PUBLISHED ON : ஏப் 07, 2024

'பாலமுருகன் பாய்ஸ் நாடக குழு'வை, தன் பொறுப்பில் ஏற்று நடத்தி வந்தார், ஏ.பி.என்., ஆனால், சிறிது நாளில் மீண்டும், 'பாலமுருகன் நாடகக் குழு'வின் நாடகங்களுக்கு வரவேற்பு குறைந்து, மீண்டும் தள்ளாட ஆரம்பித்து, படுத்தே விட்டது.
நாடக கம்பெனி முதலாளி ரங்கசாமியின் மகனான மூக்கனும், நாகராஜனும், மிகவும் நெருங்கிய நண்பர்கள். எனவே, நண்பனை பிரிய மனமில்லாமல் அவருடனே இருந்தார், நாகராஜன்.
வறுமை தாண்டவம் ஆடவே, குடும்பத்திற்குரிய வருமானத்தை தேட முடிவெடுத்தனர், மூக்கனும், நாகராஜனும். அதனால், ஊரிலுள்ள கரியை மூட்டையாக கட்டி, விருதுநகர் சந்தையில் விற்க முடிவு செய்தனர்.
அதற்காக, மரக்கரி மூட்டைகளை ஒரு வண்டியில் இருவரும் ஏற்றி, சந்தைக்கு சென்று, விற்று, ஒருநாள் கூலியாக, ஐந்து ரூபாய் பெற்றனர். அதுவும் நீடிக்கவில்லை.
மீண்டும் திரைப்படத் துறைக்கு செல்வது என்று முடிவு செய்தார், நாகராஜன்.
தன் முதலாளி, ரங்கசாமியிடம், 'நான், மறுபடியும் திரைத் துறைக்கு செல்கிறேன். மீண்டும் உங்களை சந்திக்கும்போது, வெற்றி அடைந்து, நல்ல நிலையில் திரும்ப வந்து, உங்களுக்கு உதவுவேன். அப்படி வராவிட்டால், நான் செத்து விட்டேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்...' என்று கூறியுள்ளார்.
அப்போது, 'நாகா, உனக்கு உதவ, என் கையில் பணம் இல்லையடா. ஆனால், இந்த, 'சரஸ்வதி சபதம்' நாடக கதை தான் இருக்கு. இது, ஒரு நாள் உனக்கு நிச்சயம் உதவும்...' என்று, மனப்பூர்வமாக, நாகராஜன் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்துடன், அந்த நாடகத்தின் பிரதியை கொடுத்தார், ரங்கசாமி.
அவர் சொன்னபடியே, பின்னாளில் நாகராஜன் எடுத்த, திருவிளையாடல் படத்திற்கு பிறகு, நாடகத்ததை அடிப்படையாக வைத்து அவர் எடுத்த, சரஸ்வதி சபதம் படம், பெரும் பெயரையும், பொருளையும் ஈட்டித் தந்தது.
காலம் கனிந்தது; கனவுகள் நனவானது. அதன்பின், ரங்கசாமியை தேடி வந்தார், நாகராஜன்.
ரங்கசாமியை, தான் இயக்கும் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று காட்டினார். ரங்கசாமிக்கு, ஆரணியில் ஒரு உணவு விடுதி வைத்துக் கொடுத்தார். அங்கு, சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளாததால், மீண்டும் கோவையில், உணவு விடுதி வைத்துக் கொடுத்தார். இப்படி, ரங்கசாமிக்கு நிறைய உதவினார், நாகராஜன்.
ஏ.பி.என்., நல்ல குரல் வளம் மிக்கவர். நீண்ட நெடிய வசனங்களை பேசுவதில் வல்லவர். தமிழ் இலக்கியத்தின் மீது தணியாத தாகம் கொண்டவர்.
இவர், பள்ளிக்கு சென்று படிக்கவில்லை என்றாலும், இலக்கியம் மீது கொண்ட பற்றின் காரணமாக தானே முயன்று, பல நுால்களை படித்து, பள்ளிப் படிப்பு இல்லாத குறையை நிறைவு செய்து கொண்டார். அத்துடன், சிறந்த இலக்கியவாதியாகவும் இருந்தார்.
