
லால்பகதுார் சாஸ்திரி, இந்திய பிரதமராக இருந்தபோது, அவர் மகன், படித்து, பட்டம் பெற்றும், வேலை தேடும் நிலையிலிருந்தார். பல இடங்களில் விண்ணப்பித்தும், அவருக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது.
ஒருநாள், தந்தை லால்பகதுார் சாஸ்திரியிடம், ஒரு கம்பெனியின் உரிமையாளருக்கு, தன்னை வேலையில் அமர்த்தி கொள்ளும் வகையில், சிபாரிசு கடிதம் கொடுக்கும்படி, பணிவுடன் கேட்டான்.
'சிபாரிசு கடிதம், யாருக்கும் கொடுக்க முடியாது...' என மறுத்து விட்டார், சாஸ்திரி.
மீண்டும் தாழ்மையுடன் கேட்டான், மகன்.
'இதோ பார், பிரதம மந்திரியின் மகன் என்று சொல்லியோ, என்னிடம் சிபாரிசு கடிதம் பெற்றோ, நீ, எந்த வேலையிலும் சேரக் கூடாது. நான் கடிதமும் தரமாட்டேன். உன் படிப்பு, திறமைகளைக் கொண்டு, உனக்கேற்ற வேலையை நீயே தேடிக் கொள்...' என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.
பிறகு, தந்தை கூறியதை போல, அவரது பெயரையோ, பதவியையோ கூறாமல், நேர்முக தேர்வுக்கு சென்று, தன் திறமையால் வேலை பெற்றான்.
பணிக்கு சேரும் முன், பூர்த்தி செய்யும் படிவத்தில், தந்தையின் பெயர் என்ற இடத்தில், அவரது பெயர் மட்டும் எழுதி, பதவி பெயர் எழுதவில்லை.
கம்பெனி உரிமையாளர், 'பிரதம மந்திரியின் மகனா?' என்று கேட்டார்.
'ஆம்...' என்றான், தந்தை சொல்லை தட்டாத மகன்.
ஒருசமயம், தம் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களையும், சோதனைகளையும் பற்றி, கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில்.
அப்போது, அவரை மடக்க நினைத்த ஒருவன், 'அனுபவம், மூடர்களுக்கு தான் பாடம் கற்பிக்கும்...' என்றான்.
உடனே, 'என் நண்பனே, இதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனவே தான், என் அனுபவம் உனக்கு பயனாக அமையும் என்று கருதுகிறேன்...' என்றார், சர்ச்சில்.
மடக்கியவர் முகம் அஷ்டகோணலாகியது.
மற்றொரு சமயம், சர்ச்சிலிடம், 'அரசியல்வாதிக்கு தேவையான தகுதிகள் யாவை...' என கேட்டான், ஒருவன்.
மழுப்பாமல், தைரியமாகவும், தெளிவாகவும் பதில் கூறினார், சர்ச்சில்:
நாளை நடப்பதையும், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு நடக்கப் போவதையும் முன்கூட்டியே சொல்லக் கூடிய சாமர்த்தியம், அரசியல்வாதிக்கு மிக அவசியமானது.
ஒருவேளை, அவன் சொன்ன அரசியல் ஆரூடம் பலிக்கவில்லை என்றால், அதை சமாளிப்பதற்குரிய திறமையும், தெளிவான காரணங்களையும் காட்டிபேசக் கூடிய வலிமையும் வேண்டும்.
அப்போதுதான் அரசியலில் எந்த ஒரு அரசியல்வாதியும், அந்தஸ்தையும், அதிகாரத்தையும் பெற முடியும்.
இவ்வாறு கூறினார்.
- நடுத்தெரு நாராயணன்