sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (19)

/

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (19)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (19)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (19)


PUBLISHED ON : மார் 10, 2024

Google News

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகழின் உச்சத்திற்கு பாகவதர் சென்ற போது, யார் கண் திருஷ்டியோ, செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டார். ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தான் அது.

ஹரிதாஸ் படத்துக்குப் பின், ஒப்புக்கொண்ட, உதயணன் வாசவதத்தை படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஸ்டூடியோவிற்கே சென்று, பாகவதரை கைது செய்தது, போலீஸ்.

லண்டன் பிரிவியு கவுன்சில் வரை வழக்கை எடுத்துச் சென்று, வாதாடி, பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் விடுதலை செய்ய வைத்தார், பிரபல வக்கீலான, எத்திராஜ் முதலியார்.

சிறையில் இருந்து விடுதலையானவுடன், திருச்சிக்குச் சென்றார், பாகவதர். சமயபுரம் கோவிலில் பிரார்த்தனையை முடித்து, திருச்சியில் தன் இல்லத்திற்கு சென்றார்.

குடும்பத்தார் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார், பாகவதர். திருச்சியில் பாகவதர் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன், தயாரிப்பாளர்கள் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்தனர்.

தான் சிறை சென்றபோது, அந்தத் தயாரிப்பாளர்கள் நடந்து கொண்ட விதம், பாகவதர் மனதில் தீராத வடுவையே ஏற்படுத்தி விட்டது.

'தாங்கள் அனைவரும் என்னைத் தேடி வந்தது, சந்தோஷம். நான், அடிப்படையில் சங்கீதக்காரன். எனவே, நான் கச்சேரிகளில் மட்டுமே இனி கவனம் செலுத்தப் போகிறேன். நடிப்பதில் தற்போது, எனக்கு ஆர்வம் இல்லை...' என்று, சொல்லி விட்டார்.

சுற்றமும், நட்பும் சும்மா விடுமா...

'பிறருடைய படங்களில் வேண்டுமானால் நடிக்க வேண்டாம். அதற்காக நடிப்பே வேண்டாம் என்று சொல்வது ஏன்? நீங்களே தொடர்ந்து படம் எடுக்கலாமே...' என்று, தொடர்ந்து வற்புறுத்த ஆரம்பித்து விட்டனர்.

அதுவும் சரி தான் என்ற முடிவுக்கு வந்தார், பாகவதர்.

ராஜமுக்தி என்ற படத்திற்கான வேலைகளை துவங்கி விட்டார். தன்னுடைய படக் கம்பெனிக்கு, 'நரேந்திரா பிக்சர்ஸ்' என்று, பெயர் சூட்டினார். ராஜமுக்தி படத்திற்கு இசையமைத்தவர், சி.ஆர்.சுப்புராமன்.

இப்படத்திற்கு இசை வழங்கியவர், நாதஸ்வர சக்கரவர்த்தி, திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை. பிரபல கர்நாடக சங்கீத மேதை, எம்.எல்.வசந்தகுமாரி, இப்படத்தில் தான் முதன் முதலாக திரையிசைப் பாடல்கள் பாடத் துவங்கினார்.

தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்த பாகவதருக்கு இஷ்டம் இல்லை. ஏனென்றால், அவர் சிறையில் இருந்த காலத்தில், படத் தயாரிப்பாளர்கள் அந்த அளவிற்கு அவரைப் படாதபாடு படுத்தி விட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்த, 'நியூடோன் ஸ்டூடியோ'வின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராக பாகவதர் இருந்தும், சென்னையில் படப்பிடிப்பு என்ற யோசனையை முற்றிலுமாக நிராகரித்து விட்டார்.

பூனாவில், மூன்று மாடிக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்தார், பாகவதர். தன் குழுவினர் அனைவருக்கும் சகல வசதிகளையும் செய்து தந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அச்சமயம் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட, எங்கும் கலவரம். அதுவும் பூனாவில், கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கவில்லை. படப்பிடிப்பு இல்லாவிட்டாலும், படியளக்க வேண்டாமா! அத்தனை பேருக்கும் செலவு ஆகிக்கொண்டே இருந்தது.

