
பசிபிக் பெருங்கடலில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் எட்டு தீவுக் கூட்டங்கள் தான், ஹவாய். ஹவாய் தீவில், மஹானா பீச் எனப்படும், கடற்கரையின் மணல் முழுதும், பச்சை நிறத்தில் இருக்கும்.
உள்ளூர் மக்களால், 'பாப்பாகோலியா பீச்' அல்லது 'பச்சை மணல் பீச்' என, அழைக்கப்படும் இந்தக் கடற்கரை, ஹவாய் தீவின் தெற்கு முனையில் உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாவாசிகளிடம், ஹவாய் தீவு பிரபலமாக இருப்பதற்கு, இந்தக் கடற்கரையும் ஒரு காரணம். உலகில் இதுபோல் பச்சை நிற மணல் இருக்கும் கடற்கரை, நான்கு மட்டுமே உள்ளன. அதில், ஒன்று மஹானா பீச்.
இந்த மணலில், 'ஒலிவின்' என்ற மதிப்புமிக்க கற்கள் இருப்பதால் தான், இப்படி பச்சை நிறத்தில் இருக்கிறது.
பழங்கால எரிமலையான, 'மவுனா லோவா'வின் தென்மேற்குப் பகுதியில் இருந்து தான், இந்த ஒலிவின் துகள்கள் தோன்றுகின்றன. இதை, 'ஹவாய் வைரம்' என அழைக்கின்றனர்.
இந்தக் கடற்கரைக்கு அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது. 2.5 கி.மீ., துாரம் டிரெக்கிங் சென்றால் தான், அதன் அழகை ரசிக்க முடியும்.
கண்ணைக் கவரும் நிலப்பரப்புகளும், இயற்கை அதிசயங்களும் நிறைந்த ஹவாய் தீவிற்கு, மற்றொரு மகுடமாக இருக்கிறது, மஹானா கடற்கரை.
— ஜோல்னாபையன்