
முன்கதை சுருக்கம்: தனக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது, 'அசைன்மென்ட்' ஆன, கீழனுார் கோவிலிலிருந்து, கிருஷ்ணராஜால் கடத்தப்பட்ட நடராஜர் சிலையை வெற்றிகரமாக மீண்டும், அதே கோவிலில் சேர்த்தான், தனஞ்ஜெயன். இந்த பணியை செய்ய விடக்கூடாது என்று முட்டுக்கட்டைப் போட்ட, எதிரணியை சேர்ந்த விவேக், இதனால் கடும் கோபத்துக்கு ஆளானான். அடுத்த முறை, தனஞ்ஜெயனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
இரண்டாவது, 'அசைன்மென்ட்'டும் வெற்றிகரமாக நிறைவேறியதில் மிகவும் மகிழ்ந்து, தனஞ்ஜெயனை பாராட்டினாள், கார்த்திகா.
கலங்கிய கண்களோடு தனஞ்ஜெயனை ஏறிட்டாள், கார்த்திகா. ஸ்பீக்கர் போனில் பேசியதால், குமாரும், விவேக்கின் மிரட்டலை கேட்டிருந்தான். அவன் முகத்திலும் கலவரம்.
''மேடம், பயப்படாதீங்க. எப்படி இரண்டு தப்பை சரி செய்தோமோ, அதே மாதிரி, இனி வரப் போறதையும் சந்திச்சு, சரி செய்துக்குவோம்,'' என்று, ஆறுதலாக பேச்செடுத்தான், தனா.
''அதான், எப்படி தனஞ்ஜெயன்? இரண்டு விஷயத்துல ஜெயிச்சிட்டோம்கிறது சரி... மூணாவது, நிச்சயமா அப்படி இருக்காது. அவன், இரண்டு விஷயத்துல தோத்துட்டதால, பயங்கர வெறியில இருக்கான்.''
''அப்ப என்ன செய்யலாம்... இதோட போதும்ன்னு நிறுத்திக்குவோம்ன்னு சொல்றீங்களா?''
''இல்ல, நான் அப்படி சொல்ல வரலை. நாம ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும்ன்னு சொல்ல வந்தேன்.''
''எச்சரிக்கையா இருக்கறதால தானே இரண்டு விஷயத்துலயும் ஜெயிச்சோம்?''
''ஆமாம், இருந்தாலும்...''
''போதும். நீங்க, இனி எதுவும் பேசாம மூணாவது, 'அசைன்மென்டை' சொல்லுங்க. இப்ப நான் மட்டுமில்லை, இதோ என் நண்பன் குமாரும் கூட இருக்கான். நாம நம் வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இருப்போம்.''
''உங்க குடும்பத்துக்கு ஏதாவது?''
''அவன், அங்க தான் கை வைப்பான். எங்க வீட்டுல, எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லி, நான் எல்லாரையும் எச்சரிக்கையா இருக்கும்படி பண்ணிடறேன். நீங்க, மூணாவது, 'அசைன்மென்டை' சொல்லுங்க, மேடம்.''
''முதல்ல, அப்பாவை பார்த்து, நடராஜர் சிலை பத்திரமா கோவிலுக்கு போயிட்டதை சொல்வோம். அவரே, அந்த மூணாவது, 'அசைன்மென்டை' சொல்வார்.''
கார்த்திகா, காருக்குள்ளிருந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் காரை சில, 'டிவி' சேனல் வேன்கள் கடந்து சென்றன.
''சிலை விஷயம், 'டிவி'காரங்களுக்கு தெரிஞ்சிடுச்சி போல. அதான் போறாங்க,'' என்றான், குமார்.
''ஆமாம். நாம வீட்டுக்குள்ள நுழையும்போது, 'டிவி'யில செய்தி பரபரப்பா ஓடிட்டிருக்கும். இனிமே, கீழனுார் கோவிலை கையில பிடிக்க முடியாது.
''பெரிய விஷயமே, அந்த பாம்பு வந்து, சிலை மேல ஏறி படம் விரிச்சுக்கிட்டு நின்னது தான்,'' என்று தனஞ்ஜெயன் சொல்ல, பதிலுக்கு அவனை நன்றியோடு பார்த்தாள், கார்த்திகா.
விவேக்கின் பங்களாவில், கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார், அப்பா தாமோதர்.
