
பா - கே
தனக்கு, இரட்டை குழந்தை பிறந்ததாக, சாக்லேட் கொண்டு வந்து அனைவருக்கும் வினியோகித்தார், அலுவலர் ஒருவர்.
அவருக்கு வாழ்த்து சொல்லிய, லென்ஸ் மாமா, 'இரட்டை குழந்தைன்னு சொல்றீங்க... ஒரே ஒரு சாக்லேட் தர்றீங்களே... இரண்டு தர வேண்டாமா?' என்று, 'கலாய்'த்தார்.
'ஐயோ மாமா... பல் வலின்னு அடிக்கடி டாக்டரிடம் போயிட்டு வர்றீங்க. சாக்லேட் சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்களா?' என்றேன், நான்.
'மணி... வர வர, நீயும் மாமி மாதிரி ஆயிட்டே. ஆசைப்பட்ட எதையும் சாப்பிட முடியாத நிலை...' என்று அலுத்துக் கொண்டு, கையிலிருந்த சாக்லேட்டை, அருகிலிருந்த உ.ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வெளியேறினார், மாமா.
'சமீபகாலமாக, இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறுகின்றனர்...' என்ற செய்தியாளர், இரட்டை குழந்தைகளின் இயல்பு பற்றி, தான் படித்த தகவல்களை கூற ஆரம்பித்தார்:
சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்குது இல்லையா, அதில் மூன்று வகை உண்டு.
முதலாவது, ஆணின் உயிரணு, பெண்ணின் உயிரணு இது இரண்டும் சேர்ந்து கரு உருவாகுது. இது சாதாரணமா வளர்ந்து, குழந்தையா பிறக்கும்.
இரண்டாவது, சில சமயம், கரு உருவாகி, இரண்டா பிரிந்து வளர்ந்தால், ஒரே மாதிரியான இரண்டு குழந்தைகள் பிறக்கும்.
இப்படி பிறக்கிறது ரெண்டும் ஆணா இருக்கும் அல்லது இரண்டும் பெண்ணா இருக்கும்.
அபூர்வமா சில சமயம், தாயின் இரண்டு உயிரணுக்கள், தந்தையின் இரண்டு உயிரணுக்கள் தனித்தனியா சேர்ந்து இரண்டு கருக்கள் உருவாகி பிறக்கிறதும் உண்டு. இது, 'நான் - ஐடென்டிக்கல் டுவின்ஸ்' அல்லது 'ப்ரடெர்னல் டுவின்ஸ்' எனப்படும். இப்படி பிறக்கும்போது ஒன்று ஆணாகவும், இன்னொன்று பெண்ணாகவும் இருக்கலாம்.
இதைத் தவிர மூன்றாவது வகை, ரொம்ப ரொம்ப அபூர்வம். உடல் இரண்டும் ஒட்டிக்கிட்டே பிறக்கிறது. சயாமிய இரட்டையர்கள்ன்னு இதுக்கு பேரு.
பொதுவா, இரட்டை குழந்தைகளா பிறக்கிறவங்க, ஒருத்தரை ஒருத்தர் பிரிந்து வாழறது அபூர்வம். அதுவும் சின்ன வயசுலயே பிரிஞ்சுடறவங்க ரொம்ப குறைவு. அப்படி பிரிந்து வேற வேற இடங்கள்ல வாழறவங்களை கண்டுபிடிச்சு, அவங்களை பற்றி ஆராய்ச்சி பண்ணியிருக்கார், மின்னசோட்டா பல்கலை கழகத்தின் உளவியல் துறை தலைவர், பேராசிரியர் தாமஸ் பூச்சார்டு என்பவர்.
முதலில், ஒண்ணா பிறந்து, அப்புறம் பிரிந்து, ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம வெவ்வேறு இடத்தில் வாழ்ந்த இரட்டையர்களை கண்டுபிடித்து, அவங்களை எல்லாம் ஒரே இடத்துக்கு வரவழைக்க சொன்னார்.
ஆராய்ச்சிக்கு சம்மதிச்ச இரட்டையர்களை, மின்னசோட்டா பல்கலை கழகம், பணம் கொடுத்து வரவழைத்தது. ஆறு நாட்கள் அவங்கள்லாம் விருந்தாளியா தங்கியிருந்தாங்க.
அப்போ அவங்களுடைய குணநலன்கள், நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்கள், உடம்புல உள்ள நோய்கள், பொழுதுபோக்குகள், நண்பர்கள், தொழில் மற்றும் மத நம்பிக்கை.
இது சம்பந்தமா, 15 ஆயிரம் கேள்விகள் கேட்டு, கிடைச்ச விபரங்களை கம்ப்யூட்டரில் சேகரித்தனர். அப்பதான் சில ஆச்சரியமான உண்மைகள் தெரிய வந்தது.