'நீரில்லாத நெற்றி பாழ்...' என்ற வசனத்தை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ, எப்போதும் நெற்றி நிறைய திருநீறு அணிந்திருப்பார். எந்த நேரத்திலும் பதற்றப்பட மாட்டார். ஆற, அமர யோசித்தே எந்த முடிவையும் எடுப்பார்.
மிக எளிமையான தோற்றம் கொண்டவர். கை கடிகாரம், விரலில் மோதிரம், கழுத்தில் செயின் போன்ற ஆடம்பரமான எந்த பொருளையும் அணிய மாட்டார். எப்போதும் வெள்ளை வேஷ்டி, கதர் சட்டை தான் அணிவார். யாரையும் கடிந்து பேச மாட்டார்.
ஒரு சிறந்த படிப்பாளி. வீட்டில் இருக்கும் போது, இரவில், 10:00 மணிக்கு மேல் படிப்பது அவரது வழக்கம். அவர் பெயரில், நுால் நிலையம் ஒன்று வைத்திருந்தார். அதில், 3,000 நுால்கள் இருந்தன. அந்த நுால் நிலையத்தில், எந்த நுாலில், எந்த பக்கத்தில் என்ன விஷயம் இருக்கிறது என்பது, அவருக்கு அத்துப்படி. அப்படி ஒரு நினைவாற்றல். அந்த நுால்களை வரிசையாக, 'சப்ஜெக்ட்' வாரியாக அடுக்கி வைத்திருப்பார்.
ஏ.பி.என்., சிறந்த பேச்சாளரும் கூட. இலக்கிய மேடைகளில், நிறைய பேசுவார். ஒரு மேடையில் பேசியதை, இன்னொரு மேடையில் பேச மாட்டார். ஒவ்வொரு நாளிலும் புதுப்புது பொருளில் பேசுவதில் திறமைசாலி.
நாகராஜன் இயக்கிய நாடகங்களில் குறிப்பிடத்தக்கது, 'நால்வர்' என்ற நாடகம்.
நான்கு தலைமுறை கதை. கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா மற்றும் மகன் என, நால்வரை சுற்றிச் சுழலும் கதை. அதனால் தான், பின்னாளில் எடுக்கப்பட்ட படத்துக்கும் நால்வர் என்றே பெயர் வைக்கப்பட்டது.
நால்வரும் கடமை தவறாதவர்கள், கண்ணியமானவர்கள். தாங்கள் வேலை செய்யும் இடத்தில், உறவு முறை பார்க்க மாட்டார்கள். வீட்டிற்கு வந்த பின்தான் உறவு முறையில் பழகுவர்.
காவல்துறை அதிகாரி, துணிக்கடை அதிபர், சீர்திருத்தக்காரர் மற்றும் வழக்கறிஞர் என்று, நான்கு சகோதரர்களை சுற்றிச் சுழலும் கதை.
இதில், கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடித்தார், ஏ.பி.என்., தந்தை என்றாலும், தம்பி என்றாலும், சட்டத்தின் முன் குற்றவாளி என்றால் குற்றவாளியே என்று சொல்லும் கறாரான காவல்துறை அதிகாரியாக நடித்தார், ஏ.பி.என்., இதில், இவர் சிறப்பாக நடித்ததால், சில காலம், 'நால்வர் நாகராஜன்' என்றே அடையாளப் படுத்தப்பட்டார்.
தயாரிப்பாளர், எம்.ஏ.வேணு. ஆரம்பத்தில், சேலம், மாடர்ன் தியேட்டர்சில் நிர்வாகியாக வேலை செய்தவர். அங்கிருந்து வெளியே வந்து, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, திரைப்படம் தயாரிக்க நினைத்தார். அதற்காக நல்ல கதையை தேடிக் கொண்டிருந்தார்.
ஒருநாள், சேலத்தில், தன் நண்பரின் திருமணத்துக்கு வந்திருந்தார், வேணு. அப்போது அவருடன் தொடர்புடைய நண்பர்களிடம், 'நான், ஒரு திரைப்படம் தயாரிக்கப் போகிறேன். அதற்கு நல்ல கதையை தேடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.
நண்பர்கள் சிபாரிசு செய்த அந்த நபர்...
— தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.
- கார்த்திகேயன்