sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (24)

/

குற்றம் குற்றமே! (24)

குற்றம் குற்றமே! (24)

குற்றம் குற்றமே! (24)


PUBLISHED ON : மே 12, 2024

Google News

PUBLISHED ON : மே 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனர், கிருஷ்ணராஜ் கூறிய மூன்றாவது, 'அசைன்மென்ட்'டை நிறைவேற்ற, அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதாக கூறப்படும், கிருஷ்ணராஜின் மகனை தேட ஆரம்பித்தனர், தனாவும், குமாரும்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அக்குழந்தையை கண்டெடுத்த, துப்புரவு பணியாளர், சங்கரலிங்கத்தின் வீட்டுக்கு சென்றனர்.

சங்கரலிங்கம் இறந்துவிட்டிருக்க, அவ்வீட்டில் இருந்த, சந்தோஷ் என்ற இளைஞன், 'நான் தான் அந்த குழந்தை. இப்ப எனக்கு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். என்னை துாக்கியெறிந்தவர் வீட்டுக்கு வரமாட்டேன்...' என்று, 'பிகு' செய்து கொண்டான்.

தனாவும், குமாரும் அங்கிருந்து கிளம்பியதும், விவேக்குக்கு போன் செய்து, 'நீங்க சொல்லியபடி நடித்தேன்...' என்கிறான், சந்தோஷ்.

சந்தோஷின் மனைவியான, சுமதியின் சலனம், அவள் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது. அதைக் கண்ட சந்தோஷ், ''என்ன சுமதி, ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?''

''எப்படி சொல்றதுன்னு தெரியலீங்க. யாரோ, விவேக்குங்கிறவன் உங்களை நடிக்கச் சொல்றான். அதுவும் கோடீஸ்வரனுக்கு எதிரா. நீங்களும், பணத்தாசையில சம்மதிச்சுட்டீங்க. இது எதுல போய் முடியப் போகுதோ?'' என்று, சலித்துக் கொண்டாள்.

''பயப்படாத, நான் ஒண்ணும் தேடிப் போகல. அதுவா தானே வருது. இதை பயன்படுத்திக்கிறதுல என்ன தப்பு இருக்கு. அது தானே புத்திசாலித்தனம்?''

''உண்மைக்கு எதிரான எல்லாமே தப்பு தானே... நீங்க, அந்த கோடீஸ்வரனோட மகனா நடிக்கிறது தப்பு இல்லையா? நிஜத்துல, உங்களை பெற்ற அப்பா - அம்மா இப்ப உயிரோட இல்லாததால, நீங்க நடிக்கிறது சரியாயிடுமா?''

''இதோ பார், 'டூ-வீலர்' மெக்கானிக்கா, எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கிறது... நாமளும் வாழ்க்கையில முன்னுக்கு வர வேண்டாமா?''

''சரி, நாளைக்கே, நீங்க போலின்னு அந்த கோடீஸ்வரனுக்கு தெரிஞ்சுட்டா?''

''வாய்ப்பே இல்லை. அந்த கோடீஸ்வரன் சாகக் கிடக்கிறான். எனக்காக உயிரை கையில இழுத்து பிடிச்சுக்கிட்டு இருக்கானாம். அதிகபட்சம் மூன்று மாசம் இல்ல, ஆறு மாசம். அவ்வளவு தான், அவன் ஆயுசு. அதுக்கு பிறகு, அவ்வளவு சொத்துக்கும் நானும், கார்த்திகாங்கிற ஒரு பொண்ணும் தான் வாரிசு.

''சொத்துன்னா, ஏதோ சில கோடிகள்ன்னு சாதாரணமா நினைச்சுடாதே. காபி தோட்டம், தொழிற்சாலை, 'ஸ்பின்னிங் மில்'ன்னு பல நுாறு கோடிகளுக்கு சொத்து இருக்கு. அதெல்லாம் என்னைத் தேடி வருது. நம் வாழ்க்கையே தலை கீழா மாறப் போகுது, சுமதி...''

''என்னங்க, நீங்க, இப்பவே கோடீஸ்வரன் ஆயிட்ட மாதிரி மிதக்கறீங்க. இடையில உங்களை நடிக்கச் சொன்ன விவேக்குங்கிறவன் இருக்கிறத மறந்துட்டீங்களா?''

''நான் எதையும் மறக்கலை. விவேக்குங்கிறவன் பெரிய ஏமாத்துக்காரன், பிராடு. என்னை பயன்படுத்தி, அவ்வளவு சொத்தையும் அவன் அபகரிக்கப் பார்க்கிறான். நான், அப்படி எல்லாம் அவன் பேச்சைக் கேட்டு நடக்கப் போறதில்லை.

