
அம்மா, இப்படி திடீரென்று இறந்து போவாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை, வினோத். கடைசி நேரத்தில், அவள் பக்கத்திலிருக்க முடியாத துர்பாக்யசாலி ஆனதை நினைத்து வருந்தினான்.
அம்மா முகத்தைக் கடைசியாகக் காணும் நாள் இதுவே. இனி, அவளை நான், என் வாழ்க்கையில் ஒருபோதும் காணப் போவதில்லை; அன்புக் குரலை இனி ஒருபோதும் கேட்கப் போவதில்லை. நினைத்ததும், நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது; கதறி அழவேண்டும் போல் தோன்றியது.
ஆனால், துக்கத்திலும், துயரத்திலும் வாய்விட்டு அழக்கூடாது என்ற விசித்திரமான விதிக்குள் இருக்கும், ஆண் வர்க்கமல்லவா... இருந்தாலும், அவனை மீறி வந்த அழுகையை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
''என்னங்க, கொஞ்சம் உள்ளே வாங்களேன்,'' என, அழைத்தாள், மனைவி சுவாதி.
''என்னாச்சு, சுவாதி?'' என்றான், வினோத்.
''போன மாசம், நம் தருண் பிறந்தநாளப்போ காணாம போச்சே, என்னோட ஒன்பது பவுன் லாங் செயின்...''
''அதுக்கென்ன இப்போ?''
''அது, உங்க அம்மாவோட பீரோவுல இருக்குது. இங்க பாருங்க,'' என்று, செயினை காண்பித்தாள், சுவாதி.
''என்ன சொல்ற?''
''நான் என்ன பொய்யா சொல்றேன், உங்க அம்மாவோட புடவை வேணும்ன்னு சொன்னாங்க. எடுக்க வந்தப்ப, இந்த பீரோவுக்குள்ள என் செயின் இருக்கு.''
''சரி, இதை நீ யார்கிட்டயும் சொல்லலேல்ல?''
''யார்கிட்டயும் சொல்லல. ஆனா, அத்தை ஏன் அவங்க புடவைக்குள்ள இதை ஒளிச்சு வைக்கணும்?''
''இங்க பாரு சுவாதி, அம்மா ஏன் ஒளிச்சு வச்சிருக்கப் போறா... இந்த நேரத்துல, இதைப் பற்றி பேச வேண்டாம். எதையாவது யோசிச்சு குழப்பிக்காத. அப்புறமா என்னான்னு பார்க்கலாம். உங்க அம்மாகிட்ட எதையும் உளறிடாத. செயினை பத்திரமா வச்சுக்கோ. நீ, போய் புடவையைக் கொடு,'' என்றான்.
அவளை அனுப்பி விட்டாலும் மனதுக்குள் என்னவோ போலிருந்தது. அந்த அறையை விட்டு வெளியேறும்போது, ''அண்ணா, ஒரு நிமிஷம்...'' என, அவன் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்துச் சென்றாள், தங்கை நித்யா.
''என்ன நித்தி?''
ஏற்கனவே அழுது சிவந்திருந்த அவள் கண்களில், மீண்டும் நீர் பெருக்கெடுத்தது.
''நீயும், அண்ணியும் பேசினதை கேட்டேன்.''
''நித்தி, அதைப் பற்றி யார்கிட்டயும் சொல்லிடாத. அது என்னான்னு அப்புறம் பார்க்கலாம்,'' என்றான்.
''இல்லண்ணா, ஒரு நிமிஷம் நின்னு கேளு. இதுக்கெல்லாம் காரணமே நான் தான்.''
''என்ன சொல்ற?''
''முதல்ல, என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுண்ணா.''
''எதுக்காக உன்னை மன்னிக்கணும், நீ என்ன செஞ்ச?''
''போன மாசம், தருண் பிறந்தநாள் அன்னிக்கி, அந்த செயினை எடுத்ததே நான் தான்.''
''என்ன சொல்ற, நித்தி?''
''ஆமாண்ணா, என் வீட்டுக்காரருக்கு ஆபரேஷன் பண்ணணும்ன்னு எத்தனையோ தடவ உன்கிட்ட பணம் கேட்டேன். நீயும் கொடுக்க ரெடியா தான் இருந்த. ஆனா, அண்ணி தான் அதைக் கொடுக்க விடாம செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால, எனக்கு வேற வழி தெரியல.
