sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வாழ்க்கை வாழ்வதற்கே!

/

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!


PUBLISHED ON : பிப் 25, 2024

Google News

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசல் படியில் கால் நீட்டி உட்காந்திருந்தார், பரமசிவம். வயது, 80ஐ நெருங்கப் போகிறது. அவர் மனைவி ஜானகிக்கு, 75. இருவருமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அந்த காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு வீடுகள். அதில் ஒன்றில் இவர்கள் இருக்க, அடுத்த வீட்டில் வங்கியில் வேலை பார்க்கும், விஸ்வநாதன் இருந்தார்.

பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. கதவைத் திறந்து, பள்ளி சீருடையில் வெளி வந்தாள், விஸ்வநாதனின் ஒரே மகள், ஆர்த்தி. உதட்டில் லேசான புன்னகையோடு, பதில் பேசாமல் போனாள்.

எப்போதும் பரமசிவத்தை பார்த்தால், 'குட்மார்னிங் தாத்தா. டிபன் சாப்பிட்டாச்சா...' என்று, அன்பாக விசாரிப்பாள். அவரும், 'தேர்வு நல்லா எழுது, ஆர்த்தி. ஆல் தி பெஸ்ட்...' என்பார்.

நான்கு நாட்களாக பார்க்காமல், நடந்து செல்வதைக் கவனித்தார்.

'ஒருவேளை தேர்வு, 'டென்ஷன்' ஆக இருக்கலாம்...' என, நினைத்துக் கொண்டார், பரமசிவம்.

மோர் செம்புடன் வந்த ஜானகி, அதை கணவரிடம் கொடுத்து, ''மதியம் என்ன செய்யட்டும்,'' என்றாள்.

''ரசமும், கீரையும் போதும் ஜானகி. நீயும் உட்கார். சமையலுக்கு இப்ப என்ன அவசரம்?'' என்றார், பரமசிவம்.

பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்த விஸ்வநாதனின் மனைவி, வீட்டு வாசல்படியில் நின்றவாறே, ''அம்மா, இன்னைக்கு சமைக்க வேண்டாம். சாதம் மட்டும் வச்சுக்கங்க. அப்பாவுக்கு பிடிக்குமேன்னு, அவியலும், காரக்குழம்பும் செய்திருக்கேன். கொண்டு வந்து தரேன்,'' என்றாள்.

வயதான காலத்தில் தனியாக இருப்பவர்களுக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக இருப்பது, ஆறுதலாக இருந்தது.

'அப்பாடா, பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்டது. ஒரு மாதமாக வீட்டுப்பக்கம் வரவில்லை, ஆர்த்தி. இனிமேல் வருவாள்...' என, நினைத்து கொண்டார், பரமசிவம்.

அச்சமயம், ஆர்த்தியின் தோழி அகல்யா வர, ''இங்கே வாம்மா, பரீட்சை முடிஞ்சுடுச்சா... ஆர்த்தி, வீட்டை விட்டே வெளியே வரலை. பரீட்சை நல்லா எழுதியிருக்கீங்களா?'' என்றார், பரமசிவம்.

''ஆமாம் தாத்தா. ஆர்த்தி, ரொம்பவே பயந்து போயிருக்கா. இங்கிலீஷ், மேக்ஸ் பேப்பர் எல்லாம், அவளுக்கு கஷ்டமாக இருந்துச்சாம். 'ரிசல்ட்' எப்படி வரும்ன்னு தெரியலேன்னு புலம்பினாள். ரொம்ப, 'டல்'லா இருந்தா. சினிமாவுக்குக் கூப்பிட்டேன், வரலேன்னு சொல்லிட்டா. நான் வரேன் தாத்தா,'' என்றாள், அகல்யா.

அவள் கிளம்பி செல்ல, யோசனையில் ஆழ்ந்தார், பரமசிவம்.

அன்று வெள்ளிக்கிழமை...

விஸ்வநாதனை கூப்பிட்டு, ''பக்கத்தில் இருக்கிற குமரன் கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம். துணைக்கு, ஆர்த்தியை அழைச்சுட்டு போகட்டுமா. வீட்டில் தானே இருக்கா?'' என்றார், பரமசிவம்.

''தாராளமாக கூட்டிட்டு போங்க. தேர்வு முடிஞ்சதிலிருந்து வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கா,'' என்றார், விஸ்வநாதன்.

ஆட்டோ வர, பரமசிவம், ஜானகி மற்றும் ஆர்த்தி மூவரும் கிளம்பினர்.