''நான் அந்த பங்களாவுக்கு போய், சொத்துக்கு வாரிசான மறு நிமிஷமே, அந்த விவேக்கை போட்டுத் தள்ளிடுவேன். அப்ப தான், நாம நிம்மதியா இருக்க முடியும்.''

''ஐயோ கொலையா?''

''ஏன் பதட்டப்படற. கோடிக்கணக்கான ரூபாய்க்கான சொத்துக்கள் சும்மா வருமா? இப்படி துணிஞ்சா தான் வரும்.''

''முதல்ல ஆள் மாறாட்டம், அடுத்து கொலை. நீங்களா இப்படி பேசறீங்கன்னு ஆச்சரியமாவும், திகைப்பாவும் இருக்குங்க.''

''இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காத, போய் வேலையை பார்.''

''வேண்டாங்க... தப்பா நடந்துகிட்டு நிம்மதியால்லாம் வாழ முடியாது. நம் போலீசையும், நீங்க சாதாரணமா நினைச்சுடாதீங்க.''

''இந்த விஷயம், போலீசுக்கெல்லாம் போகவே போகாது, சுமதி. அந்த கோடீஸ்வரன், 'அண்டர்கிரவுண்ட்' தாதா. இந்த விவேக்கும், அவன் அப்பனும் கூட தாதாக்கள் தான். அதுல, இந்த விவேக்கோட அப்பன், இப்ப தலை மறைவா இருக்கான்.

''இவங்க கூட்டத்தை சேர்ந்த ஒருத்தனை, 'இன்டர்நேஷனல்' போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஊசி போட்டே அவன் மூலமா தாதாக்கள் பட்டியலை எடுத்துட்டாங்க. அதுல இந்த விவேக்கோட அப்பன், தாமோதரும் அடக்கம்.

''தன்னை போலீஸ் தேடறது தெரிஞ்சு, கொல்லிமலையில் இருக்கிற அவனோட ரகசிய இடத்துக்கு போயிட்டான், அந்த தாமோதர். அவன் எங்க போய் ஒளிஞ்சாலும், நம் போலீஸ் அவனை பிடிச்சுடுவாங்க. அதனால, நான் எதுக்கும் பயப்பட தேவையில்லை.''

''முதல்ல ஆள் மாறாட்டம், அப்புறம் கொலை, கடைசியில, 'அண்டர்கிரவுண்ட்' தாதாக்கள், தலைமறைவுங்கிற விஷயங்கள். நீங்க சொல்லச் சொல்ல, மனசு படபடங்குதுங்க. நாம ஏழையா மட்டும் தான் இருக்கோம். ஆனா, நிம்மதியா இருக்கோம்.

''நீங்க சொல்றத எல்லாம் கேட்டா, நம் வாழ்க்கையில நிம்மதிங்கிறதே இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்குங்க.''

''சுமதி, இனி, நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது. ஏழையாவும், கோழையாவும் வாழறதுக்கு, இப்படி கொஞ்சம், 'ரிஸ்க்' எடுத்து பணக்காரனாகிறதுல தப்பு இல்லைன்னு நினைக்கிறேன். போ, போய் வேலையை பாரு,'' என்றான்.

அவளும் மருட்சியோடு சமையலறை நோக்கி நடக்கலானாள்.

கிருஷ்ணராஜ் முகத்தில் எப்போதும் இல்லாதபடி மலர்ச்சி. கார்த்திகாவும் ஏக மகிழ்வில் இருந்தாள். கிருஷ்ணராஜின் மகனை கண்டுபிடித்துவிட்டதில் இருந்து, இறுதியாக அவன் யோசித்து சொல்வதாக சொன்னது வரை, சகலத்தையும் சொல்லி முடித்திருந்தான், தனஞ்ஜெயன்.

''முதல்ல ரொம்பவே கோபப்பட்டார் சார்... அப்புறமா யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்கார். நிச்சயம் நல்ல பதிலா தான் சார் இருக்கும்,'' என்றான், தனா.

''நான், நேர்ல வரட்டுமா, தனா. எங்க அண்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட, நான் தயாரா இருக்கேன்,'' என்று உணர்ச்சிகளை கொட்டினாள், கார்த்திகா.

''அவசியமில்லை மேடம். அவர்கிட்டேர்ந்து நிச்சயம் நல்ல பதில் வரும். நம்புவோம்.''