''தருண் பிறந்தநாள் அன்று, உன் வீட்டுக்கு வந்தப்ப, அந்த செயினை எடுத்துட்டேன். ஆனா, நான் எடுத்ததை, அம்மா பார்த்திருச்சு. 'உறவைக் கெடுக்க வந்த சண்டாளி'ன்னு என்கிட்ட பயங்கரமா சண்டை போட்டு, அந்தச் செயினை என்கிட்டேர்ந்து பறிச்சு, உன்கிட்ட தரலாம்ன்னு நினைச்சாங்க.
''அங்க வந்த அண்ணி, 'என்ன, நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டுருக்கீங்க? இங்கே செயினை காணோம்ன்னு நாங்கல்லாம் தேடிட்டுருக்கோம்'ன்னு கேட்க... உன்கிட்ட கொடுத்து சமாளிச்சிடறேன்னு, அடுத்த நாளே, 'பணம் உன்னைத் தேடி வரும்'ன்னு சொல்லி, என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லிருச்சு.
''அதுக்கப்புறம், ஒன்றரை லட்சம் ரூபாய், நம் சீனிவாசன் மாமாகிட்ட குடுத்து விட்டுச்சு. அதை வச்சுத்தான், என் புருஷனுக்கு ஆபரேஷன் பண்ணினேன். அவர் பொழச்சுட்டாரு. ஆனா, நம் அம்மா, என்கிட்ட எதுவுமே பேசாம போயிருச்சு. நானே அம்மாவ கொன்னுட்டேன், என்னை மன்னிச்சுரு அண்ணா. அண்ணிகிட்டயும் நான் மன்னிப்பு கேட்கணும், அண்ணா,'' என்றாள், நித்யா.
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில், பதிலேதும் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றான், வினோத்.
அப்போது, அங்கே வந்த சுவாதி, ''என்னங்க, ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க. நித்தி என்னாச்சு?'' என்றாள்.
''ஒண்ணுமில்ல அண்ணி.''
''அங்கே ஒரே பரபரப்பா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இங்கே நின்னு, என்ன பேசிட்டு இருக்கீங்க?''
''என்னாச்சு அண்ணி?''
''அத்தையை குளிப்பாட்டும்போது, அவங்களோட இடுப்பு பக்கத்துல ஆபரேஷன் பண்ணின தழும்பு இருக்கறதை பார்த்தோம். எல்லாரும் அதை பற்றி தான் பேசிட்டிருக்காங்க. வாங்க நீங்க,'' என்றாள்.
இதைக் கேட்டு, வினோத்தும், நித்யாவும், ஒருவரையொருவர் அதிர்ச்சி மேலிட பார்த்தபடி, வேகமாக சென்றனர்.
எதிரில் வந்த, சீனிவாசன் மாமா, ''வினோத் நில்லு, பதற்றப்படாத. எல்லாத்தையும் நான் சொல்றேன்... உயிருக்குப் போராடிட்டிருந்த உன் தங்கச்சி புருஷன் ஆபரேஷனுக்குத் தேவையான பணத்தைப் புரட்ட, உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டுது தெரியுமா?
''வீட்டை வித்துக் கொடுக்கலாம்ன்னா, உன் படிப்புக்காக அடகு வச்சதுல, வட்டிய சரியா கட்டாம பத்திரம் கைக்கு வரல போல. இருந்த நகை எல்லாத்தையும் உன் தங்கச்சிக்கு போட்டு கட்டிக்குடுத்துருச்சுல்ல. காதுல போட்டுருக்கிற கம்மலை தவிர பொட்டு நகை கிடையாது.
''என்கிட்டயும் கேட்டுச்சு. அம்புட்டு பணத்துக்கு நான் எங்க தம்பி போவேன். என்னாலயும் ஒண்ணும் செய்ய முடியல. உன்கிட்ட கேட்கலாமேன்னு சொன்னதுக்கு, பிடிவாதமா வேண்டாம்ன்னு மறுத்திருச்சு.
