
மனிதர்களுக்கு ஏற்படும் சுகம், துக்கங்களுக்கு காரணம், அவரவர்கள் செய்துள்ள புண்ணியம், பாவங்கள் தான்.
கடவுள் எல்லாருக்கும் நன்மை செய்யத்தான் விரும்புகிறார். இவர்களில் சிலர், நல்ல காரியங்களை செய்து, சுகமான வாழ்க்கை வாழ்கின்றனர். சிலர், தகாத காரியங்களை செய்து, துன்பப் படுகின்றனர்.
துன்பம் வரும் போது, கடவுளை நிந்திக்கின்றனர். கடவுளுக்கு ஆயிரம் கண்கள் உண்டு. சகஸ்ராட்சன் என, அவனுக்கு பெயர். எத்தனை கண்களில் இருந்தாலும், பாவிகளை பார்க்கும்போது, அவனது கண்களில் கண்ணீர் வருவதில்லை.
செய்த பாவங்களுக்கான தண்டனை பெறுகிறான். இதில், நாம் குறுக்கிட முடியாது என்று, கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான்.
பிறரிடம் அன்போடும், ஆதரவோடும் இரு. பிறருக்கு முடிந்த அளவு உதவி செய். நல்ல காரியங்களை செய் என்கிறார், கடவுள்.
அப்படி இல்லாமல் துஷ்டனாக இருந்தால், அவனுக்கு துன்பத்தைக் கொடுத்து, நல்லவனாக மாற்ற முயற்சி செய்கிறார். இவன் இப்படி பாவங்களை செய்து, வீணாகிப் போகிறானே... இவனை நல்வழிப்படுத்தி, நம் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக, தண்டிக்கிறார்.
நாம் செய்த பாவங்களை அறிந்து, கடவுளை வழிபட்டால் போதும்; சுகத்தைக் கொடுப்பார்.
ஒரு மாணவன் சரியாக படிக்காவிட்டால், அவன் நன்றாக படித்து, முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தண்டிக்கிறார், ஆசிரியர். அவன் நன்றாக படித்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது தான் அவரது விருப்பம்.
இதில் சுயநலம் எதுவுமில்லை. ஆனால், ஆசிரியர் தண்டிக்கிறாரே என்று அவர் மீது கோபப்படுவதில் என்ன பயன்?
அதேபோல, கடவுளும், ஒருவன் வழி தவறி பாவச் செயலில் ஈடுபடும்போது, அவனுக்கு சில துன்பங்களை தந்து, நல்வழிப்படுத்த நினைக்கிறார். அதனால், கடவுள் கொடுமை செய்கிறார் என்று சொல்லக் கூடாது.
'நாம் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. கடவுள் அதற்காகத்தான் தண்டிக்கிறார் போலும்...' என்று நினைத்து, மனதை கடவுளிடம் திருப்ப வேண்டும். அவரும் சந்தோஷப்பட்டு, 'இவன், இப்போது திருந்தி விட்டான்...' என்று உணர்ந்து, தன் ஆயிரம் கண்களில் ஒன்றையாவது திறந்து, இவனை கவனிப்பார்.
கடவுளின் பார்வை பட்டால் போதும், எல்லா கஷ்டங்களும் தீர்ந்து விடும்.
அதனால், கடவுள் எனக்கு ஏன் இப்படி கஷ்டங்களை கொடுக்கிறார் என்று, அவரை நிந்திப்பதை விட, மேலும் மேலும், அவரிடம் பக்தி செய்து வழிபட்டால், என்றைக்காவது ஒருநாள் அவர் கண் திறந்து பார்க்கக்கூடும்.
அந்த அளவுக்கு பக்தியும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். அரை குறை பக்தியும், அரை குறை நம்பிக்கையும் இருக்கும் வரையில், கடவுளின் அருள் எப்படி கிடைக்கும்?
பி.என்.பி.,