''உங்க நடமாட்டத்தை விவேக் பார்த்துட்டு, ஏதாவது சதி பண்ணினா?''

''பஞ்சாப் சிங்குங்களா மாறியிருக்கோம். அப்படியெல்லாம் எங்க அடையாளத்தை அவன் அவ்வளவு சுலபத்துல கண்டுபிடிச்சுட முடியாது, மேடம்.''

''போகட்டும், என் அண்ணன் எப்ப பேசுவாரு, எப்ப இங்க வருவார். இப்ப, அவர் எப்படி இருக்கார்?''

''இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனா, சுமதிங்கற மனைவியோட, சந்தோஷ்ங்கிற பேர்ல இருக்காரு. குப்பை தொட்டியிலிருந்து அவரை கண்டெடுத்த, அந்த சங்கரலிங்கம் தனக்கு குழந்தை இல்லாததால, தானே தத்தெடுத்து வளர்த்திருக்காரு. இப்ப, அந்த சங்கரலிங்கமும், அவர் மனைவியும், உயிரோட இல்லை.

''இவர், மெக்கானிக் ஷெட் வெச்சுருக்காரு. கொஞ்சம் கஷ்ட ஜீவனம் தான். ஆனா, சந்தோஷமா இருக்காரு பாருங்களேன். பல கோடி ரூபாய் சொத்து தேடி வருதுன்னு சொன்ன பிறகும், அதுக்கு ஆசைப்படாம யோசிச்சு சொல்றேன்னுதானே சொல்லியிருக்காரு?''

''ஆமாம், அதைக் கேட்கவே எனக்கு சந்தோஷமாயிருக்கு. இருந்தாலும், முக்கியமான விஷயம்...''

''என்ன மேடம்?''

''அந்த, 'ஜீன் டெஸ்ட்' - மரபணு சோதனையும் எடுத்துடணும். அப்புறமா நம் வக்கீல், ஆடிட்டர்ன்னு, இரண்டு பேரையும் கூப்பிட்டு, சட்டப்படி என்னவெல்லாம் செய்யணுமோ அதைச் செய்திடணும், தனா.''

''இப்ப உடனே அதை செய்ய முடியாது, மேடம். 'ஜீன் டெஸ்ட்'ன்னு வாயைத் திறந்தாலே, என்னை நீங்க முழுமையா நம்பலையான்னு கேட்டு, விலகிப் போயிடுவாரு. அவர் இங்க வந்து, 10 - 15 நாள் கழிச்சு, அதை பக்குவமா செய்துடலாம்.''

''அதுவும் சரிதான். நீங்க சொன்ன மாதிரி முதல்ல அண்ணன் வந்துடட்டும். எதுக்கும் இப்ப போன் பண்ணி பேசிப் பாருங்களேன். போனையும், 'ஸ்பீக்கர் மோட்'ல போடுங்க. என் அண்ணன் குரலை காதாரக் கேட்கிறேன்,'' என்று கார்த்திகா சொல்லவும், சந்தோஷை தன் மொபைல் போனில் அழைத்தான், தனஞ்ஜெயன்.

''ஹலோ சார்... நான், தனா தான் பேசறேன்.''

''என்ன விஷயம் தனா?''

''இப்படி கேட்டா எப்படி சார். உங்களை, 'ஐடெண்டிபை' பண்ணின விஷயத்தை எம்.டி.,கிட்ட சொன்னேன். உங்களை பார்க்க துடிச்சுக்கிட்டு இருக்காரு.''

''அவர் இப்பதானே துடிக்கிறாரு. நான் நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து துடிச்சுக்கிட்டு இருக்கேன்.''

''அதையும் சொன்னேன், அதைக் கேட்டுட்டு அழ ஆரம்பிச்சுட்டாரு. நீங்க பழசை எல்லாம் மறந்துட்டு, சீக்கிரமா வந்து சேரணும்.''

''வரேன். இல்லேன்னா, நீங்களும் விடமாட்டீங்களே. சரி எப்ப வரட்டும்?''

''ஐயோ... இப்ப சொல்லுங்க, வீட்டுக்கு கார் அனுப்பறேன். உங்க மனைவி குழந்தைகளோட வாங்க. சாரும், மேடமும் காத்துக்கிட்டு இருக்காங்க.''

''இந்த நல்ல நேரமெல்லாம் பார்க்க வேண்டாமா?''

''உங்க வரையில, இனி எல்லா நாளுமே நல்ல நேரம் தான்.''

''சரி, நான் நாளைக்கு காலையில, 10:00 மணிக்கு வரேன்.''

