காதலிச்சப் பொண்ணு கிடைக்கலையேன்னு வருத்தம். கல்யாணத்துக்கு முன்பே தன் காதலைச் சொல்ல முடியாத கோழை. அதனால், என் வாழ்க்கையும் சேர்ந்து அழிந்து போனது.

''அவருக்கு, அவர் காதல் முக்கியம் என்றால், எனக்கு, என்னுடைய குறிக்கோள், லட்சியம் நிறைவேறவில்லையே என்ற கவலை. அந்தப் பொண்ண நெனச்சு சதா புலம்பிக்கிட்டே இருந்தார், விசு. என் படிப்பு, வேலைன்னு சதா அலைஞ்சுக்கிட்டு இருந்தேன், நான்.''

''மனச மாத்திக்கிட்டு அவன் கூட சேர்ந்து வாழ வேண்டியது தானே?''

''அப்படியெல்லாம் வாழ முடியாது, மாமி. இதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம். கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் அந்த காலம். இப்போ கல்யாணத்துக்கு முன்ன பேசி, புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கிறாங்க.

''புரிதல் உள்ள வாழ்க்கை தான் நல்லா இருக்கும். அவர் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டுமேன்னு, நான் விலகிட்டேன். தங்களுடைய ஆசைக்காக பெத்த பிள்ளைகளையே பலி கொடுக்கிற பெற்றோர்கள் இருக்கிற வரைக்கும் ஊரும் உருப்படாது; இந்த நாடும் உருப்படாது.''

''சரியா சொன்னீங்கம்மா... உங்கள மாதிரி பகுத்தறிவோடு நாலு பேர் இருந்தாலே போதும். பெண்களுக்கு, விடுதலை தானா கிடைக்கும். பெண்களை வெறும் போகப் பொருளா நடத்துற இந்த உலகத்தை, பெண்களால் மட்டும் தான் மாற்றியமைக்க முடியும்.

''அதுமட்டுமில்ல, 'பெண்களிடம் கரண்டியை பிடிங்கிட்டு புத்தகத்தை கொடுங்கள்...' என்று சொன்னார், ஈ.வெ.ரா., அவர் சொன்னபடி ஒவ்வொரு பெண்ணிடமும் நல்ல புத்தகங்களை கொடுத்தால், அவர்கள் சாதிக்கத் துவங்கி விடுவர்...'' என்று, தன் பங்குக்கு பேசினார், ஆட்டோ ஓட்டுநர்.

இவள் உடல் சிலிர்த்தது.

ஆண் -- பெண் விடுதலையைப் பற்றி பேசியதை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

''என்னம்மா அப்படி பார்க்கறீங்க... என் கல்யாணமும் காதல் கல்யாணம் தான். என் மனைவியும் ஆட்டோ தான் ஓட்டுறாங்க. ரெண்டு பேருக்குமே காக்கி யூனிபார்ம் தான். உடை மட்டுமல்ல, உள்ளமும் ஒன்றாகும் போது தான் காதல் மலரும். வாழ்க்கையும் சிறக்கும்.''

''சூப்பர்... சரியா சொன்னீங்க அண்ணே.''

''காலம் ரொம்பவே கெட்டு கிடக்கு. யாரை சொல்லி என்னாகப் போகுது. ஏம்பா, எங்க வீடு இங்க தான். ஓரமா நிறுத்திக்கோ. நான் இறங்கிக்கறேன்,'' என்றாள், மாமி.

ஆட்டோவிலிருந்து இறங்கிய மாமி, திரும்பிப் பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

சற்று துாரம் சென்றதும், வேகம் குறைந்து ஆட்டோ நின்றது.

''என்னாச்சுன்னு தெரியலையே, கொஞ்சம் இருங்கம்மா பார்க்கறேன்,'' என்றார், ஆட்டோ ஓட்டுநர்.

இவளும் ஆட்டோவை விட்டு கீழே இறங்கினாள். ஒரு கார் இவர்களைக் கடந்து சென்றது.

சற்று நேரத்தில் வசுமதியின் மொபைல்போன் ஒலித்தது. போனை உயிர்ப்பித்தவளுக்கு அந்த பெயரை பார்த்தவுடன், காற்று இறங்கிய பலுானைப் போல் மொத்த, 'எனர்ஜி'யும் இறங்கியது.

