
அன்புள்ள அம்மாவுக்கு -
நான், 26 வயது பெண். பட்டப்படிப்பு முடித்து, மருத்துவமனை ஒன்றில், 'டேட்டா என்ட்ரி' ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். தம்பி, கல்லுாரியிலும், தங்கை, பள்ளி இறுதி வகுப்பும் படித்து வருகின்றனர்.
உறவினர் ஒருவரது மகன், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினான். வீட்டிற்கு ஒரே மகனான அவன், மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால், அவனது விருப்பத்தை ஏற்காமல் இருந்தேன்.
அவனது பெற்றோர் மற்றும் பிற உறவினர்களை, என் பெற்றோரிடம் அனுப்பி, என்னை பெண் கேட்க செய்தான்.
மது பழக்கத்தை விட்டொழித்தால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன்.
'மதுவுக்கு அடிமையானவர்கள் திருந்துவது அவ்வளவு சுலபமல்ல; எனவே, உனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறோம்...' என்றனர், என் பெற்றோர்.
உறவினர் மகனை சிறு வயதிலிருந்தே அறிந்ததால், நிச்சயம் திருந்தி விடுவான் என்று கூறினேன். அதற்கேற்ப, அவனும் ஒரு சில மாதங்களில் குடிப்பழக்கத்தை விட்டு விட்டான்.
பர்னீச்சர் கடை வைத்து, பொறுப்பாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தான்.
தொடர்ந்து, என்னை திருமணம் செய்ய விரும்பி, துாது அனுப்பியபடி இருந்தான். நானும், என் பெற்றோரிடம் கூறி, திருமணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்.
அரை மனதுடன், இரு ஆண்டுக்கு முன், எனக்கும், அவனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்; திருமணம் ஆன உடனே, தனிக்குடித்தனம் வைத்து விட்டனர், என் வீட்டினர். சில மாதங்கள், வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமல் போனது. குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை.
இப்போது, மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டார், கணவர். ஆரம்பத்தில் சில நாட்கள், இரவில் மட்டும் குடித்தவர், கடையை, பணியாளர் பொறுப்பில் விட்டு விட்டு, மதிய நேரத்திலிருந்தே மது அருந்த துவங்கி விடுகிறார். இதனால், தினமும் பிரச்னை ஏற்படுகிறது. இவரை, குடிப்பழக்கத்திலிருந்து எப்படி மீட்பது?
எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா!
— இப்படிக்கு,உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு -
மணமகன் குடி நோயாளி என தெரிந்தே, அவனுக்கு கழுத்தை நீட்டிய நீ, ஒரு அறிவிலி. அதன் துர் பலன்களை இன்று அனுபவிக்கிறாய்.
ஏற்கனவே குடியை நிறுத்தி மீண்டுள்ளார், உன் கணவர். ஆனால், இம்முறை நிரந்தரமாக குடியை நிறுத்துவது சாத்தியமானது தான்.
குடி நோயாளியை திருத்த, கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
* திருமணமாகி எத்தனை ஆண்டுகளாக கணவர் குடிக்கிறார்?
* கணவருக்கு நீண்ட கால நோய் எதாவது இருக்கிறதா?
* குழந்தை பாக்கியம் இல்லாததை மனக்குறையாக கூறி குடிக்கிறாரா?
* குடி நோயாளிகளில், 90 சதவீதம் பேர், தனிக்குடித்தனவாசிகள். இது ஒரு காரணமா?
* குடி நோயாளி கணவரை திருத்தும் தலைமைப்பண்பு ஆளுமை, உன்னிடம் இருக்கிறதா?
-மேற்சொன்ன கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலே, குடி நோயாளியான உன் கணவர் திருந்த வாய்ப்பிருக்கிறதா என, சொல்லி விடும்.
ஆல்கஹால் அரக்கனிடமிருந்து கணவர் நிரந்தரமாக மீள, அவரிடம் கடவுள் பக்தியை மேம்படுத்து.
தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனோபாவத்தை கணவரிடம் உருவாக்கு. சக மனிதர்களுக்கு இழைத்த துன்பங்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கட்டும், கணவர்.
பிரார்த்தனை, தியானம் குடியை புறக்கணிக்கும். ஆன்ம பலம் கூட்டும். ஆன்மிக விழிப்புணர்வு, ஆல்கஹாலுடன் போரிட்டு வீழ்த்த உதவும். தகுந்த மருத்துவம் பார்த்து, குழந்தை பெற்றுக் கொள்.
புலம்பாமல், கணவர் மீது குற்றம் சாட்டாமல், தீரமாக கணவருடன் ஒன்றிணைந்து போரிட்டு, ஆல்கஹாலை ஓட ஓட விரட்டு. இறுதி வெற்றி உனக்கே மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.