ஐரீன்மில்லர், ஆன் சிங்கர் என்ற இந்த இரண்டு பொண்ணுங்களும், இரட்டை குழந்தைங்க, பிறந்த உடனே பிரிஞ்சுட்டாங்க. 60 வருஷமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கல.
அப்படி இருந்தும், என்ன ஒரு ஆச்சரியம்... இவங்க இரண்டு பேரும் சந்திக்கிறதுக்கு பல்கலை கழகம் ஏற்பாடு செய்திருந்தப்போ, இரண்டு பேரும் ஒரே மாதிரியான பரிசு பொருளையே வாங்கிட்டு வந்தாங்களாம். ஒரே வேலைப்பாடுடைய தட்டுகளை கொண்டு வந்திருந்தாங்களாம்.
ஆஸ்கர் ஸ்டோகர், ஜாக்யூக் என்ற இரட்டை ஆண் குழந்தைங்க; பிறந்தவுடன் பிரிஞ்சுட்டாங்க.
ஜெர்மனியில கத்தோலிக்க கிறிஸ்தவராகி வளர்ந்து வந்தார், ஆஸ்கர்.
தென் அமெரிக்காவுக்கு பக்கத்துல, டிரினிடாட் நாட்டுல, யூத மத குடும்பத்தில் வளர்க்கப்பட்டார், ஜாக்யூக்.
இவங்க இரண்டு பேரையும் சந்திக்க ஏற்பாடு பண்ணினப்போ, இரண்டு பேரும் ஒரே மாதிரியான கண்ணாடி மற்றும் ஒரே மாதிரி சட்டை போட்டிருந்தாங்களாம். அது மட்டுமல்ல, இரண்டு பேரும், ஒரே மாதிரியான மீசை வச்சிருந்தாங்களாம்.
அமெரிக்காவில் ஒரு இரட்டையர்கள். டோனி மிலாய் - ரோஜர் புரூக்.
சின்ன வயசுலயே இவங்களை இரண்டு வெவ்வேறு குடும்பங்கள், சுவீகாரம் எடுத்துக்கிட்டுது.
இவங்க சந்திச்சப்ப ஓர் ஆச்சரியம். இரண்டு பேரும் பெட்டியை திறந்தாங்க. உள்ளே பார்த்தா ஒரே மாதிரியான ஷேவிங் கிரீம், ஒரே மாதிரியான ஹேர் ஆயில்.
இதை விட ஆச்சரியம், ரெண்டு பேருமே சுவீடன்லேர்ந்து இறக்குமதியாகுற ஒரே வகை பற்பசையை வச்சிருந்தாங்களாம்.
ஜிம் ஸ்பிசிங்கர் - ஜிம் லுாயிஸ், இவங்களும் இரட்டையர்கள். 39 வயசு வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம வளர்ந்தவங்க. இவங்க சந்திச்சுகிட்டப்போ தெரிய வந்த ஆச்சரியம்...
இரண்டு பேருமே நகம் கடிக்கிற பழக்கம் உள்ளவங்க. கார் பயந்தயத்துல விருப்பம் உள்ளவங்க. புகை பிடிக்கிறவங்க. ஒரே மாதிரியான கார் வச்சிருந்தாங்க. ஆளுமை சோதனையிலும், இரண்டு பேருக்கும் ஒரே மதிப்பெண்.
இரட்டையர்களை ஆராய்ச்சி பண்ணின பேராசிரியர், சுருக்கமா என்ன சொல்றார்ன்னா...
நம் குணநலன்களில் ஒரு சிறிய பகுதியை மரபணுக்கள் முடிவு செய்கின்றன. இதை புறக்கணிக்க முடியாது. ஆனால், வளரும் சூழ்நிலையும், நம்மை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது என்பது தான் அவரோட முடிவு.
- என்று சொல்லி முடித்தார், செய்தியாளர்.
இரட்டையர்களில் இவ்ளோ விஷயம் இருக்கிறதா என்று ஆச்சரியமடைந் தேன், நான்.
ப
ரயில்வே பிளாட்பாரத்துல நின்னுகிட்டிருந்த ஒருத்தர், அங்கே இருக்கிறவங்க கிட்ட, 'ஏங்க, கிழக்கே போற ரயிலு போயிட்டு துங்களா...' என்றார்.
'போயிட்டுது...' என்றனர்.
கொஞ்ச நேரம் கழிச்சு, 'ஏங்க, மேற்கே போற ரயிலு போயிட்டு துங்களா...' என்று கேட்டார்.
'போயிட்டுது...' என்றனர்.
மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு, 'ஏங்க, பத்தரை மணி வண்டி போயிட்டுதுங்களா...' என்றார்.
தொடர்ந்து காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும், ஒரே இடத்துல நின்னு கேட்டுக்கிட்டே இருந்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தர், அவரிடம் வந்து, 'ஏங்க, நீங்க எங்கே போகணும்?' என, கேட்டார்.
'இந்த ரயில்வே லைனை தாண்டி, அந்தப் பக்கம் போகணும்...' என்றார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.