sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஒரு ஞாயிற்றுக்கிழமை...

/

ஒரு ஞாயிற்றுக்கிழமை...

ஒரு ஞாயிற்றுக்கிழமை...

ஒரு ஞாயிற்றுக்கிழமை...


PUBLISHED ON : மே 05, 2024

Google News

PUBLISHED ON : மே 05, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராதிகா பார்த்துக் கொண்டே இருந்தாள். இன்னமும் இவள் கணவன் முத்து எழுந்திருக்கவே இல்லை. இப்போது தான் திருமணம் முடிந்து, தன் வீட்டிற்கு புது மனைவியுடன் வந்திருக்கிறான், முத்து.

இன்று வேலைக்கு போக வேண்டும் என்றவன், இப்படி துாங்கிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

படுக்கையில் கிடந்த முத்துவை புரட்டி, ''என்னங்க, வேலைக்கு போக வேண்டாமா? காபி குடிச்சுட்டு குளிச்சு தயாராகுங்க,'' என்றாள், ராதிகா.

சட்டென்று எழுந்து உட்கார்ந்தான், முத்து.

இன்று, 'டூட்டி'க்கு போக வேண்டிய நாளாச்சே... மறந்தே போனது. படித்த படிப்புகள் எதுவும் பயனளிக்காமல், ஒரு அப்பார்ட்மென்ட்டில், இரவு நேர காவலாளியாக தற்காலிக வேலையில் சேர்ந்தான். தன்னுடைய வேலையை பற்றி, யாரிடமும் சொல்லவே இல்லை.

''இன்னைக்கு வேலைக்கு போகணுமே... இன்னும் உட்கார்ந்து யோசிச்சிட்டு இருக்கீங்க? மிச்சம் மீதி கனவு இருந்தால், நாளைக்கு பார்த்துக்கலாம். சீக்கிரம் எழுந்திருங்க,'' என்று அதட்டினாள், ராதிகா.

அபார்ட்மென்ட் செகரட்டரி ரொம்பவும் கண்டிப்பானவர். ஞாயிற்றுக்கிழமை கூட, 'லீவ்' கொடுக்க மாட்டார்.

'இப்போது தானே வேலைக்கு சேர்ந்திருக்க, ஆறு மாசம் போகட்டும். அப்புறம், 'லீவ்' தரேன்...'

ராதிகாவிடம் மெல்ல, வேலையை பற்றி, தன்னுடைய இக்கட்டான நிலையை பற்றி சொன்னபோது, அவள் பிரமித்துப் போனாள்.

ஒரு ஞாயிறு கூட, ஜாலியாக வெளியே போக முடியாமல், இப்படி துாங்கி வழிவது தான் வாழ்க்கையா? பகல் முழுவதும் துாங்கும் கணவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

''என்னால் இப்படி வவ்வால் மாதிரி பகலில் துாங்கி, ராத்திரி காவல் காக்கிற உங்களோட வாழ முடியாது,'' என்று, கோபமாக சொன்னாள்.

''அய்யய்யோ, அப்படி சொல்லாத ராது. 'லீவ்' கேட்டிருக்கேன், அவங்க கண்டிப்பா ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது தரேன்னு சொல்லி இருக்காங்க. கண்டிப்பா தருவாங்க பாரேன்,'' என்றான்.

அந்த வாரம் இவனுக்கு, 'லீவ்' கிடைக்கவில்லை.

'இன்று, எங்கள் அப்பார்ட்மென்ட்டில் ஏதோ விழாவாம்...' இப்படி ஒவ்வொரு வாரமும் ஏதாவது காரணத்தால், 'லீவ்' கிடைக்கவில்லை.

'வாழ்க்கை இப்படியே போய் விடுமா?' ராதிகாவுக்கு கோபம் வந்தது.

''இத பாருங்க, இனிமே இந்த வேலை வேணாம் விட்டுடுங்க. வேற ஏதாவது வேலை தேடிக்கங்க,'' என்றாள்.