''ஆர்த்தி எப்ப வெளியே போனாலும், 'பளிச்'னு டிரஸ் பண்ணிட்டு அழகா வருவே. என் கண்ணே பட்டுடும்ன்னு நினைப்பேன். இன்னைக்கு பழைய மலர்ச்சி உன்கிட்ட இல்லையே... உடம்பு ஏதும் முடியலயாம்மா?'' வாஞ்சையுடன் கேட்டார், ஜானகி.

''அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நல்லா தான் இருக்கேன்,'' என, அவள் பதில் சொல்ல, அமைதியாக இருந்தார், பரமசிவம்.

அருள் முகத்துடன் காட்சி தரும் முருகனை, மனதார கும்பிட்டபடியே சன்னிதியைச் சுற்றி வெளியே வந்தனர்.

''ஆர்த்தி, அதோ அந்த மர நிழலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம் வாம்மா,'' என்றார், பரமசிவம்.

மறுக்க முடியாமல் அவர்களுடன் உட்கார்ந்தாள், ஆர்த்தி.

''ஆர்த்தி, இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு. எனக்கு, 80வது வயது வரப்போகுது.''

''அப்படியா தாத்தா...'' சுவாரசியமில்லாமல் பதில் சொன்னாள், ஆர்த்தி.

''எனக்கும், பாட்டிக்கும் கல்யாணம் ஆனபோது, என் வயசு: 20, பாட்டிக்கு, 15. உலகம் தெரியாத வயதில், கல்யாண வாழ்க்கை நகர்ந்தது. எனக்கு, 30 வயது ஆன பிறகும், குழந்தை பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கலை.

''அந்தக் காலத்தில், இப்ப இருக்கிற மாதிரியான மருத்துவ வசதி இல்லை. கடவுளை சரணடைந்தோம். அவரும் மனசு வைக்கலை. வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம். எங்க மனசை மாத்திக்கிட்டோம்.

''எங்கள் வருமானத்தில், செலவு போக கிடைத்த சேமிப்பை, ஏழை பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்தோம். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருப்பவர்களோடு பண்டிகையை கொண்டாடினோம்.

''மனசுங்கிறது எப்போதும் நமக்கு நல்லதையும், தைரியத்தையும் சொல்லணும், ஆர்த்தி. தப்பான ஆலோசனையையும், பயத்தையும் உண்டாக்கக் கூடாது. மனசு, நமக்கு நண்பனாக இருக்கிற வரை எப்பேர்பட்ட பிரச்னையையும் சாமாளித்து, அதிலிருந்து வெளிவர முடியும்.

''இதோ இப்ப வரைக்கும், வாழ்க்கையில் குறைகளை தள்ளி வச்சு, நிறைகளை மட்டுமே பார்த்து, சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கோம். கஷ்டம், துயரம், தோல்வி இதெல்லாம் வாழ்க்கையின் இயல்பு. அதிலிருந்து வெளியே வரணும்ங்கிற வெறி எப்போதும் நம்மிடம் இருக்கணும்.

''உன்கிட்ட மனசு விட்டு பேசணும்ன்னு தோணிச்சு. அதான் சொன்னேன். இதை நீ, என் வாழ்க்கை அனுபவமாக எடுத்துக்க. 'அட்வைஸா' நினைக்காத. நீ, என் பேத்தி. தாத்தான்னு அன்பாக அழைக்கும்போது, எனக்கு அப்படித்தான் நினைக்க தோணுது,'' என்றார், பரமசிவம்.

அவள் முகத்தில் தெளிவு பிறப்பதைப் பார்த்தார்.

''தேர்வு எப்படி எழுதிருக்க ஆர்த்தி?''

''பரவாயில்லை தாத்தா. 'ரிசல்ட்' வரட்டும் பார்ப்போம்.''

''படிப்புங்கிறது நம் அறிவை வளத்துக்கத் தானே தவிர, அதுவே நம் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடாது. படிப்பு, உன் அறிவைப் பெருக்கி, வாழ்க்கையில் முன்னேற உதவட்டும். முருகன் சன்னிதியில் வைத்து, இந்த தாத்தா, பேத்திக்கு ஆசீர்வாதம் பண்றேன்,'' என்றார்.

''இன்னைக்கு, உங்களோட கோவிலுக்கு வந்தது, தாத்தாவோட பேசியது, மனதுக்கு புது உற்சாகத்தையும், தைரியத்தையும் கொடுத்திருக்கு, பாட்டி. இன்னைக்கு சாயந்திரம், என் கையால, 'ஸ்வீட்' செய்து, இரண்டு பேருக்கும் தரப் போறேன்,'' உற்சாகக் குரலில் சொன்னாள், ஆர்த்தி.

முகம் மலர, அவளை பார்த்து சிரித்தார், பரமசிவம்.

- பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us