இதற்கிடையில், படத்தின் கதாசிரியர், புதுமைப்பித்தனின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது. உடனே, பத்திரமாக அவர், ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் வந்தவர், சிறிது நாட்களிலேயே அமரராகி விட்டார். பெரும் பகுதி கதை, வசனம், அவர் எழுதி முடித்த நிலையில், பாக்கி உள்ள வசனங்களை, நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார்.

சொல்ல முடியாத கஷ்டங்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு, படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார், பாகவதர். ஒரு வழியாக பட வேலைகள் முடிந்த பின், மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் வெளியிடப்பட்டது.

அக்., 9, 1948ல் வெளிவந்த இப்படம், சொல்லிக் கொள்ளும்படியாய் ஓடவில்லை. ஆம், பாகவதர் படங்கள் என்றால், 100 வாரங்கள் தாண்டியும் ஓடும். இப்படம், 15 வாரங்கள் மட்டுமே ஓடியதாக தகவல். பாகவதரைப் பொறுத்தவரை, இது அதிர்ச்சி தோல்வி என்றால், மிகையல்ல.

உண்மையிலேயே படம் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில், ரசிகர்களின் ரசிப்புத்தன்மை வெகுவாக மாறிப்போய் விட்டது தான் காரணம்.

அதன்பின், சங்கீதக் கச்சேரிகளிலும், தமிழிசையை பரப்புவதிலும் பெரும் கவனம் செலுத்தத் துவங்கினார், பாகவதர். அவரது கச்சேரிகள் அமோக வரவேற்பைப் பெற்றன.

சினிமாவே வேண்டாம் என்று பாகவதர் நினைத்தாலும், மற்றவர்கள், அப்படி அவரை இருக்க விடவில்லை.

நான்கு ஆண்டு காலம், நாடகம், ரேடியோ கச்சேரி, திருமண கச்சேரி, தமிழிசையைப் பரப்புதல் என்று தன் முழு கவனத்தையும் செலுத்தி, பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தார், பாகவதர்.

மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மற்றவர்களுடைய வற்புறுத்தலை, எத்தனை நாளைக்குத்தான் மறுக்க முடியும். ஒரு கட்டத்தில், சரி, மீண்டும் நடிக்க ஆரம்பிக்கலாம் என்ற தீர்மானத்தில் மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.

— தொடரும்.

கொலை வழக்கில் வாதாடி வென்றதற்கான, 'பீஸ்' எவ்வளவு தர வேண்டும்...' என்று பாகவதர் கேட்க, 'ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன்...' என்று மறுத்து விட்டார், எத்திராஜ் முதலியார். பெண்கள் கல்விக்காக, ஒரு கல்வி ஸ்தாபனத்தை, எத்திராஜ் முதலியார் துவங்க இருப்பதை அறிந்தார், பாகவதர். 'அந்த புனிதமான காரியத்திற்கு, ஒரு சிறு பரிசு தர, என்னை அனுமதிக்க வேண்டும்...' என, கோரிக்கை வைத்தார்.'தங்கள் இஷ்டம்...' என்று ஒத்துக்கொண்டார், முதலியார். எத்திராஜ் முதலியாரிடம், 'தங்களுடைய கல்விப்பணிக்கு, என்னுடைய சிறு நன்கொடை...' என்று, தன் தங்கத்தட்டை தந்து விட்டார், பாகவதர்.கல்விப் பணிக்கான நன்கொடை என்றதனால், பாகவதர் விருப்பப்படி, முதலியாரும் ஏற்றுக் கொண்டார். அந்த தங்கத்தட்டின், இன்றைய மதிப்பு சுமார், 5-0 லட்சம் ரூபாய்.     

கார்முகிலோன்






      Dinamalar
      Follow us