''தெரியாம பேசாத ராது. எத்தனை கஷ்டப்பட்டு இந்த வேலையை வாங்கி இருக்கேன் தெரியுமா-, பொறுத்துக்கோ, கொஞ்ச நாள் தான். நான் செகரட்டரிகிட்ட சொல்லி கண்டிப்பா ஞாயிற்றுக்கிழமை தோறும், 'லீவ்'க்கு ஏற்பாடு பண்றேன்,'' என்று சமாதானப்படுத்தினான்.

'அந்தந்த காலத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்க வேண்டாமா? கிழவனான பிறகு முடியுமா...' ராதிகாவுக்கு எரிச்சலும், கோபமும் வந்தது.

அன்று காலை, மிக சந்தோஷமாக வந்தான், முத்து. அன்று ஞாயிற்றுக்கிழமை.

''செகரட்டரிகிட்ட, 'லீவ்' சொல்லிட்டு வந்துட்டேன். இன்னிக்கு நான் வேலைக்கு போக வேண்டாம். இந்த ஞாயிற்றுக்கிழமை நம்மளோட நாள், மிக மகிழ்ச்சியான நாள். சாயங்காலம் சினிமாவுக்கு போறோம். அப்புறம் ராத்திரி ஹோட்டலில் டின்னர். நீ ஒண்ணும் சமைக்க வேண்டாம்.''

இவளுக்கு வெட்கமாக இருந்தது.

பிற்பகல் நன்றாக துாங்கினான்.

மாலை, 4:00 மணி ஆயிற்று.

''நான் மார்க்கெட்டுக்கு போய், பூ, பழம் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்,'' என்றான் முத்து.

'ராதிகாவுக்கு, ஒரு நல்ல புடவை வாங்கி வந்து, திடீரென்று பரிசளிக்க வேண்டும்...' என்று நினைத்து, பணம் எடுத்துக் கொண்டான்.

''சீக்கிரம் வந்துடுங்க அதுக்குள்ள நானும் தயாராகிறேன்,'' என்று சொல்லி, சமையல் அறைக்குள் நுழைந்தாள். நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த சமையல், 'ரெசிபி' எல்லாம் தேடினாள். ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யலாமா என்று முடிவு செய்து, செயலில் இறங்கினாள்.

கண்ணாடியில் தன் முகம் பார்த்து, பொட்டை சரி செய்து கொண்டாள்.

முத்து வரும்போது, மல்லிகைப்பூ வாங்கி வருவான். அதற்காக நிறைய ஹேர்பின் எடுத்து வைத்தாள்.

மணி, 6:00 இன்னும் முத்து வரவில்லை. எங்கேயாவது பேரம் பேசி நின்று கொண்டிருப்பார் என்று நினைத்தாள். 7:00 மணி ஆனதும், இவளுக்கு பயம் வந்தது. அப்போதுதான், முத்து தன் மொபைல் போனை அறையில் மறந்து வைத்துவிட்டு போயிருப்பதை பார்த்தாள்.

'எப்படி அவனை தொடர்பு கொள்வது?'

மணி, 8:00. இன்னும், முத்து வரவில்லை. வாசலைப் பார்த்தாள், ஆள் நடமாட்டமே இல்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இல்லையா, எல்லாரும் அவரவர் வீட்டில், 'டிவி'யில், சினிமா பார்த்துக் கொண்டிருப்பர். 'கடவுளே, என்ன கொடுமை இது. எப்படி முத்துவை தொடர்பு கொள்வது?'

அப்போது, மொபைல் போனில் அழைப்பு வரவே, விழுந்தடித்து ஓடி போய் எடுத்தாள்.

ஏதோ ஒரு  மருத்துவமனையிலிருந்து, 'முத்து, ஐ.சி.யு.,' என்றனர். இவளுக்கு எதுவுமே புரியவில்லை. கடவுளே என்று கதறியபடி, அந்த மருத்துவமனையின் விலாசம் கேட்டு, பதறி ஓடினாள்.

ரிசப்ஷனில் முத்துவின் பெயரைச் சொல்லி ராதிகா கேட்டபோது, ஐ.சி.யு.,வுக்கு வழி காட்டினர்.