''அப்ப, 9:00 மணிக்கே காரை அனுப்பிடறேன்.''

''ஏன், நீங்க நேர்ல வர மாட்டிங்களோ?''

''இங்க உங்களை வரவேற்க, சில ஏற்பாடுகளை பண்ண வேண்டியிருக்கு. அதான்...''

''சரி, நாளைக்கு பார்ப்போம்.''

சந்தோஷ் பேசி முடிக்க, கார்த்திகாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். கிருஷ்ணராஜும் நெகிழ்ந்து விட்டிருந்தார்.

''தேங்க்யூ, தனா... தேங்க்யூ வெரி மச். உங்களுக்கு தந்த எல்லா, 'அசைன்மென்ட்'டையும் பக்காவா முடிச்சுட்டீங்க. 'யு ஆர் எ ட்ரு ஜென்டில்மேன்!' கடமை உணர்ச்சியிலயும் உங்களை யாராலயும் அடிச்சுக்க முடியாது.

''எங்கப்பா நிறைய பாவம் பண்ணினவர் தான். அதேசமயம், கொஞ்சம் புண்ணியமும் பண்ணியிருக்கார். அதான், நீங்க கிடைச்சுருக்கீங்க,'' என்று, வாய் மலர்ந்தாள், கார்த்திகா.

''இதுவரை பண்ணிணது எதுவும் பெருசில்ல மேடம். அந்த தாமோதரையும், விவேக்கையும் போலீஸ் கையில சிக்க வைக்கணும். அவங்க உள்ளே போனா தான், நீங்க நிம்மதியா இருக்க முடியும். என்னோட அடுத்த, 'அசைன்மென்ட்' அதுதான் மேடம்,'' என்றான், தனஞ்ஜெயன்.

''ஐயோ, அவங்க பிடிபட்டா அப்பாவும் தானே மாட்டுவாரு.''

''இப்ப இந்த நொடி... சார், தான் செய்த எல்லா தப்புக்கும் பரிகாரம் செய்துட்டாரு. கடத்தல் தொழிலையும் எப்பவோ நிறுத்திட்டாரு. அதனால, அப்பாவை, 'அப்ரூவர்' ஆக்கிட்டா, அவரை கைது செய்யாம தடுக்க முடியும்.

''இது சம்பந்தமா நான், வக்கீலிடம் பேசிட்டு சொல்றேன். இனிமே உங்களுக்கு நல்ல காலம் மட்டும் தான் மேடம்,'' என்ற தனஞ்ஜெயனின் பேச்சால், கார்த்திகா பூரித்தபோது, அங்கே இருந்த கடிகாரத்தில் ஆமோதிப்பது போல, பெண்டுலம் சத்தம் எழுப்பியது.

''சார், நாளைக்கு காலை, 10:00 மணிக்கு நான், எங்க அப்பாவை பார்க்க போறேன். நீங்க போட்ட, 'பிளான்' படி, எல்லாம் பக்காவா நடந்துக்கிட்டிருக்கு,'' என்று, மிக உற்சாகமாக விவேக்கிற்கு போன் செய்து பேசினான், சந்தோஷ்.

''குட், அங்க போய் முதல்ல, 'செட்டில்' ஆயிடு. அப்புறம் நான் சொல்றபடி எல்லாம் கேட்கணும் என்ன?''

''கடலில் குதிக்கச் சொல்லுங்க, குதிக்கிறேன்.''

''வெரிகுட். இந்த விசுவாசம் ரொம்ப முக்கியம். இங்க, என் அப்பா தாமோதரை போலீஸ் தேட ஆரம்பிச்சிடிச்சு. அந்த மலேஷியா ராமகிருஷ்ணன், அவர் பையன் மோகன்னு எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க. நானும், இடத்தை மாத்திக்கிட்டே தான் இருக்கேன்.

''இனி, என் இடத்துலிருந்து எல்லாத்தையும் செய்யப் போறது நீ தான். அதுக்கு உனக்கு மாசம், ஐந்து லட்சம் சம்பளம்.''

மறுமுனையிலிருந்து விவேக் சொன்னதைக் கேட்டு, 'பல கோடி சொத்து உனக்கு. எனக்கு மாசம் ஐந்து லட்சமா... நான் என்ன கேனயனா? அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச மறு நிமிஷமே உன்னையும், உன் அப்பனையும் போலீசுக்கு காட்டிக் கொடுக்கிறது தான் என் வேலை...' என்று, மனதுக்குள் சொல்லிக் கொண்டான், சந்தோஷ்.

— தொடரும்.இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us