sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

என்றென்றும் அவள்!

/

என்றென்றும் அவள்!

என்றென்றும் அவள்!

என்றென்றும் அவள்!


PUBLISHED ON : மே 05, 2024

Google News

PUBLISHED ON : மே 05, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைக்கு அருகில் மிருதுவாகக் கேட்டது. ரேவதியின் குரல், 'எங்க, அஞ்சடிக்கப் போகுது எந்திரிங்க... இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள். விரல்கள், ராம்ஜியின் நெற்றியை வருடின. மென்சிரிப்பும், மலர்ச்சியும் சேர்ந்த நெகிழ்ச்சி.

'ம். சரி சரி... தெரியும் எனக்கு. இன்னும் அஞ்சு நிமிஷத்து எந்திரிக்கிறேன்.' என்று அழுத்தமாகச் சொன்னார், ராம்ஜி,

மொபைல்போனை எடுத்து மென்மையாக அவர் கையில் வைத்து, “உங்க, 'வாக்கிங்' நண்பர், போன் பண்ணுகிறார். இந்தாங்க பேசுங்க' என்றான், ரேவதி.

'குட் மார்னிங், சால்ஜி.

இன்னிக்கு உனக்கு, 'ரிடையர்மென்ட் இல்லையா' வாழ்த்துகள் நண்பா. இன்னிக்கு கிளித்தோப்பு வரைக்கும், 'வாக்கிங்' போகலாமா? அந்த இடம் உனக்குப் பிடிக்குமே. என்று சிரித்தார். பூபதி.

'குட் மார்னிங், பூபதி, 10 நிமிடத்தில் ரெடியாகி வாசல்ல நிக்கிறேன்.

''சரிப்பா, 'கிரேட் டே வெச்சுடறேன்.'

காலை வேலைகளை முடித்து, காத்திருந்து, ரேவதி நீட்டிய பில்டர் காபி குடித்து, நடைப்பயிற்சி காலணி அணிந்து, வாசலுக்கு வந்தார். பின்னாலேயே நின்று. வழி அனுப்பி வைத்தாள், ரேவதி.

மனதில் ஓடும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பூபதி பேசிக்கொண்டே வந்த எதுவும் பதியவில்லை.

எழுத்தராக ஆரம்பித்த வாழ்வு. கடின உழைப்பும், கட்டுப்பாடும், சிறு லட்சியங்களுமாக இன்று, அசிஸ்டென்ட் ஜெனரல் மானேஜர், 46 ஆண்டு அலுவலக வாழ்க்கை முற்றுப் பெறப் போகிறது.

எத்தனை சவால்கள், எவ்வளவு ஊழியர்கள், எத்தனை சோதனைகள், எவ்வளவு தோல்விகள், எத்தனை வெளிச்சங்கள். ஆனால், கடைசியில் எஞ்சி நிற்பது என்ன?

பெயர், புகழ், பெருமிதம். பெருமை அப்படித்தான் அவருக்குத் தோன்றியது.

'சார் இந்த ரெயின்போ கம்பெனிக்கு நாலு மெயில் போட்டுட்டேன். புரியாதது போலவே நடிக்கிறான். அவன். 'கொட்டேஷ'னுக்கும் நம் கம்பெணி வெச்சிருக்கிற, 'மினிமம்' தொகைக்கும் சம்பந்தமே இல்லை சார். தினம், 10 ரிமைண்டர் போடறான். ப்ளீஸ் சார்... என்ன பண்ணலாம்ன்னு ஐடியா சொல்லுங்க...' என்று ஓடி வருவார், நடராஜன்.

புன்னகைத்தபடியே, 'டோண்ட் ஒர்ரி நட்டு, பார்த்துக்கலாம். பதில் போட்டாச்சு இல்லையா? ஜஸ்ட் விட்டுடுங்க, பெரிசா எடுத்துக்காதீங்க...' என்பார் ராம்ஜி.

'பார்த்து பார்த்து கவனிக்கிறேன் சார் வீட்டை. ஆனாலும் கணவருக்கு திருப்தியே இல்லை. எப்பவும் குறை சொல்லிகிட்டே இருக்கார். என்னால் அமைதியா வேலை பண்ணவே முடியல. சண்டை வாக்குவாதம்ன்னு தினமும் ரகளையா இருக்கு சார்...'

கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்பாள், யாமினி.

'சரிம்மா, கவலைப்படாத. குடும்ப விழான்னு. இந்த மாதக் கடைசில நம் கம்பெனியில், 'கெட் டு கெதர்' இருக்கில்லையா. அவரை அழைச்சுகிட்டு வா. நான் பொறுமையா பேசி, புரிய வைக்கிறேன்...'

தந்தையாக தன்னை பாவித்து, யாமினியின் கணவர், தினகருடன் மனம் விட்டுப் பேசினார். யாமினியின் அலுவலகத் திறன் பற்றி பேச்சோடு பேச்சாக சொல்லியது.

