
உஷா சுப்ரமணி எழுதிய, 'வாழ்வின் வெற்றி நம் கையில்' நுாலிலிருந்து:
ஒருமுறை, தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு, டில்லியில் இருந்து சென்னை திரும்ப, விமான டிக்கெட் ஏற்பாடு செய்ய, சிலர் முன் வந்தனர். ஆனால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யச் சொன்னார், அண்ணாதுரை.
ரயிலில் சென்றால், இரண்டு நாட்கள் ஆகுமே என்று சொன்னவர்களிடம், 'வெவ்வேறு மாநிலங்களின் வழியே, நீண்ட துாரம் பயணிப்பதால், உடன் பயணிப்பவர்களுக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை. அதனால், எழுத எந்தத் தொந்தரவும் இருக்காது...' என்றார்.
ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் வழியில், ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து காரை சூழ்ந்து கொண்டனர்.
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று விசாரித்தார், எம்.ஜி.ஆர்.,
'மகராசா, நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டனர், மக்கள்.
அவர்களின் கைகளைப் பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்தபோது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்று, தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.
மற்றொரு முறை, காரைப் பார்த்ததும், சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவர் வாழ்க... எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர்.
இதைப் பார்த்து, பக்கத்திலிருந்த நண்பரிடம், 'இவங்க எல்லாருமே, எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட முதல்வர் வாழ்கன்னு ஏன் சொல்லல?' எனக் கேட்டார், எம்.ஜி.ஆர்.,
'உங்க மூன்றெழுத்து பெயர் அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றார், நண்பர்.
'அது மட்டுமல்ல, முதல்வர் வாழ்கன்னு சொன்னா, அது, பதவியை வாழ்த்துற மாதிரி, எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான், நான் சம்பாதித்த சொத்து. இதை நான், பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
ஆப்ரிக்காவில், ஆங்கிலேய நிறவெறி ஆட்சி நடைபெற்றது. கறுப்பு நாய்கள் என, இந்தியரை கேவலப்படுத்தினர். அதைக் கண்ட காந்தி, ஆட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தார். காந்திஜியுடன் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார், சிறுமி வள்ளியம்மை.
தென் ஆப்ரிக்காவில் சத்தியாகிரக போராட்டத்தை காந்தி நடத்திய போது, அவரை சுடுவதற்காக துப்பாக்கியை எடுத்தான், ஆங்கிலேயன் ஒருவன்.
அப்போது அருகில் இருந்த சிறுமி, வள்ளியம்மை, காந்திஜிக்கும், ஆங்கிலேயனுக்கும் நடுவில் நின்று, 'காந்தியை இப்போது சுடு...' என்று சத்தமிட்டாள். சிறுமியின் உறுதியை கண்ட வெள்ளையன், துப்பாக்கியை கீழே போட்டான்.
அறப்போரில் பெண்கள் பங்கேற்கலாம் என்றார், காந்திஜி. போராட்டத்தில் ஈடுபட்டபோது, வள்ளியம்மையை கைது செய்தது, ஆங்கில அரசு. மாரிட்ஸ் பார்க் என்ற இடத்தில் சிறையில் அடைத்து, கொடுமைப்படுத்தியது. மூன்று மாதம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. கடுங்காய்ச்சலால் வள்ளியம்மை உடல் தளர்ந்தது. ஆனாலும், அவர் மனம் தளரவில்லை.
வள்ளியம்மையிடம், 'மன்னிப்பு கோரினால் விடுதலை செய்கிறோம்...' என்றார், சிறை அலுவலர்.
'மன்னிப்பு வேண்டாம். எனக்கு வேண்டியது உரிமையே. எம்மக்கள் உரிமையோடு வாழ்வதே எனக்கு உயிர்...' என, சிறையை விட்டு வெளியேற மறுத்தார், வள்ளியம்மை.
- நடுத்தெரு நாராயணன்