மருத்துவமனை வளாகத்தில், பைத்தியக்காரி போல ஓடினாள். தீவிர சிகிச்சை பிரிவு அறையின் கண்ணாடிக் கதவு மூடி இருந்தது. வெளியே யாரையும் காணோம். அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து, கதவு திறப்பதற்காக, காத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, மருந்து, மாத்திரை கவருடன் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தான், முத்து.

ஓடி போய், ''மாமா...'' என்றாள்.

''உங்க ஒய்பா?'' என்று, அந்தப் பெண் கேட்க, ஆமாம் என்பது போல், தலை அசைத்தான், முத்து.

''உங்க புருஷன், ஒரு தெய்வப் பிறவிம்மா. எம் புருஷனுக்கு இன்னைக்கு பிறந்தநாள். கடைக்கு போயி கேக் வாங்கிட்டு வரேன்னுட்டு போனாரு. காதல் கல்யாணம் பண்ணிட்டதால, எங்களுக்கு உறவுன்னு யாரும் கிடையாது. அது பழைய கதை.

''கேக் வாங்கிட்டு வர்ற வழியில், ஒரு கார், இவரை இடிச்சு தள்ளிட்டு நிக்காம போயிருக்கு. அந்த சமயத்தில் தான், உங்க வீட்டுக்காரர் அந்த வழியா வந்திருக்காரு. நடுவழியில் துடிச்சுட்டு கிடந்த எங்க வீட்டுக்காரரை ஆம்புலன்ஸ் வரவழைச்சு, அவரை கொண்டு வந்து இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கார்.

''ரத்தம் கொடுத்து, கையில் இருக்கிற பணத்தை எல்லாம் கட்டி... நான் என்னன்னு சொல்லுவேன்... அப்புறம், என் வீட்டுக்காரருடைய பாக்கெட்ல இருந்த, 'விசிட்டிங் கார்டை' பார்த்து, என் முகவரி கண்டுபிடிச்சு, என்னை கூட்டிட்டு வந்து, நான் எப்படி நன்றி சொல்லுவேன் அம்மா!

''இதோ இப்ப கூட, மருந்து, மாத்திரை எல்லாம் வாங்குவதற்கு என் கூட, 'பார்மசி'க்கு துணைக்கு வந்தார். இது போல கணவன் கிடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சுருக்கணும். இவர் மட்டும் இல்லையென்றால், என் வீட்டுக்காரர் அனாதைப் பிணமா நடு வீதியில் கிடந்திருப்பார். உங்க புருஷன் நல்லா இருப்பாரும்மா, நீங்களும் நல்லா இருப்பீங்க,'' என்றபடி இவள் கை பிடித்து அழுதாள், அந்த பெண்.

''மொபைலை வீட்டுலேயே விட்டுட்டேன். உனக்கு, தகவல் சொல்ல முடியல. இப்பதான் இங்க இருக்கிறவங்ககிட்ட சொல்லி, உனக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன்,'' என்ற முத்துவால் மேலே பேச முடியவில்லை.

அப்போது, ஐ.சி.யு.,வின் அறைக் கதவு திறக்க, ''யாராவது ஒருத்தர் போங்க,'' என்று, நர்ஸ் கூறினாள்.

அழுதபடி அறைக்குள் நுழைந்தாள், அந்த பெண்.

''என்ன மன்னிச்சிடு, ராது. இந்த ஞாயிற்றுக் கிழமையும்...'' என்ற முத்துவை மேலே பேச விடாமல் தடுத்து, அவன் கையை பிடித்து கொண்டாள், ராதிகா.

'கவலைப்படாதீங்க... இந்த ஞாயிறு தான் விசேஷமான ஞாயிறு. நாம ரெண்டு பேரும் அந்த அம்மாவுக்கு துணையா இங்கேயே, இந்த வராண்டாவிலேயே காத்திருப்போம்.

''அவங்களுக்கு உதவி தேவைப்படும், செய்து தரலாம். இது தாங்க பெருமையான சந்தோஷமான ஒரு ஞாயிறு. மறுபடி ஒரு ஞாயிற்றுக்கிழமை வராமலா போகும்?'' என்று, ராதிகா கூறியதும், சிலையாக நின்றான், முத்து.

விமலா ரமணி






      Dinamalar
      Follow us