மற்ற ஊழியர்கள் அவள் மேல் மதிப்புடன் இருப்பதை கோடிட்டுக் காட்டியது என, அவர், அவனுடன் செலவழித்த பதினைந்து நிமிடங்களில், தன் வாழ்வில் நட்சத்திர ஒளியே வந்து விட்டதாக சொன்னாள். யாமினி.

கென்னி, ரங்கராஜன், அரவிந்தன், சேகர் சித்ராதேவி என்று அத்தனை பேரும், 'சார் சார்...' என்று வாய் நிறைய அழைத்து, மனம் விட்டு சிரித்து, சொந்த பெரியப்பா, சித்தப்பா போல பாவித்து, பழகினர்.

தலைமை அலுவலகமோ, மண்டல அலுவலகமோ யார் வந்து போனாலும் அவருடைய கிளையைப் பற்றி சிறப்பான வரிகளை ஆசையாக எழுதி விட்டும் போவர்.

கேன்டீன் நடந்தும் கேசவன், ஹவுஸ் கீப்பிங் டீம் வேலம்மா, செக்யூரிட்டி கோவிந்தன் என்று யாருமே அவர் முகம் பார்த்ததும், மலர்ந்து, வணக்கம் சொல்லி அவ்வளவு அன்பு காட்டுவர்.

அவர் மனம் நெகிழ்ச்சியில் இளகியது. எல்லாருக்கும் பிடித்தமானவராக வாழ்கிற வாழ்வு எவ்வளவு பாக்கியமானது? இளகிய மனது. பெற்றோரால் வாய்ந்தது.

கனிவும், கண்ணியமும். மனிதனின் ஆதி குணம் என்று, ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தது.

முடிந்த வரை அனைத்தையும் நேசிப்பது என்பது, நானாக வகுத்துக் கொண்ட எளிய கோட்பாடு, பிரிவு உபசார நிகழ்ச்சியில் அனைவருமே, கண்கலங்கினர்.

'சார். அலுவலக வாழ்க்கையில் அன்பு, பரிவு இதுக்கெல்லாம் இடமே இருக்காதுன்னு நினைத்தேன். ஆனால், என்னை, தன் மகள் போலவே என்றும் நினைக்கிற மேல் அதிகாரியாக, ராம்ஜி சார் இருந்தார்'.

'சார், நீங்க தான் எனக்கு குரு. சொல்லப்போனால், இப்போதும் ஒரு சிறிய பிரச்னையில் இருக்கிறேன். நாளையே சார் வீட்டுக்குப் போய் அவரிடம் ஆலோசனை கேட்பேன்.'

'அந்த நாற்காலியில், சார் தவிர வேறு யாரால் பொருத்தமா இருக்க முடியும்? நாளை முதல் அந்த நாற்காலியை பார்க்கும் போதெல்லாம் மனசு வலிக்குமே. சார் ப்ளீஸ்... நீங்க தினம் ஒருமுறை வந்து போகணும், அப்பதான் இந்த, 'பில்டிங்' கூட ஆறுதலா உணரும்.'

'தன்மையா நடப்பது மட்டுமல்ல. ரொம்ப திறமைசாலி, சார். இந்த போஸ்ட்டுக்கு வந்த பிறகு தான் இந்த, 'பிராஞ்ச்' எட்டு மடங்கு லாபம் ஈட்டுச்சு. நமக்கெல்லாம் ஆண்டுக்கு ரெண்டு முறை. 'இன்சென்டின்' கிடைக்கிறதுக்கு, சாம்ஜி சார் தான் காரணம். எங்களை இப்படியே விட்டுட்டுப் போயிடாதீங்க, உங்க, 'கைடன்ஸ்' எப்பவும் வேணும். நான் வரலாமா சார் உங்களைப் பார்க்க..?'

ஊழியர்கள் ஒருத்தர் விடாமல் பேசியவை வெறும் பாராட்டுகள் அல்ல என்று நினைத்தபோது, அவர் மனம் கசிந்தார். மகிழ்ச்சி திரம்பிய நெஞ்சம் பரவசத்தில் திளைத்தது.

“நானும் உங்களை ஊழியர்கள் என்று மட்டும் நினைத்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள் போல தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே காலம் போனது. மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. எனக்கும் உங்களை எல்லாம் பிரிவதற்கு மனக்கஷ்டமாக இருக்கிறது.

'என்ன செய்வது, ஓய்வும், பிரிவும் காலத்தின் ஆணைகள் அல்லவா? ஒன்றே ஒன்று சொல்கிறேன், என் வீடு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும். நானும் அடிக்கடி வருகிறேன். ஒத்துழைப்பிற்கும். அன்பிற்கும் நன்றி,' ராம்ஜி பேசி, முடித்தபோது, அமைதியும் கண்ணீரும் மட்டுமே எஞ்சி இருந்தன.

மாதம் ஓடியது.

