
கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீசுக்கு முன் இருந்த தத்துவ அறிஞர்கள், தாங்கள் மட்டும் பேசுவர். சீடர்கள் பவ்யமாக, மவுனமாக கேட்பர். கேள்வி கேள் என்று, சீடர்களை பார்த்து சொன்ன முதல் நபர், சாக்ரடீஸ் தான்.
காலை, மாலை என, தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம், ஏதென்ஸ் நகரத்தின் கடைத்தெரு, சாலைகளில் மக்கள் கூடும் இடத்திற்கு செல்வார், சாக்ரடீஸ்.
மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களிடம், பேச்சு மூலம் தன் சிந்தனையை வெளிப்படுத்துவார். இவருக்கும், இவரது பேச்சுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.
கூட்டம் உள்ள இடத்தில், கையில் விளக்குடன் எதையோ குனிந்து தேடுவது போல் நடிப்பார், சாக்ரடீஸ். இதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடும்.
அக்கூட்டத்தில், 'என்ன தேடுகிறீர்கள்?' என, யாராவது கேட்டால், 'மனிதர்களை தேடுகிறேன்...' என்பார்.
மக்கள் புரியாது விழிக்க, அவர்களிடம் தன் கருத்துக்களை விதைத்து பேசுவார்.
அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், குடியரசு கட்சிக்காக, தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். அப்போது, 'நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவன்...' என, கூச்சலிட்டான், கூட்டத்திலிருந்த ஒருவன்.
'நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்...' என்று கேட்டார், ரூஸ்வெல்ட்.
'என் பாட்டனார் அதில் இருப்பதால், நானும் இருக்கிறேன்...' என்றான்.
'ஒருவேளை, உன் பாட்டனார் கழுதையாக இருந்தால், அப்போது, நீ எந்த கட்சியில் இருப்பாய்...' என்றார், ரூஸ்வெல்ட்.
'அப்படியானால், உங்கள் குடியரசு கட்சியில் இருப்பேன்...' என்று கூறி, ரூஸ்வெல்டின் மூக்கை உடைத்தான்.
சாதாரண மேடை பேச்சு, நாட்டின் தலையெழுத்தை மட்டுமல்ல, அதன் வளத்தையே மாற்ற முடியுமா?
முடியும் என்று நிரூபித்திருக்கிறது, இச்சம்பவம்:
இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், தாம்ஸ் கார்லி என்ற பேச்சாளர் பேசும்போது, 'எந்த தேசம் இரும்பை கைக் கொள்கிறதோ, அந்த தேசம் சீக்கிரமே தங்கத்தைக் கைக்கொள்ளும்...' என்றார்.
அந்த கூட்டத்திற்கு இந்தியாவில் இருந்து சென்றிருந்தார், டாடா. தாமஸ் கார்லியின்பேச்சு, டாடாவை சிந்திக்க வைத்தது.
இந்தியா திரும்பியதும், இரும்பு தாது கிடைப்பதாக கூறப்பட்ட, காடுகளையும், மலைகளையும் சுற்றி அலைந்து, அந்த பகுதிகளைக் கண்டுபிடித்தார். இதற்காக, அப்போதிருந்த, ஆங்கிலேயர் ஆட்சியின் எதிர்ப்புகளை சந்தித்தார். இருப்பினும், விடாமுயற்சியுடன், தரமான இரும்பை தயாரித்து, வெற்றி பெற்றார்.
- நடுத்தெரு நாராயணன்