அவர் எதிரே, கீழனுார் நடராஜர் சிலை திரும்பக் கிடைத்துவிட்ட செய்தி, 'டிவி'யில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, அவர் எதிரில் வந்து, தலை குனிந்து நின்றான், விவேக்.
அவனிடம் காட்டமாக, ''அடுத்து என்ன பண்ணப் போற?'' என்றார், தாமோதர்.
''தெரியலப்பா... அந்த கிருஷ்ணராஜ் என்ன, 'அசைன்மென்ட்' கொடுக்குறார்ன்னு பார்ப்போம்,'' என்றான், விவேக்.
''எதுவா இருந்தாலும், இந்த முறை நீ ஏமாந்துடக் கூடாது.''
''நிச்சயம் ஏமாற மாட்டேன். அதே சமயம், அந்த தனஞ்ஜெயனையும் நான் சும்மா விட மாட்டேன்.''
''அவன் ரொம்பவே புத்திசாலியா இருக்கான். ஆகையால், இனி அவன்கிட்ட பேசி, உன் மிரட்டலை எல்லாம் வெச்சுக்காத. அவன் அதை, 'ரெக்கார்ட்' பண்ணி, போலீசுக்கு அனுப்பினா நம்ம, 'சோஷியல் இமேஜ்' கெட்டுடும்.''
''ஒரு லாரியை விட்டு, 'ஹிட்' பண்ணி, கதையையே முடிச்சுடறேன்.''
''ரொம்ப பழைய டெக்னிக் வேற யோசி.''
''மொத்த குடும்பத்தையே கடத்திட்டு வந்துட்டா?''
''அதெல்லாம் குப்பையான, 'டிவி' சீரியல் டெக்னிக். அவன், அவங்களுக்கு, 'ட்ரேசிங் பஞ்ச்' கொடுத்திருந்தா... அவங்க செவ்வாய் கிரகத்துலயே இருந்தாலும், இன்சாட் காட்டிக் கொடுத்துடும்.''
''அப்படி எல்லாம் மிலிட்டரியில இருக்குற உளவாளிகளுக்கு தான் செய்வாங்க. இவங்களுக்கு அந்த, 'பஞ்ச் ஷூட்டர்' கிடைக்கறதெல்லாம் சாத்தியமே இல்லை, டாடி.''
''இப்படி எல்லாம், 'அண்டர் எஸ்டிமேட்' பண்ணாத. அந்த தனஞ்ஜெயன், சி.பி.ஐ., மற்றும் 'ரா'வுல இருக்க வேண்டியவன். அவனை எதிர்த்தெல்லாம் ஜெயிக்க முடியாது.''
''விலை பேசி பார்த்தேனே, மசியலையே!''
''அவன் இப்ப, 'ஹீரோ!' அப்படித்தான் நடந்துக்குவான். அவனை, 'ஜீரோ' ஆக்கிட்டா, தானா வழிக்கு வருவான்.''
''எப்படி டாட்?''
''முதல்ல அந்த மூணாவது, 'அசைன்மென்ட்' என்னன்னு தெரியட்டும்; பிறகு சொல்றேன். அதுவரை அமைதியா இருந்து, வேடிக்கை மட்டும் பார்...'' என்று, தாமோதர் அழுத்தத்தோடு சொல்லிச் சென்று விட, விவேக் முகத்தில் ஒரு சலிப்பு.
எதிரில் வந்து நின்ற தனஞ்ஜெயனை, தள்ளாடியபடியே எழுந்து, சில அடிகள் நடந்து வந்து, அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார், கிருஷ்ணராஜ்.
அவனுக்கும் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
''தனா, பெரிய புண்ணிய காரியம் பண்ணியிருக்க. எனக்கும், இப்ப மனசுல பாரம் குறைஞ்சு, ஒரு நிம்மதி உருவாகத் துவங்கியிருக்கு. ரொம்ப நன்றி உனக்கு,'' என்றார்.
''என் வேலைக்கு எதுக்கு சார் நன்றி? நீங்க, அடுத்த, 'அசைன்மென்டை' சொல்லுங்க சார்.''
''அடுத்த, 'அசைன்மென்ட்டா?' அது, வைக்கோல் போர்ல விழுந்துட்ட குண்டூசியை தேடுற மாதிரி ஒரு விஷயம். அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கே இல்லை. இருந்தாலும் சொல்றேன்.''