வண்டி சாவியுடன் வந்து தின்றான், மகன். 'அப்பா, எங்கேயாவது போகணும்ன்னா சொல்லுங்க. ஆபிஸ் போற வழியில், 'டிராப்' பண்ணுகிறேன்.”

'இல்ல, நீ கிளம்புப்பா.”

அடுத்து, “அப்பா, கன்னிமா பக்கம் போனால் இந்த, 'புக்' எடுத்துகிட்டு வாங்க. 'தி லாஸ் ஆப் ஹுயூமன் நேச்சர்' தேவைப்படுது,' என்றாள், மகள்.

“சரிம்மா, பார்க்கிறேன்.”

வாசல் பக்கம் வந்து நின்றார். 10:00 மணிக்குள் தெரு வெறிச்சோடி இருந்தது. மொபைல்போன் அடிப்பது போல் மனதில் ஒலி விரைந்து வந்து பார்த்தார். இல்லை, அது அமைதியாகக் கிடந்தது.

வாசல்பக்கம் ஏதோ நிழல் தெரிவது போல் பிரமை. வேகமாகப் போய் பார்த்தார். வேப்பமர நிழல் ஆடியது தவிர வேறில்லை.

என்ன உலகம் இது, என்ன வகையான மனிதர்கள் எல்லாரும்? ஒரு அழைப்பு இல்லை, யாருடைய வருகையும் இல்லை.

ஓய்வுக்கு பின், ஒருமுறை இவர் அலுவலகம் போன போது உட்காரச் சொல்லி, எல்லாரும் அவரவர் வேலையை பார்த்தனர். யாமினியோ, நட்டுவோ தவறிக்கூட அவர் பக்கம் திரும்பவில்லை. முதல் வாரமல்லவா, சரி வேலைப்பளு என்று சமாதானம் செய்து கொண்டார். அடுத்த வாரம் போன போதும், அப்படியே தான் இருந்தனர். அதற்கு அடுத்த வாரமும், அதே நிலைமை என்றபோது தான், அவருக்கு மண்டையில் ஒங்கி குட்டியது போலிருந்தது.

உண்மை உலகம் புரிந்த போது, ஏற்பட்ட அதிர்ச்சியில், நெஞ்சு வலிப்பதை உணர்ந்தார். தனக்குக் கிடைத்த மதிப்போ, மரியாதையோ தன் நாற்காலிக்கும், பதவிக்கும் கிடைத்தவை என்ற உண்மை, தீயைப் போல சுட்டது.

'வெயில் ஏறிட்டது. உள்ளே வாங்க, இன்னிக்கு, 'வாக்கிங்' கூட போகல. முகமே வாடியிருக்கு. ஏங்க, தலை வலிக்குதா?' என, அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள், மனைவி ரேவதி.

'அய்யோ, ஆமாங்க... சூடு தெரியுது, புழுங்கரிசி கஞ்சி வைக்கிறேன். கொஞ்ச நேரம் படுங்க,'என, தோள் பற்றி இழுத்து வந்து படுக்க வைத்தாள். திரைச்சீலையை இழுத்து ஜன்னலை மூடி, மின் விசிறியைக் குறைத்தாள்.

ஐந்து நிமிடங்களில் அற்புதமான நொய் கஞ்சியைத் தயாரித்து வந்து குடிக்க செய்தாள். கதவை சாத்திக் கொண்டு போனாள். கண்கள் சொக்க, உறக்கம் தானாக வந்து அரவணைத்தது.

மதியம் எழுந்ததும், மிளகு ரசம், நார்த்தங்காய் என்று அருமையான சுவையுடன் உணவு தொண்டையில் இறங்கி, மனதின் வெம்மையை குறைப்பதை உணர்ந்தார்.

'மாத்திரையை ராத்திரி போட்டுக்கலாம். இப்ப எப்படி இருக்கு, கால் பிடித்து விடட்டுமா? சளி, காய்ச்சல்னு வந்து படுத்ததே இல்லிங்களே. பார்க்கவே ரொம்பவே கஷ்டமா இருக்குது.' என்று. கண்களில் நீர் பளபளக்க சொன்ன ரேவதியின் கைகளைப் பற்றினார்.

'ரேவதி... என்னை மன்னிச்சுடும்மா,' என்றார்; மலை அடிவாரத்திலிருந்து அழைப்பது போல இருந்தது. குரல். 'அட, ஏங்க... பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?' என்று. பதைத்துப் போனான்.

'இல்ல ரேவதி, பெரிய மனுஷி நீ. பெரிய வார்த்தைக்கு உன்னை விட தகுதியா யாருமே இல்லை. என்னை, எனக்காக மட்டுமே ஏத்துகிட்டு, அன்பும், மதிப்பும் தருகிற தேவதை நீ...' என்று அவர் தழுதழுத்தபோது, புரிந்தும், புரியாமலும் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

- உஷா லட்சுமி






      Dinamalar
      Follow us