
பா - கே
அலுவலகம், மதிய உணவு இடைவேளை...
ஆங்கில இதழ் ஒன்றை பிரித்து வைத்தபடி, பாதி துாக்கம், பாதி விழிப்புமாக எதையோ துழாவிக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
அப்போது, ஆங்கில இதழ் ஒன்றில், பொருளாதார சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருபவரும், மாமாவின், 'கிளாஸ் - மேட்'டுமான (பூப்போட்ட, 'கிளாஸ்' என்று புரிந்து கொள்ளவும்.) நண்பர் ஒருவர், அவரை சந்திக்க வந்தார்.
மாமாவின் கேபினில், இருவரும் சன்னமான குரலில், ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்.
'என்னப்பா ரகசியம் பேசிட்டு இருக்கீங்க. எங்களுக்கும் சொல்லலாம்ல...' என்றார், 'திண்ணை' நாராயணன்.
நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அடுத்து, 'பட்ஜெட்' தாக்கல் செய்ய ஆயத்தமாவாங்க. வழக்கம் போல், துண்டு, வேஷ்டி எல்லாம் விழும் பற்றாக்குறை, 'பட்ஜெட்' தான் வருமோ, என்னமோ! அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்...' என்றார், மாமா.
'நம்பும்படி இல்லையே....' என்பது போல் இருந்தது, நாராயணனின் பார்வை.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மூத்த செய்தியாளர் குறுக்கிட்டு, 'முன்பு படித்த கதை ஒன்று நினைவுக்கு வருது...' என்றார்.
'நாணா வேலையை நீர் எடுத்துக் கொண்டீர். நான், டீ குடித்துவிட்டு வருகிறேன்...' என்று தன் நண்பரை அழைத்து, அங்கிருந்து சென்றார், மாமா.
கதை கேட்கும் ஆவலில், மூத்த செய்தியாளர் அருகில், நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தேன்.
கூற ஆரம்பித்தார், அவர்:
நிலத்திலே ஏர் உழுதுகிட்டிருந்தார், ஒரு வயசான ஆளு.
கிழிந்து போன ஒரு சின்ன துண்டை இடுப்பிலே கட்டியிருந்தார். தலையிலே ஒரு கந்தலை சுத்தியிருந்தார். உடம்பு முழுவதும் சேறு. வறுமையில் வாடுபவர் என்று, அவர் தோற்றத்திலேயே தெரிந்தது.
இருந்தாலும், அந்த ஆளு ரொம்ப, 'ஜாலி'யா பாட்டுப் பாடிக்கிட்டே ஏர் உழுதுகிட்டிருந்தார்.
உடம்பிலே தான் அவரு ஏழையே தவிர, மனசுல அவரு ஏழையா தெரியல.
அச்சமயம், வேட்டைக்கு சென்று, பரிவாரங்களோட அந்த பக்கம் திரும்பி வந்துக்கிட்டிருந்தார், அந்நாட்டு ராஜா. இந்த விவசாயியைப் பார்த்தார்.
'இந்த ஆளு ரொம்பவும் ஏழைங்கறது அவரைப் பார்த்தாலே பளிச்சின்னு தெரியுது. கட்டிக்கிறதுக்கு நல்ல துணியில்ல. உடம்போ இளைச்சுப் போயிருக்கு, வயிறு முதுகுல ஒட்டிக்கிட்டிருக்கு. கண்ணு குழி விழுந்து போயிருக்கு.
'முகத்தை பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது. ஆனாலும், இவ்வளவு உற்சாகமா பாடிகிட்டிருக்காரே...' என்று கூறி, ஆச்சரியமாக பார்த்தார், ராஜா.
சரி, அவருகிட்டே கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணி, அவர் அருகில் சென்றார்.
'ஐயா, பெரியவரே, கொஞ்சம் இப்படி வர முடியுமா?' என்றார், ராஜா.
'பொழுது போறதுக்குள்ளே இந்த வயல் பூராவும் உழவு ஓட்டியாகணும். அதனாலே பேசறதுக்கு நேரமில்லை...' என்றார், அந்த பெரியவர்.
'என்ன அவ்வளவு அவசரமா? மீதியிருந்தா நாளைக்கு உழுதுக்கக் கூடாதா? அது சரி, உனக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?' என விசாரிச்சார்.
'எனக்குன்னு சொந்தமா உள்ளங்கை அளவு நிலம் கூட இல்லை. இது, எங்க எஜமானனுடைய நிலம். இதை முழுதும் உழுது முடிச்சாத்தான் அவர் கூலி கொடுப்பார். நான் கூலிக்கு உழுதுக்கிட்டிருக்கேன். உங்ககிட்டே பேசிக்கிட்டிருந்தா அவருக்கு துரோகம் பண்ணினது மாதிரி ஆகும்...' என்றார்.
