
மாற்றி யோசித்தால், முன்னேற்றம் நிச்சயம்!
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நண்பர் ஒருவர், சொந்தமாக ஆட்டோ வைத்திருக்கிறார். மாதக் கட்டணத்திற்கு, தினமும் காலையிலும், மாலையிலும், எங்கள் பகுதியிலுள்ள பள்ளி செல்லும் பிள்ளைகளை அழைத்துப் போய் வருவார். மற்ற நேரங்களில், வேறு சவாரிகளிலும், வருமானம் ஈட்டி வருகிறார்.
மிதி வண்டியில் கூடையை வைத்து, வீடு வீடாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார், அவர் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என்று, இரண்டு பிள்ளைகள். மூத்தவள், கல்லுாரி பயில்கிறாள். இளையவன், பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
'புறநகரில் சொந்தமாக மனை ஒன்றை வாங்கி, அதில் வீடு கட்டி குடியேற வேண்டும். பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே, என் லட்சியம். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை...' என்று, வருந்தினார்.
ஒருநாள் மாலை வேளை, 'அயர்ன்' செய்த பள்ளிச் சீருடைகளையும், ஏரியாவாசிகளின் ஆடைகளையும் எடுத்துக் கொண்டு, எங்கள் தெருவிலுள்ள வீடுகளுக்கு சென்று, கொடுத்து வருவதைப் பார்த்து, அதுபற்றி விசாரித்தேன்.
'கூடுதல் வருமானத்திற்காக, வீட்டு முன், தள்ளு வண்டியில், லாண்டரி கடை போட்டு, தினமும் மாலை நேரங்களில், துணிகளை, 'அயர்ன்' செய்து வந்து, தருகிறேன். நேரத்தை விரயமாக்காமலும், கவுரவம் பார்க்காமலும் உழைப்பதால், எதிர்பார்த்ததை விட, அதிக வருமானம் கிடைக்கிறது...' என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்த நான், 'உங்களின் லட்சியம் விரைவாக நிறைவேற, வாழ்த்துகள்...' என்று கூறினேன்!
- வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
நண்பர்கள் சந்திப்பில், 'சர்ப்ரைஸ் கிப்ட்!'
பல ஆண்டுகளுக்கு முன், நான் பயின்ற பள்ளியில், என்னுடன் படித்த வகுப்பு தோழர், தோழியரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பிட்ட தினம், காலை முதல் மாலை வரை, பல்வேறு நிகழ்ச்சிகளோடு, அனைவருமே மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டோம்.
எங்களுடன் படித்து, தற்போது போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் நண்பன் ஒருவன், தன் சொந்த செலவில், ஒவ்வொருவருக்கும் பரிசு பார்சல் ஒன்றைத் தந்தான். வீட்டிற்குச் சென்று பிரித்துப் பார்க்குமாறு அன்புக் கட்டளையிட்டான்.
அதன்படியே விடைபெற்று வீடு வந்து, அந்தப் பார்சலைத் திறந்தேன். அதில், 'பென் டிரைவ்' மற்றும் பள்ளியில் படிக்கும்போது, பள்ளி விழாக்களிலும், ஆண்டு இறுதியில், 'குரூப்'பாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன.
பலர் தவறவிட்டிருக்கக் கூடிய அந்தப் புகைப்படங்களை தேடிக் கண்டுபிடித்து, லேமினேஷன் செய்து,'சர்ப்ரைஸ் கிப்ட்'டாகவும், 'பென் டிரைவ்'வில், அன்றைய சந்திப்பு நிகழ்வை படம்பிடித்துக் கொடுத்திருந்தது, மறக்க முடியாத நினைவு பரிசாக இருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருமே, இதுபற்றி சிலிர்ப்போடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். நண்பரையும், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நன்றி கூறினோம். முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், இதுபோன்று, 'கிப்ட்'களை வழங்கி மகிழலாமே!
- வெ.பாலமுருகன், திருச்சி.
யோகா மாஸ்டரின் புதுமை பயிற்சிகள்!
எனக்கு தெரிந்த ஒருவர், வீட்டின் மொட்டை மாடியில், 'ஷெட்' அமைத்து, காலை, மாலை இருவேளையும், யோகா வகுப்பு எடுத்து வருகிறார். அவரின் இனிமையான செயல்முறைகளால் கவரப்பட்டு, வயது வித்தியாசமின்றி, பலரும், அவருடைய மாணவர்களாக சேர்ந்து வருகின்றனர்.
யோகா கூடத்தில் மாணவர்களை ஒன்று கூடச் செய்து, நான்கு வெவ்வேறு பயிற்சிகளை, மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும், தலா ஒரு பயிற்சி என, தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
மாதத்தின் முதல் ஞாயிறு, சிறந்த ஓவியக் கலைஞர்களை வரவழைத்து, ஓவியம் கற்றுத் தர செய்கிறார். இரண்டாவது ஞாயிறு, விதவிதமான சிறுதானிய உணவுகளை சமைக்கச் செய்து, நிலாச்சோறு சாப்பிட்டு மகிழச் செய்கிறார்.
மூன்றாவது ஞாயிறு, கவலைகளை மறந்து, இனிமையான பாடல்களுக்கு நடனம் ஆடி உற்சாகம் பெறச் செய்கிறார். மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, திறமையான நகைச்சுவை பேச்சாளர்களை வரவழைத்து, பேசச் செய்து, மன இறுக்கம் நீங்க சிரிக்கச் செய்வதோடு, மாணவர்களையும் நகைச்சுவைகளை கூறச் செய்து, ஊக்குவிக்கிறார்.
இவை அத்தனையையும், நண்பரின் சொந்த செலவில் தான் செய்து வருகிறார். புதுமையான பயிற்சிகளால், மாணவர்களுக்கு நன்மை செய்து வரும், அந்த யோகா மாஸ்டரை, அனைவருமே பாராட்டுகின்றனர்.
- டி.லிங்கேஷ்குமார், சென்னை.