''சொல்லுங்க சார்... அந்த குண்டூசியை நான் எப்படியாவது கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.''
''என் பார்ட்னர் தாமோதர், நிச்சயமா, பெருசா எதாவது பண்ணுவான்.''
''பண்ணட்டும் சார்... அதையும் பார்ப்போம். நீங்க, 'அசைன்மென்டை' சொல்லுங்க.''
''சொல்றேன். அது ஒரு கொடுமையான துரோக கதை...'' என்று சொல்லத் துவங்கும்போதே, அவர் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
விசும்பியபடியே தொடர்ந்தார்...
''சாரதான்னு ஒரு, 'ஸ்டெனோ' என்கிட்ட வேலை பார்த்தா. தங்கமான பொண்ணு,'' என்றவர், கார்த்திகாவை பார்த்தார்.
அந்த பார்வை, உன்னை வைத்துக் கொண்டு பேச, கூச்சமாக உள்ளது போல் இருக்கவே, அவள், புரிந்தது போல விலகிக் கொண்டாள்.
''அந்த சாரதாவுக்கு என்ன சார்?''
''நான், 'கூல்ட்ரிங்ஸ்'ல மயக்க மருந்து கொடுத்து, அவளை மயக்கி, கெடுத்துட்டேன் தனா...'' என்று முடிப்பதற்குள், தொண்டை அடைத்துக் கொள்ள, தடுமாறினார்.
''புரியுது சார். அந்த சாரதா, அதனால, கர்ப்பவதி ஆயிட்டாங்க. ஆனா, நீங்க, கர்ப்பத்தை கலைச்சுட சொன்னீங்க. அவங்க மறுத்து, கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. நீங்க, முடியாதுன்னு சொல்லிட்டீங்க.
''அவங்க, ஒரு ஆண் குழந்தையை பெத்து, உங்க ஆபிஸ் வாசல்ல போட்டுட்டு, அடையார் ஆத்துல குதிச்சு, தற்கொலை செய்துகிட்டாங்க.
''நீங்க, அந்த குழந்தையை யாரும் பார்க்குறதுக்கு முன், துாக்கிட்டு போய் ஒரு குப்பைத் தொட்டியில் வீசி எறிஞ்சுட்டு போயிட்டீங்க. அந்த குழந்தையை பார்த்துட்டு, குப்பை அள்ள வந்த, 'கார்ப்பரேஷன் ஸ்வீப்பர்' போலீசுக்கு தகவல் சொன்னார்.
''கடைசியில, அது, அனாதை குழந்தைகள் இல்லத்துல சேர்க்கப்பட்டது. இதெல்லாம் பேப்பர்ல செய்தியாவும் வந்தது. கரெக்ட்டா சார்?'' என, மிக அழகாக வரிசைப்படுத்தி கேட்டு முடித்தான், தனஞ்ஜெயன்.
''நீ சொல்றது சரி. அப்ப, இதை எல்லாம் கார்த்திகா உனக்கு சொல்லிட்டாளா?''
''எஸ் சார்... இவ்வளவு விபரமா சொல்லலை. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். ஆனா, இப்ப உயிரோட இருக்கானா இல்லையான்னே தெரியாதுன்னு சொன்னாங்க. உங்க, 'ஸ்டெனோ'வை பற்றியும் சொன்னாங்க. அதை வெச்சே, நான் அதுக்கப்புறம் நடந்த எல்லாத்தையும் யூகிச்சேன்.''
''நீ ரொம்ப, 'ஷார்ப்'பா யோசிக்கிற, தனா. தைரியமும் நிறைய இருக்கு. உன்னை, நான் மனசார பாராட்டுறேன். இந்த மூணாவது, 'அசைன்மென்டை'யும் நீ, 'சக்சஸ் புல்'லா முடிச்சுட்டா, அதுதான் எனக்கு பெரிய வெற்றி.
''நான், சாரதாவை கொல்லாம கொன்னுட்டேன். அந்த பாவத்துக்கு, அவள் பிள்ளையை கண்டுபிடிச்சு, அவனுக்கு, என் சொத்தை எல்லாம் கொடுத்து, பரிகாரம் தேடிக்க விரும்பறேன்.
