
அன்புள்ள, அம்மாவுக்கு —
நான், 24 வயது பெண். எனக்கு ஒரு சகோதரி. வயது: 27. நாங்கள், இருவரும் தோழிகள் போல் தான் பழகுவோம். ஒரே பள்ளியில் தான் படித்தோம். பேச்சு, கட்டுரை போட்டிகள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கெடுத்து, பரிசுகள் வாங்கி குவிப்போம்.
'இவர்கள் இருவரும் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது...' என்று, மற்ற மாணவர்கள் சொல்லும் அளவுக்கு, எங்களது பங்களிப்பை தருவோம்.
பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும், கல்லுாரியில், நான் விரும்பிய, 'கோர்ஸ்' இல்லாவிட்டாலும், 'என் சகோதரி படிக்கும் அதே கல்லுாரியில் தான் படிப்பேன்...' என்று வேறு ஒரு துறையை தேர்ந்தெடுத்து படித்தேன். அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருப்போம். எல்லா விஷயங்களை பற்றியும் பேசுவோம்; விவாதிப்போம்.
'இவர்கள் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டியுள்ளது...' என்று அலுத்துக் கொள்வர், பெற்றோர்.
சமீபத்தில், என் சகோதரிக்கு திருமணமானது. திருமணத்துக்கு வேண்டியது அனைத்தும், இருவரும் சேர்ந்து செய்தோம்.
சகோதரி, புகுந்த வீடு சென்றதிலிருந்து, எதையோ இழந்தது போல் இருந்தது. மனதை சமாதானப்படுத்தி, மேற்படிப்புக்கு விண்ணப்பித்து, படித்து வருகிறேன்.
ஆரம்பத்தில், அடிக்கடி போனில் பேசுவாள், என் சகோதரி. ஆனால், இப்போதெல்லாம் என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள். ஏதோ வேலையாக இருப்பாள் என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்வேன். எனக்கும் படிக்கும் வேலை இருந்ததால், அதில் கவனம் செலுத்தினேன்.
ஒருமுறை, அவள் வீட்டுக்கு வந்தபோது, பட்டும் படாமலும் பேசினாள். அதேபோல், பெற்றோருடன், அவள் புகுந்த வீட்டுக்கு சென்றபோது, அந்நியர் போல நடத்தினாள். இது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
பெற்றோரிடம் சொன்னேன்.
'இனி, அவளுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்யாதே...' என்றனர்.
நேரிடையாக, என் சகோதரியை கேட்டதற்கு, 'நன்கு படித்து, வேலைக்கு போக பார்...' என்று கூறுகிறாள்.
இதெல்லாம் எனக்கு மன வருத்தத்தை தருகிறது. மீண்டும் என் சகோதரியிடம் மனம் விட்டு பேச முடியாதா?
ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாள், அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன்னையும், உன் பெற்றோரையும் அக்கா உதாசீனம் செய்வதற்கான காரணங்களை கீழே பார்ப்போம்.
* 'ஆக்சிடோசின்' என்ற நேச ஹார்மோன் சமூக பிணைப்பையும், பரஸ்பர நம்பிக்கையையும், நெருக்கத்தையும், பச்சாதாபத்தையும், கருணையையும் மனித மனங்களுக்கு பரிசளிக்கிறது. அக்காவுக்கு, 'ஆக்சிடோசின்' சுரப்பு, குறைவாக இருக்கலாம்.
* தங்கை, நம்மை விட அழகாக இருக்கிறாள். இன்னும் திருமணமாகவில்லை. அவள் நம் கணவரை கவர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்பில், அக்கா இருக்கக் கூடும்.
* கணவர் தரும் முழுமையான தாம்பத்தியத்தால் உலகம், சமூகம், பெற்றோர் மற்றும் உடன்பிறப்பை, 'செலக்டிவ் அம்னேஷியா' கொண்டு, கசந்து துறந்து விட்டாளோ அக்கா!
* திருமணம் நடத்திய விதத்தில் நகை நட்டு சீர்செனத்திகள் செய்த வகையில், பெற்றோரின் மீது அதிருப்தியாக இருந்தாலும் இருப்பாள், அக்கா. நீதான் பெற்றோரை துாண்டி விட்டு, குறைவாக செய்ய செய்திருக்கிறாய் என, உன் மீதும் சந்தேகப்படுகிறாளோ என்னவோ?
* முருங்கை மரத்திலிருந்து ஒரு கிளையை வெட்டி மண்ணில் நட்டு வைத்தால், அது தனி மரமாக வளர்ந்து நிற்கும். அப்படிதான் பெண்களும். பிறந்த வீட்டிலிருந்து ஒரு பெண்ணை துண்டித்து புகுந்த வீட்டில் நட்டால், அந்த பெண், புகுந்த வீடு மரமாக பூத்து குலுங்குவாள்.
* நட்பையும், உறவையும் யாரும், யாரிடமும் யாசகம் கேட்டு வளர்க்க முடியாது. ஆண்டுக்கு இருமுறை, அக்காவுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி எடுத்து போய் அவளை பாருங்கள். காலை சென்று மாலையில் திரும்பி விடுங்கள்.
* நீயும், அக்காவும் ஒரே குக்கர் இட்லிகள். அக்கா, கல் போல கனத்தால், தங்கை, நீயும் கல் போல கனப்பாய். உறவுகளையும், நட்புகளையும் நீ எப்படி கையாள்கிறாய் என்பதை, உன் வட்டத்தில் விசாரித்தால், உன் சாயம் வெளுத்து விடும்.
* பொறாமையும், அகங்காரமும், சுயநலமும், நன்றி மறத்தலும், உறவு - நட்பு பேணலுக்கு எதிரான பெருங்கேடு. உலகின், 800 கோடி மக்களும், ஒருவருக்கொருவர் கண்ணுக்கு தெரியாத நுண்ணிழைகளால் இணைக்கப்பட்டுள்ளோம். சேர்ந்தே வாழ்வோம், சேர்ந்தே வீழ்வோம்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.