
அன்பு சகோதரிக்கு -
என் வயது: 52, கணவர் வயது: 60. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
எங்களுக்கு ஒரே மகன். கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறான். நன்றாக படிக்கக் கூடியவன். பொறுமைசாலி, எல்லாரிடமும் மரியாதையாக பழகுவான். தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை, இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளான்.
எதற்கெடுத்தாலும், 'இதை செய்யாதே... அதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும்...' என்று, 'அட்வைஸ்' செய்வாளாம், அந்த பெண். எதைப் பற்றியும் தன்னிச்சையாக இவனை சிந்திக்க விடாமல், தன் கருத்தை திணிப்பதிலேயே குறிப்பாக இருந்துள்ளாள்.
இது, அவனுக்கு, 'டார்ச்சர்' ஆக இருக்க, 'என் பெற்றோருக்கு, நம் காதல் விஷயம் தெரிந்து, பிரச்னையாகி விட்டது. எனவே, நாம் பிரிந்து விடலாம்...' என்று, கூறியுள்ளான்.
ஆனால், அந்த பெண், அதை ஏற்காமல், 'என்னை பிரிய நினைத்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்...' என்று, மிரட்டுகிறாளாம்.
இதையெல்லாம் என்னிடம் சொல்லி, 'அவளை எனக்கு பிடிக்கவில்லை...' என்று, அழுகிறான்.
'அந்த பெண்ணை அழைத்து வா. நான் பேசிப் பார்க்கிறேன்...' என்று கூறி, அனுப்பினேன்.
என் மகன் கூப்பிட்டதற்கு, 'அம்மாவும், மகனும் சேர்ந்து, 'டிராமா' ஆடுகிறீர்களா?' என்று பொரிந்து தள்ளியுள்ளாள்.
படிப்பில் கவனமில்லாமல் தடுமாறுகிறான், மகன்.
'அவள், எனக்கு வேண்டவே வேண்டாம்...' என்கிறான்.
இந்த பிரச்னையிலிருந்து அவனை எப்படி மீட்டெடுப்பது சகோதரி?
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு -
மகனின் காதலிக்கும், மகனுக்கும் சமமான வயது. மகன் என்ன படிக்கிறானோ, அதே தான் அவனின் காதலியும் படிக்கிறாள். இப்போதிருக்கும், இளைய தலைமுறை படித்த பெண்கள், தலைமைப் பண்பு உள்ளவர்கள். சமூகத்தை திருத்துவதற்கு முன், வருங்கால கணவரை திருத்த முயற்சிக்கின்றனர், அவ்வளவே!
நான்கு எதிர் வார்த்தைகள் பேசுகிறாள் என்பதற்காக, தன் காதலியை கை கழுவ துணியலாமா, மகன்?
மகனின் காதலி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது தப்பு தான். காதலியை விட்டுவிட்டு உன் மகன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான் என, வைத்துக் கொள்வோம்.
திருமணமாகி வரும் பெண், கணவரின் எதிர்மறை குணங்களை களைய, நான்கு ஆலோசனைகள் கூறுகிறாள் என்றால், தனித்தியங்க விட மாட்டேன் என்கிறாள் என கூறி, அவளை விவாகரத்து பண்ணி விடலாமா?
நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
மகனின் எதிர்மறை, நேர்மறை குணங்களை நடுநிலையாய் நின்று மதிப்பீடு செய். அறிவுரைகளும், ஆலோசனைகளும் இன்றி, சுயமாய் நடைபோட தெரிந்தவனா என பார். மகனின் காதலி சொல்லும் ஆலோசனைகள் என்னென்ன, அதெல்லாம் ஆக்கப்பூர்வமானவையா என, அலசி ஆராய்
இருவரின் திருமணம் நடந்தால் நிகழப்போகும் சாதக, பாதகங்களை பார். மகனின் காதலி, எந்த மதத்தை சார்ந்தவள், அவளின் குடும்பப் பின்னணி, காதல் திருமணத்துக்கு அவளின் பெற்றோர் ஒத்துக் கொள்வரா என, பார்
'படிப்பையும், காதலையும் போட்டு குழப்பாதே. உன் காதல் தோற்றாலும், ஜெயித்தாலும் நன்கு படித்து நல்லவேலைக்கு போய், உன் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்து...' என, மகனை மூளைச்சலவை செய்
மகனது காதலி பக்கம் நியாயம் இருந்தால், மகனின் கைகழுவும் மனோநிலையை மாற்று. படித்து முடித்து வேலைக்கு போகும் வரை, இந்த காதலை ஒத்தி வை எனக் கூறு
மகனின் காதலியை தனியே சந்தி. அவளின் உடல் மொழி, பேச்சு, நோக்கம் எல்லாம் நம்பிக்கையூட்டும் விதமாய் இருக்கிறதா என, பார்
அவள் உனக்கு மருமகளாக வரவேண்டும் என, நீ விரும்பினால், 'அம்மா, என் மகனுக்கு அதிக அறிவுரைகள் கூறி அவனை கலவரப்படுத்தாதே. திருமணம் வரை நைச்சியமாக காத்திரு. அதன்பின் காதுகளில் ரத்தம் வழிய வழிய பத்து கட்டளைகள் பிறப்பிக்கலாம்...' எனக் கூறு
'விளையாட்டுக்கு கூட தற்கொலை செய்து கொள்வேன் என, யாரையும், 'எமோஷனல் பிளாக்மெயில்' பண்ணாதே. இந்த காதல் தோற்றால் கூட, கடவுள் வேறு, 99 கதவுகள் திறந்து வைத்திருப்பான். யதார்த்தமாக இரு. என் வழி காட்டலுக்கும் அடங்காமல், மகன் உன் காதலை கத்தரிக்கிறான் என்றால், 'போடா நீயும், உன் காதலும்...' என, அவனை துாக்கி எறி...' என, அவளுக்கு அறிவுரை கூறு.
இருதரப்புக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறிவிட்டு, அமைதிபடு. அதன்பின் நடப்பதெல்லாம் இறைவன் காட்டிய வழி.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.