'ப்ச்... இவன் எதுக்கு இந்த நேரத்துக்கு போன் பண்றான்...' என்று, வெறுப்புடன் பேசினாள்.

''ஹலோ வசுமதி, நான் சங்கர் பேசறேன். ஒரு ஆட்டோ பக்கத்துல, நீ நிற்கிறதை பார்த்தேன். 'எனி ஹெல்ப்' கார்ல தான் இருக்கேன். போற வழியில, உன்னை உங்க வீட்ல, 'டிராப்' பண்ணவா... ஹலோ வசுமதி, லைன்ல இருக்கியா?''

அவன் குரல் கேட்ட அடுத்த நொடி, கோபம் தலைக்கேறியது.

''ம்... சொல்லு?'' என்றாள், வசுமதி.

''வசு, உன் வழிதான், 'க்ளியர்' ஆயிடிச்சே... அதாவது, உன் வாழ்க்கையை சொல்றேன். இனிமேலாவது உன்னை, 'பிரபோஸ்' பண்ணலாம்ன்னு நினைக்கிறேன். உன்னை, நடுரோட்டுல பார்த்துட்டு விட்டுட்டு போக மனசு வரலை. வேணும்ன்னா காரை திருப்பிட்டு வரவா?'' என்றான், சங்கர்.

''நோ தேங்க்ஸ்... சங்கர், ஒரு விஷயத்தை நல்லா மனசுல வச்சுக்கோ. ஒரு பொண்ணு, புருஷன் வேண்டாம்ன்னு அவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்க மாட்டாள். ஏன்னா, ஒரு பெண்ணால தனித்து வாழ முடியாது, வாழவும் கூடாதுன்னு நம் சமுதாயம் கட்டமைத்து வச்சிருக்கு.

''அதையும் மீறி விட்டுட்டு வரான்னா, மன ரீதியா அவள் எவ்வளவு காயப்பட்டிருப்பாள்ன்னு நினைச்சு பாரு. மேலோட்டமா பார்த்தா, எல்லாமே சாதாரணமாத்தான் இருக்கும். காயம்பட்டவங்களுக்குத்தான் வலி என்னன்னு தெரியும்,'' என்றாள், வசுமதி.

''அதுக்காக... ஆண் துணையில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்துட முடியுமா?'' என்றான், சங்கர்.

''அதை நான் தான் தீர்மானிக்கணும். ஆண் துணையில்லாம ஒரு பெண்ணால வாழ முடியாதுன்னு சொல்லுறத முதல்ல நிறுத்து. கல்வி அறிவு இல்லாத காலத்துல, அப்படித்தான் வாழ்ந்தாங்க. ஆனா, இப்ப அப்படி இல்லை.

''கல்வி, இரு பாலினருக்கும் மிக முக்கியம். அதுவும் பெண்களுக்கு, கல்வி கண் போன்றது. அது கிடைச்சுட்டாலே பகுத்தறிவு தானா வந்துடும். இப்போ நான் பகுத்தறிவோட சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன்.

''என் வாழ்க்கையை வாழபோறது நான். நீ இல்லை. எனக்கு நீ தேவையில்லைன்னு சொல்றது என்னுடைய தன்னம்பிக்கை, மன உறுதி. புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.''

''வசு, நீ என்ன சொல்ல வர்ற?''

''சங்கர், நட்பு என்னைக்கும் காதலா மாறாது. ஆனா, அப்படி ஒரு எண்ணம் எப்போ உன் மனசுல வந்துச்சோ, அப்பவே நாம விலகிட்டோம். எதிர் எதிர் திசையில போய்கிட்டு இருக்கிற நாம எப்பவுமே ஒன்னா பயணிக்க முடியாது.

''முடிஞ்சா பெண்களை மதிக்க கத்துக்கோ. உனக்கு வரப்போற மனைவியை, சக தோழியாய் நடத்து. சமுதாயம் உன்னை மதிக்கும்,'' என்று போனை, 'கட்' பண்ணிய மறு நொடி, ஆட்டோ, 'ஸ்டார்ட்' ஆனது.

''அம்மா பிராப்ளம் சரியாயிடுச்சும்மா...'' என்றார், ஆட்டோ ஓட்டுநர்.

தெளிந்த முகத்தோடு ஆட்டோவில் ஏறினாள், வசுமதி.

அவள் மனதைப் போலவே, சாலையும் அமைதியாக இருந்தது.

டெய்சி மாறன்






      Dinamalar
      Follow us