
பி. பாலாஜி கணேஷ், சிதம்பரம்: நீங்கள் இப்போது, சைக்கிள் ஓட்டுகிறீர்களா?
இப்போது, சைக்கிள் ஓட்டுவதில்லை; கார் தான்; அதுவும் மூன்று கார். பொறுப்பாசிரியர் வாங்கிக் கொடுத்தது. முதலாவது, மசராட்டி, இரண்டாவது பி.எம்.டபிள்யூ., மூன்றாவது, ஜாக்குவார்!
இதில், மசராட்டியை எடுத்துக் கொண்டு, திருச்சி செல்லும்போது, உளுந்துார்பேட்டை, தமிழக அரசின் உணவு விடுதியில், 'பிரேக்பாஸ்ட்' முடித்து கிளம்பும்போது, வழியில் இருவர் காரை மறித்து, 'பைக்கில்' இருந்து இறங்கி வந்து, 'இந்த காரின் பெயர் என்ன...' என்று கேட்டனர்.
நான் பதில் சொன்னதும், 'என்ன... மசாலா ரொட்டியா?' எனக் கேட்டனர். அன்றிலிருந்து, மசராட்டி, எனக்கு, மசாலா ரொட்டியாகவே பெயர் வருகிறது!
* மு. கருப்பசாமி, சென்னை: 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று, ப.சிதம்பரம் பிரதமர் ஆவது போல் கனவு கண்டேன்; பலிக்குமா?
உங்கள் கனவு கனவாகவே இருக்கும், பலிக்காது. ப.சிதம்பரம் மட்டும் உங்கள் கேள்வியை படித்தார் என்றால், மிக்க மகிழ்ச்சி அடைந்து, உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்!
ரா. ராஜ்குமார், திண்டிவனம்: 'தேசிய கட்சிகளான, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளால், தமிழகத்துக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை...' என்கிறாரே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...
அதெல்லாம் இருக்கட்டும்... இவர்கள் ஆட்சியின் போது, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்னென்ன பிரயோஜனம் கிடைத்தது என்பதை, பட்டியலிடுவாரா?
மா. அமுதா, வேலுார்: கோடை வெம்மையை தணிக்க விரும்பி சாப்பிடுவது, இளநீரா அல்லது நுங்கா? (லென்ஸ் மாமாவிடம் கேட்காதீர்... அவர், 'பீர்' என்பார்.)
லென்ஸ் மாமாவிடம் கேட்காமலே நானே சொல்கிறேன், இளநீர் தான்! கோடையானாலும் லென்ஸ் மாமா, 'பீர்' குடிப்பதில்லை. அவருக்கு பிடித்த, 'ஜானி வாக்கர், பிளாக் லேபிள் விஸ்கி' தான் சாப்பிடுவார்!
* ரா. அருண்குமார், புதுச்சேரி: பயம் இல்லாமல் எழுதுவதற்கு, உங்களுக்கு பயிற்சி கொடுத்தவர் யார்?
யாரும் இல்லை... நானே எடுத்துக் கொண்ட முயற்சி தான், பயமே இல்லாமல் எழுத முடிகிறது!
எம். பாலாஜி, திருச்சி: பல செல்வங்களையும் பெறுவது எப்படி?
அன்புள்ள சுற்றத்தாரை அடைந்தால், நீங்கள் பல செல்வங்களையும் அடைவீர்கள்!
எஸ். நாராயணன், திருச்சி: விடா முயற்சி என்னிடம் இல்லையே...
முயற்சிக்காமல் எதுவும் சாத்தியமில்லை. அதிலும், விடா முயற்சியால் தான் பலனும் உண்டு, வெற்றி பயணமும் உண்டு!