
க. அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
முதல்வராக இருந்த சமயம், நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார், காமராஜர். வழியில் இருந்த ஒரு கிராமத்துக்கு சென்று, குறை கேட்டார்.
'பக்கத்து ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்து விட்டது. எங்கள் ஊருக்கு மட்டும் மின்சாரம் கிடைக்கவில்லை...' என்றனர், கிராம மக்கள்.
தன் அருகில் இருந்த மாவட்ட கலெக்டரை பார்த்தார், காமராஜர்.
'சிமென்ட் கம்பம் கைவசம் இல்லாததால் இவங்க ஊருக்கு, 'லைன்' தர முடியவில்லை...' என்றார், கலெக்டர்.
'பனங்கட்டையை ஊன்றி ஒயரை இழுங்கள். போஸ்ட் வந்தப்புறம் அதை மாத்திடலாம்...' என்றார், அருகில் இருந்த ஒருவர்.
உடனே, அந்த மனிதரை அருகில் அழைத்து, தோளில் தட்டிக் கொடுத்து, 'இவர் யோசனை சரிதானே! உடனே அதை செய்யுங்க...' என, கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார், காமராஜர். அவ்வாறே செய்யப்பட்டது.
அக்கிராமம் மட்டுமல்ல, தமிழகத்தின் பல கிராமங்களுக்கும், மின்னொளி தந்த முதல்வர் என பாராட்டினர்.
கடந்த, 1933ல், நெல்லை கணபதி விலாசில், 'வள்ளித் திருமணம்' என்ற நாடகத்தை துவக்க இருந்தார், தியாகி விசுவநாத தாஸ். அவரை உளவு பார்த்து, தேச விடுதலையை துாண்டும் விதத்தில் பேசினால், கைது செய்ய காத்திருந்தனர், போலீசார்.
தாஸ் வராததால், அவரது மகன் நடிக்கிறார் என அறிவிக்க, போலீசார் போய் படுத்துக் கொண்டனர்.
மகனின் பெயரிலேயே வந்து முருகனாக நடித்தும், 'விரட்ட விரட்ட வரும் வெக்கங்கெட்ட கொக்குகளா?' என்று ஆரம்பிக்கும், 'கொக்கு பறக்குதடி பாப்பா' என்ற ஆங்கிலேயரை அவமதிக்கும் பாடலை ஆரவாரமாகப் பாடினார், தாஸ்.
உடனே, கைது செய்து, 'இனி நாடகங்களில், பாடல்களை பாட மாட்டேன் என எழுதி கொடுத்தால், விடுதலை செய்கிறோம்...' என்றது, ஆங்கிலேய அரசு.
'நான் எழுதி தர மாட்டேன். பாடுவது என் சுதந்திரம், கைது செய்வது உங்கள் பணி. சுதந்திரம் பெறும் வரை, என் பாடல் தொடரும். உங்கள் கைது நடவடிக்கையும் தொடரட்டும்...' என்றார், தாஸ்.
ஒரு சமயம் அமைச்சர் குழுவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். பேச்சின் இடையே ஒருமுறை எழுந்து பாத்ரூம் போனார். அச்சமயம் அவரது கைக்குட்டை மேஜை மேல் இருந்தது.
சர்ச்சிலின் கைக்குட்டையில், அவசரம் அவசரமாக ஒரு கழுதையின் முகத்தை வரைந்து, அதை இருந்த இடத்திலேயே வைத்து விட்டார், சர்ச்சிலை விரும்பாத ஒருவர்.
பாத்ரூமில் இருந்து தன் இருக்கைக்கு வந்த சர்ச்சில், கைக்குட்டையில் இருந்த படத்தை கவனித்து விட்டார். இதை யார் செய்திருப்பர் என்பதை யூகித்த சர்ச்சில், கைக்குட்டையை அந்த நபரிடம் காட்டி, 'நீங்கள் உங்க முகத்தை இந்த கைக்குட்டையில் துடைச்சீங்களா?' என்று நகைச்சுவையாக கேட்டார்.
கழுதையின் முகத்தை வரைந்த அந்த நபரின் முகத்தில் அசடு வழிந்தது.
- நடுத்தெரு நாராயணன்