''எம் பொண்ணை விதவையாப் பார்க்கிற தைரியம் தனக்கு இல்லேன்னும் அதுக்கு தன்னோட உயிர் போயிடணும்ன்னு என்கிட்ட சொல்லி அழும். கடைசில ஒரு வழியும் தெரியாம, அதோட கிட்னிய வித்துருக்கு. வித்த பிறகு தான் எனக்கே தெரியும் தம்பி.
''என்கிட்ட அந்தப் பணத்தை கொடுத்து, உன் தங்கச்சிகிட்ட குடுக்கச் சொல்லிச்சு. கிட்னிய வித்ததை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிருச்சு தம்பி. ஆனா, இவ்வளவு சீக்கிரமா உயிர் போகும்ன்னு யாரும் நினைக்கல,'' என்று முடித்தவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
இதைக் கேட்டதும், அதுவரையில் வினோத் அடங்கியிருந்த உணர்ச்சிகள் அனைத்தும் உடைந்து, ''அம்மா அம்மா...'' என்று அவன் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு, அனைவரும் ஓடி வந்தனர்.
''தம்பி வினோத், நீ இப்படி அழலாமா? நீ சோர்ந்து போயிட்டா, ஆக வேண்டிய காரியத்தை யார் பார்க்கிறது?'' என்றார், ஒரு பெரியவர்.
''ஐயா, தயவுசெஞ்சு என்னைக் கொஞ்சம் அழ விடுங்க. அம்மாவுக்காக நான் இதுவரைக்கும் ஒண்ணுமே செஞ்சதில்ல. 'அட்லீஸ்ட்' அழவாவது செய்றேனே,'' என்றதும், அவர் ஒதுங்கி போனார்.
நித்தியும், சுவாதியும் வினோத் கையைப் பற்றினர்.
ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏறி, ''சீ... கையை விடுங்கடி. சுயநலப் பிசாசுங்களா... அநியாயமா என் அம்மாவைக் கொன்னுட்டிங்களேடி... உங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் வேணும்?'' என்றான்.
''என்னங்க?'' என்றாள், சுவாதி.
''ஏய் பேசாத, நம் கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு உனக்கு மறந்து போச்சா. உனக்குப் பார்த்த மாப்பிள்ளை, கல்யாணத்தன்று, உன்னை வேணாம்ன்னு சொல்லி, கல்யாணம் நின்னு போனது.
''அப்ப, உங்க அப்பா, என் அம்மாகிட்ட வந்து, 'எப்படியாவது உங்க மகனை, என் பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொல்லுங்கம்மா... இல்லன்னா எங்க மானமே போயிடும்'ன்னு, கெஞ்சினாரு. உன் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டு, அம்மா உடனே, எங்கிட்ட வந்து விஷயத்தை சொன்னப்ப, நான் ஒத்துக்கல.
''உன் தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா, என்னாப்பா செய்வ... பெத்த வயிற கொஞ்சம் நினைச்சுப் பாருன்னு சொன்னாங்க. நானும், சரின்னு உன்னைக் கல்யாணம் பண்ணினேன். அதுக்கப்புறம் ஒருமுறையாச்சும் எங்கம்மா இது பற்றி உன்கிட்ட பேசி இருக்குமா, நம் கூட வந்து தான் தங்கியிருக்குமா?
''தருண் பிறந்தநாளைக்கு நான் வலுக்கட்டயமா கூப்பிட்டதுனால நம் வீட்டுக்கு வந்த அம்மா, ஒரு மாசம் என் கூட இருப்பேன்னு சொல்லிட்டு, மூன்றே நாள்ல கிளம்பிடுச்சு. நீயும், உன் வீட்டுல உள்ளவங்களும் சேர்ந்து, உங்க, 'ஸ்டேட்டஸ்' சொல்லி சொல்லியே, அம்மாவை விரட்டிட்டீங்க.
''கல்யாணத்தப்ப எங்க, 'ஸ்டேட்டஸ்' தெரியாம போச்சா? எங்க அம்மா, பணத்துக்கு ஆசைப்பட்டு தான் இந்தக் கல்யாணத்தை செஞ்சு வச்சதா சொல்லியிருக்கீங்க. ஏன்டி, உன் பணத்துல, எங்கம்மா ஒரு நாளாவது சாப்பிட்டிருக்குமா? இல்லை, நீதான், உன் பணத்துல ஒரு சேலை வாங்கிக் குடுத்திருப்பியா?