குதிரையை விட்டு இறங்கி வரப்பில் நடந்துக்கிட்டே அந்த பெரியவரிடம் பேச ஆரம்பிச்சார், ராஜா.
'ஒரு நாள் முழுதும் உழுதா, உனக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்?'
'எட்டணா கூலி கிடைக்கும்...'
'இவ்வளவு தானா? இதை வச்சுக்கிட்டு நீ எப்படி காலம் தள்ளறே?'
'ஒண்ணும் கவலை இல்லை...' என்றார்.
ராஜாவுக்கு, ரொம்ப ஆச்சரியமா போச்சு.
எட்டணா கூலி வாங்கற இவர் கவலை இல்லாம இருக்கார். ஏராளமான வசதியோட இருக்கிற நான், கவலை இல்லாம வாழ முடியலையேன்னு நினைச்சார்.
'அது சரி, எட்டணாவிலே எப்படி குடும்பம் நடத்தறே?' என்று கேட்டார்.
'எனக்கு கிடைக்கற எட்டணாவிலே, ரெண்டணா குடும்பத்துக்கு செலவழிக்கறேன். ரெண்டணா பழைய கடனுக்கு தர்றேன். ரெண்டணா தருமம் செய்யறேன். ரெண்டணா வட்டிக்கு கொடுக்கறேன். ஒரு குறையும் இல்லை...' என்றார்.
'ஒண்ணும் புரியலையே?' என்றார், ராஜா.
'ஐயா, எனக்கும், என் மனைவிக்கும் ரெண்டணா செலவாகுது. வயதான அம்மா, அப்பா இருக்காங்க. சின்ன வயசுலேயே என்ன காப்பாத்தினவங்க, அவங்க. அந்த கடனுக்கு ரெண்டணா செலவாகுது. அது பழைய கடன்.
'என் தங்கச்சி ஒருத்தி ஆதரவில்லாத நிலையிலே, தன் மகனோட என் வீட்டுலே இருக்கா. அவளுக்கும், அவன் மகனுக்கும் ரெண்டணா செலவு பண்றேன். அது தருமம்.
'எனக்கு, இரண்டு பிள்ளைங்க இருக்காங்க. அவங்களுக்கு ரெண்டணா செலவு பண்றேன். அது வட்டிக்கு குடுக்கறது மாதிரி. பிற்காலத்திலே அவங்க என்னை காப்பாத்துவாங்க.
'அந்த வகையிலே நான் திருப்தியோட வாழ்ந்துகிட்டிருக்கேன்...' என்றார், அந்த பெரியவர்.
ராஜாவுக்கு அர்த்தம் புரிந்தது. அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி, அந்த பெரியவருக்கே தானமா கொடுத்தார்.
கிடைக்கறதை எப்படி பங்கு போடறார், எப்படி திருப்தியா வாழறார், அப்படிங்கறதை புரிஞ்சுகிட்டு, இதே வழியில், மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு முடிவு பண்ணினார், ராஜா.
- இப்படி, மூத்த செய்தியாளர் கூறி முடிக்கவும், 'ஆஹா... எவ்வளவு அருமையா திட்டமிட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அந்த மனுஷன்...' என்று நினைத்தேன்.
அச்சமயம், சரசரவென்று உள்ளே வந்த லென்ஸ் மாமா, 'மணி... ஆசிரியரிடம், 'பர்மிஷன்' சொல்லிடு; நண்பருடன் வெளியே செல்கிறேன்...' என்றவாறு, தன் கேமரா பையைத் துாக்கிக் கொண்டு, நடையைக் கட்டினார்.
அவர்கள் எங்கே செல்வர் என்று சொல்ல வேண்டியதில்லை.
ப
தன்னுடைய நண்பனை கடைத் தெருவில் பார்த்தான், ஒருவன். உடனே ஓடிப்போய் பளார்ன்னு, ஒரு அறை கொடுத்தான்.
கன்னத்தை தடவிக்கிட்டே, 'ஏன்டா என்னை அறைஞ்சே?' என்று கேட்டான், நண்பன்.
'நீ ஏன்டா என்னை, ஒரு முட்டாள்ன்னு, என் மனைவிகிட்ட போய் சொன்னே?' என்று கேட்டான்.
'உன்னை ஒரு முட்டாள்ன்னு சொன்னதுக்காகவா, என்னை அறைஞ்சே?' என்றான், நண்பன்.
'அதுக்காக அறையிலே, அந்த ரகசியத்தை, நீ ஏன் எங்க வீட்டுல போய் சொன்னே? அதுக்காகத்தான் அறைஞ்சேன்...' என்றான், இவன்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.