''எனக்கு பிறகு, கார்த்திகாவுக்கும் யாருமில்லை. தனக்கு, ஒரு அண்ணன் இருந்தா, அவளுக்கும், 'சப்போர்ட்டா' இருக்கும் இல்லையா?'' என, கண்ணீரை துடைத்தபடியே கேட்டார், கிருஷ்ணராஜ்.
''உண்மை தான். உங்க மகனை எப்படியாவது கண்டுபிடிக்கிறேன் சார். பை த பை... இது, எந்த ஆண்டுல நடந்ததுன்னு சொல்ல முடியுமா?''
''தாராளமா, டிசம்பர் 25, 1997ல், கிறிஸ்துமஸ் அன்னைக்கு தான், நான், என் மகனை குப்பை தொட்டியில் போட்டேன். அந்த நாள் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. அன்னைக்கு நடந்த கிறிஸ்துமஸ் விழாவுல கலந்துகிட்டதால, அந்த நாளை என்னால மறக்கவே முடியாது.''
''எந்த குப்பை தொட்டின்னு சொல்ல முடியுமா?''
''நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம்கிட்டன்னு நினைக்கிறேன். ஆனா, இப்ப அங்க அந்த குப்பை தொட்டி இல்லை. சாலை பராமரிப்பு பணி செய்யும்போது, அது போயிடிச்சு. எப்ப அந்த பக்கம் நான் கார்ல போனாலும் பார்த்துக்கிட்டே போவேன்.''
''குப்பை தொட்டியில் குழந்தைன்னா, நிச்சயம் செய்தியில எல்லாம் வந்திருக்குமே?''
''ஆமா... மறுநாள், எல்லா பத்திரிகையிலும் செய்தி வந்தது. ஒரு 'கார்ப்பரேஷன் ஸ்வீப்பர்' எடுத்துக்கிட்டு போய் போலீஸ்ல ஒப்படைக்க, அவங்க, அனாதை இல்லத்துல சேர்த்துட்டதா தெரிஞ்சுது.''
''அதுக்கு பிறகு, அது எந்த அனாதை இல்லம்ன்னு, நீங்க போய் பார்க்கலையா சார்?''
''போகலை. உடனடியா நானும், என் பார்ட்னரும், தாய்லாந்துக்கு போயிட்டோம். அங்க நான் கிட்டத்தட்ட மூன்று வருஷம் இருந்தேன். அங்க தான், கார்த்திகாவோட அம்மாவான சுகுணாவை, ஒரு நர்சா சந்திச்சேன்.
''எனக்கு அப்பப்ப உடல் நலமில்லாமல் போனது. சுகுணா தான் வந்து, ஒரு, 'பிசியோதெரபிஸ்டா' எனக்கு உடற்பயிற்சி எல்லாம் சொல்லிக் கொடுத்து, மெல்ல குணப்படுத்தினா. அப்ப தான், எனக்கும், நெருக்கமா, நிரந்தரமா ஒரு துணை அவசியம்ன்னு தோணிச்சு.
''சுகுணாகிட்ட, 'என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா'ன்னு கேட்டேன். அவளும் வறுமையான குடும்பத்திலிருந்து நாடு விட்டு நாடு பிழைக்க வந்திருந்ததால, 'சரி'ன்னு சம்மதிச்சா. அதுக்கு பின் தான் எங்களுக்கு கார்த்திகா பிறந்தா,'' என்று, கார்த்திகா வரை, கிருஷ்ணராஜ் சொல்லி முடிக்கவும், தனஞ்ஜெயனுக்குள் ஒரு கிளாரிட்டி.
''நோ பிராப்ளம் சார். 1997ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதி, செய்தித்தாள் தான், இப்ப எனக்கு முதல்ல தேவை. அது தான் துவக்கப்புள்ளி. நிச்சயமா, உங்க மகனை நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்...'' என்று, நம்பிக்கையாக பேசினான், தனஞ்ஜெயன்.
கிருஷ்ணராஜின் கட்டிலுக்கு அடியில், ஒரு மைக்ரோ போன், சூயிங்கம் கொண்டு யாராலோ ஒட்டப்பட்டிருந்தது. அது, அவர்களின் பேச்சை, கிருஷ்ணராஜின் பங்குதாரரான தாமோதர் காதுகளில் சேர்த்துக் கொண்டிருந்தது.
தாமோதர் முகத்தில் ஒரு பெரிய புன்னகை.
- தொடரும்.
- இந்திரா சவுந்தர்ராஜன்