
அள்ள அள்ளக் குறையாதது அட்சய பாத்திரம், அது நமக்கு தெரியும். கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், போடப் போட நிரம்பாத ஒரு பாத்திரம் உண்டு, அது என்ன தெரியுமா?
நம்மில் பல பேரிடம் அந்த பாத்திரம் உண்டு. அதுதான், பேராசை என்ற பாத்திரம். அதை நிறைவு செய்யவே முடியாது.
அரசர் நகர்வலம் போன போது, ஒரு பிச்சைக்காரன் எதிரில் வந்தான். அரசரிடம், பிச்சைக் கேட்டான்.
'என்னுடைய அமைதியை கெடுக்காதே போ...' என்றார், அரசர். 'அரசே, உங்கள் அமைதி கெடக் கூடிய நிலையில் இருந்தால், அதற்குப் பெயர் அமைதியே இல்லை...' என்று, சிரித்தபடியே சொன்னான்.
எதிரில் நிற்பது வெறும் பிச்சைக்காரன் இல்லை. யோகி என்பதை புரிந்து கொண்டார், அரசர். 'துறவியே, உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள், கொடுக்கறேன்...' என்றார், அரசர்.
'அரசே, உங்களால் முடியாததை எல்லாம் கொடுக்க முடியும்ன்னு சத்தியம் செய்யாதீங்க...' என்றார், சிரித்தபடியே, அந்த துறவி. 'இவர் என்ன இப்படி சொல்கிறாரே...' என நினைத்து, நகர்வலத்தை பாதியிலேயே நிறுத்தினார்.
'வாங்க அரண்மனைக்கு...' என்று கூறி, துறவியை அரண்மனைக்கு அழைத்து வந்தார்.
துறவி தன்னிடம் இருந்த பிச்சைப் பாத்திரத்தை நீட்டி, 'இது நிறைய, எனக்கு பொற்காசுகள் வேண்டும்...' என்றார்.
'இவ்வளவு தானா...' என்று, கையை தட்டினார், அரசர்.
ஒரு பெரிய தாம்பளம் நிறைய பொற்காசுகள் வந்து சேர்ந்தது. அதை அள்ளிப் போட்டார். போடப் போட அந்த பிச்சைப் பாத்திரம், பொற்காசுகள் அத்தனையையும் உள்ளே வாங்கியபடியே இருந்தது.
அரசாங்க கஜானாவே காலி ஆனது. கடைசி வரை, பிச்சைப் பாத்திரம் நிரம்பவில்லை.
அரசரிடம் இருந்த கர்வம் நீங்கி, துறவி காலில் விழுந்தார்.
'அரசே, இந்த பிச்சைப் பாத்திரம் உங்களால் மட்டுமல்ல, வேறு யாராலும் நிரப்ப முடியாது. அதற்கு காரணம், இது, சாதாரண பிச்சைப் பாத்திரம் அல்ல. பேராசைகளுடன் வாழ்ந்து செத்துப் போன மனிதனின் மண்டை ஓடு இது...' என்றார், துறவி.
இதிலிருந்து என்ன தெரிகிறது... பேராசைக்கு அளவில்லை. போதும் என்ற திருப்தியே மன அமைதிக்கு அடிப்படை ஆதாரம் என்று புரிகிறதல்லவா!
பி. என். பி.,
அறிவோம் ஆன்மிகம்!
தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதிகாலை, 4:30 மணி முதல், 6:00 மணிக்குள் ஏற்ற வேண்டும். மாலை, 5:30 மணி முதல், 6:00 மணிக்குள் தீபம் ஏற்றுவதால், நிறைவான வளம் கிடைக்கும்.