
கிரீஸ் நாட்டில், அலெக்சாண்டர் ஆட்சியில் இருந்தபோது, டியோண்டஸ் என்ற கடல் கொள்ளைக்காரனை, கைது செய்து, விசாரணைக்காக கொண்டு வந்து நிறுத்தினர்.
அவனை ஏற இறங்க பார்த்து, 'இத்தகைய நாச வேலைகளை செய்ய உனக்கு எங்கிருந்து துணிவு வந்தது?' என்று கேட்டார், அலெக்சாண்டர்.
'அரசே, உலகத்தையெல்லாம் அடக்கியாள வேண்டுமென்ற துணிவு, உங்களுக்கு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்து தான், எனக்கும் இந்தத் துணிவு வந்தது...' என்றான்.
'என்னையே எதிர்த்து பேசுகிறாயா?' என்றார், அலெக்சாண்டர்.
'உண்மையைத் தான் சொல்கிறேன், அரசே... என்னிடம், ஒரு கப்பல் இருப்பதால், நான், கொள்ளைக்காரன் என்று பேசப்படுகிறேன். தங்களிடம், 40 போர் கப்பல்கள் இருப்பதால், மாவீரன் என்று புகழப்படுகிறீர்கள்.
'நாம் இருவரும் செய்யும் செயல் அளவில் சிறிது பெரிதே தவிர, வேறு எதுவும் ஒற்றுமை இல்லையே...' என்றான், டியோண்டஸ்.
இதை கேட்டு, வேறு எதுவும் பேசாமல், அவனை விடுதலை செய்தார், அலெக்சாண்டர்.
ஜார்ஜ் டவுன் நகர மைதானத்தில், கால் பந்து போட்டி, மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. பந்தை உருட்டியபடி, வெகு வேகமாக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர், இளைஞர்கள்.
ஒரு குழு ஆட்டக்காரர்களில், ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு நீக்ரோ இளைஞனும் ஒன்று சேர்ந்து, நன்றாக ஒத்துழைத்தனர். பந்தை லாவகமாக உதைத்து சென்று, கோல் மேல் கோலாக போட்டு, அந்த குழுவுக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
ஆட்டம் முடிந்தது. அந்த இரு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி, வாழ்த்திக் கொண்டனர்.
'நன்றாக விளையாடினாய்...' என்றான், அமெரிக்க இளைஞன்.
'மிக்க நன்றி...' என்றான், நீக்ரோ வாலிபன்.
அரிசியும், எள்ளும் கலந்த கலவையாக காட்சியளித்த அந்த இணைந்த கரங்களில் ஒன்று, கென்னடி உடையது. ஆம், பல நீக்ரோ இளைஞர்களுடன் சேர்ந்து தான், கால்பந்து போட்டி விளையாடினார், கென்னடி. அவரைப் பொறுத்தவரை, என்றுமே நிற வேறுபாடு இருந்ததில்லை; எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம் தான்.
சீரியோ என்ற அந்த இளைஞனிடம் விடைபெற்று, பந்தய மைதானத்திலிருந்து புறப்பட்டார், கென்னடி.
அவர் உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை, அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான், அந்த நீக்ரோ இளைஞன்.
இவரை எங்கோ பார்த்துள்ளோமோ என, அவரை பற்றி விசாரித்தான். அப்போது, 'அவர் தான் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி. காங்கிரஸ் மெம்பர். சமீபத்திய தேர்தலில், 29 வயது இளைஞர் ஒருவர் ஜெயித்தாரே அவரே தான் இவர்...' என்று கூறினர்.
நீக்ரோ இளைஞன் மட்டுமல்ல, அப்போது, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மற்ற அமெரிக்க இளைஞர்களும், திகைத்தனர்.
உலகப் புகழ்பெற்ற பிரமுகர்களை கவர்வதில் பெரும் புகழ்பெற்ற பெண்மணி ஒருவர், ஒருமுறை, பெர்னாட்ஷாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ளும் எண்ணத்தில், ஒரு அழைப்பு சீட்டு அனுப்பினார்.
அதில், தன் பெயர், விலாசம் எழுதி, 'இந்த பெயர் கொண்ட மாது, வரும் செவ்வாயன்று, மாலை 4:00 மணிக்கு மேல், 6:00 மணி வரை, வீட்டில் இருப்பாள்...' என, எழுதியிருந்தாள்.
அதே சீட்டில், 'மிஸ்டர் பெர்னாட்ஷாவும் அப்படியே அந்த நாளில், அதே நேரத்தில் அவரும், அவரது வீட்டில் இருப்பார்...' என்று எழுதி, அந்த பெண்மணிக்கு அனுப்பினார், பெர்னாட்ஷா.
இந்த பதிலை கண்ட அப்பெண்மணியின் மனநிலைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
- நடுத்தெரு நாராயணன்