PUBLISHED ON : பிப் 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்பும், பாசமும் வெறும்
வார்த்தைகள் அல்ல
சமூக நல்லிணக்கம்
பற்றிடும் விழுதுகள்!
சக மனிதனை அழித்து
வாழ்வது, வாழ்க்கை அல்ல
சகோதர தன்மையோடு
வாழ்வதே சமத்துவம்!
கோவில் - பாவம் செய்து
பரிகாரம் தேடும் இடமல்ல
அகமும், புறமும் துாய்மை
தேடும், ஆன்மிக பள்ளி!
தீராத பகை உணர்வுடன்
வன்மம் காணும் பூமியல்ல
அகிம்சையும், அற வழியும்
முத்திரை பதித்த பூமி!
கருவறையில் பெண் சிசு
அழிக்கும் காலம் அல்ல
சரி நிகர் போற்றும் பெண்
வலிமை பெறும் காலம்!
அரசாட்சி தன்னலம்
ஈர்க்கும் பணியல்ல
நாட்டுக்கும், மக்களுக்கும்
நலன் காத்திடும் பணி!
மதம், இனம் வேற்றுமை
தீப்பொறியில் வீழ்வதல்ல
ஜனநாயக நீரோட்டத்தில்
கலந்த ஒரு தாய் மக்கள்!
மனிதன் சிறந்து வாழ
உழைப்பு வேண்டும்
மனிதம் நிலைத்து நிற்க
அர்ப்பணிப்பு வேண்டும்!
— வி. சுவாமிநாதன், சென்னை.