''பிறந்த நாளைக்கு வந்தப்போ கூட, நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம, அது சேர்த்து வச்சிருந்த பணத்துல, உனக்கு ஒரு புடவையும், தருணுக்கு ஒரு மோதிரமும் வாங்கிட்டு வந்துது. போகும்போது கூட, நீயும், தருணும் தான் என்னோட வாழ்க்கை. அதனால, எதை பற்றியும் உன்கிட்ட கேட்டு சண்டை போடக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டு, கண்ணீரோட திரும்பிச்சு.
''இப்ப என்கிட்ட இருக்கிற, 'ஸ்டேட்டஸ்' அவ்வளவு பணத்தையும் தர்றேன். என் அம்மாவை திருப்பி குடுக்க முடியுமா உன்னால?'' என சொல்லி, முதல் முறையாக சுவாதியிடம் கையை ஓங்கினான். அங்கிருந்தவர்கள் அவன் கையை பிடித்துக் கொண்டனர்.
அழுதபடி அங்கிருந்து சென்று விட்டாள், சுவாதி.
''அண்ணா... உனக்கு என்னாச்சு, ஏன் இப்படி நடந்துக்குற?'' என்றாள், நித்தி.
''வாயை மூடு. நீயெல்லாம் பேசவே கூடாது. அவ தான் வேற குடும்பத்திலிருந்து வந்தவ. நீ இங்க பொறந்தவ தானே. நீயாவது, அம்மாவை புரிஞ்சு நடந்துக்கிட்டியா? உன் கல்யாணத்துக்கு, அம்மா வாங்கின கடனை பற்றி தெரிஞ்சிருந்தும், உன் பிள்ளையோட பிறந்த நாளுக்கு, அஞ்சு பவுன்ல செயினும், வளையலும் கேட்டிருக்க.
''அப்படியிருந்தும், ரெண்டு பவுனோட வந்த அம்மாவை, உன் புருஷன் கேவலப்படுத்தும் போது, நீயாவது, ஆறுதலா ஒரு வார்த்தை சொன்னியா? எல்லாருமா சேர்ந்து, அம்மாவை, அவமானப்படுத்தி அனுப்பிச்சிருக்கீங்க. அப்புறம் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு, உன் புருஷன் ஆபரேஷனுக்கு பணம் கேட்டு வந்த?'' என கேட்டதும், அவள் முகம் பேயறைந்ததைப் போலிருந்தது.
உண்மையைச் சொல்லி விடுவானோ என்ற பயம், அவள் முகத்தில் தெரிந்தது. கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது.
''ஆம்பளையும், பொம்பளையும் சேர்ந்து சம்பாதிச்சாலே பத்தாத இந்தக் காலத்துல, ஒத்த பொம்பளையா இருந்து, ரெண்டு பிள்ளைங்களையும் வளர்த்து படிக்க வச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துருக்கு, நம் அம்மா.
''அப்பா இல்லாம எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும். ஒரு நாளாச்சும் நம்மகிட்ட அத சொல்லி அழுதிருக்குமா? அத்தனை கவலையையும் தன் மனசுக்குள்ள வச்சே பூட்டிருச்சு. அதுக்கு, நீயும், நானும் தான் உலகமே. காலம் முழுக்க கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சு, கடைசியில, நமக்காக அது உயிரையும் கொடுத்துருச்சு. இப்போ சந்தோஷமா சொல்லு நித்தி சொல்லு,'' கத்தினான்.
''ஐயோ அம்மா... உன்னை நானே கொன்னுட்டேனே. உன்னை இந்தப் பாவியே கொன்னுட்டேனே அம்மா...'' என்று கதறினாள், நித்யா.
அவள் கதறியதைப் பார்த்ததும், அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் பெருகியது. சுற்றியிருந்தவர்கள், நித்திக்கும், சுவாதிக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.
'அழட்டும் அழட்டும். ஒரு உயிரின் உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாமல் புண்படுத்தும் எவரும் இறுதியில் அழத்தான் வேண்டும். நன்றாக அழட்டும்...' என்று நினைத்த வினோத் கண்களில் இருந்தும், நீர் வழிந்து கொண்டிருந்தது.
ரத்னமாலா புரூஸ்