
பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய, இயக்குனர்கள்!
ரஜினி நடித்த, கபாலி மற்றும் காலா உட்பட பல படங்களை இயக்கிய, பா.ரஞ்சித், 'நீலம் புரொடக் ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, இளவட்ட இயக்குனர்களுக்கு, படம் இயக்க வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கிய, லோகேஷ் கனகராஜும், 'ஜி ஸ்குவாட்' என்ற பட நிறுவனத்தை துவங்கி, இளவட்ட இயக்குனர்களின் படங்களை வாங்கி, வெளியிட்டு வருகிறார்.
அதையடுத்து, பீஸ்ட் மற்றும் ஜெயிலர் படங்களை இயக்கிய, நெல்சன் திலீப் குமாரும், தற்போது, 'பிளமென்ட் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, இளவட்ட இயக்குனர்களை வைத்து, படங்கள் தயாரித்து, வெளியிடப் போகிறார்.
— சினிமா பொன்னையா
விருதுக்கான கதைகளை தேடும், கீர்த்தி சுரேஷ்!
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, மகாநடி என்ற படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், கீர்த்தி சுரேஷ். தற்போது அவருக்கு, விருதுக்கான கதைகளில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, 'பக்கா, 'கமர்ஷியல்' கதைகளில், ஒரு பக்கம் நடித்த போதும், அவ்வப்போது, விருது படங்களிலும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்...' என்று சொல்லி, அது போன்ற படங்களை இயக்கி வரும் இயக்குனர்களிடம் பட வேட்டை நடத்தி வருகிறார், கீர்த்தி சுரேஷ்.
— எலீசா
மீண்டும், 'யங் லுக்'கிற்கு மாறும், அஜித்குமார்!
சமீபகாலமாக, தலையில், 'டை' கூட அடிக்காமல், வெள்ளை முடியுடன் நடித்து வருகிறார், அஜித் குமார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தை அடுத்து, தான் நடிக்க போகும், குட் பேட் அக்லி என்ற படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கும் அஜித், ஒரு வேடத்தில் மிக இளமையான, 'கெட் - அப்'புக்கு மாறுகிறார்.
எனவே, தலைமுடியை கறுப்பாக மாற்றி, தன் உடல் எடையையும் குறைத்து, 20 ஆண்டுகளுக்கு முந்தைய, அஜித்குமாரை, மீண்டும் திரையில் கொண்டு வரப் போகிறார். இதற்காக, சில அதிநவீன ஹாலிவுட் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தப் போகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
பிரமாண்ட இயக்குனரை பொறுத்தவரை, எப்போதுமே, ஆரம்பத்தில் போடும் பட்ஜெட்டுக்குள் நிற்க மாட்டார். அதிகப்படியான நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, பட்ஜெட்டை எகிற வைத்து விடுவார். இதன் காரணமாகவே, கடைசி நேரத்தில், அவருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, முட்டிக்கொள்ளும்.
தற்போது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகனை வைத்து, பிரமாண்டம் இயக்கி வரும் படத்தின் பட்ஜெட்டும், தாறுமாறாக எகிறி விட்டதாம். அதை பார்த்து, தயாரிப்பாளர், ஆரம்பத்தில் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டதாக, பிரமாண்ட இயக்குனரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், கடுப்பான பிரமாண்டம், கடைசியாக படமாக்கிய மூன்று நாள் படப்பிடிப்புக்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்திருக்கும், இந்தியன்- 2 படம், ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
சினி துளிகள்!
* மீண்டும், ரஜினியுடன் அவரது, 171வது படத்தில் இணைந்து நடிக்கும், ஷோபனா, அதையடுத்து, மோகன்லாலுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். இது, மோகன்லாலுடன், ஷோபனா இணைந்து நடிக்கும், 36வது படமாகும்.
* என்னை அறிந்தால், மிருதன், நானும் ரவுடிதான் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார், அனிகா. தற்போது, தனுஷ் இயக்கி வரும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில், நாயகியாக நடித்து வருகிறார்.
* முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம் உட்பட, பல படங்களில் நடித்த, ரஞ்சனி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது, 'டிவி' சீரியல்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.
* தற்போது, தனுஷின், குபேரா படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வரும், நாகார்ஜூனா அடுத்து, ரஜினி நடிக்கும், கூலி படத்திலும் நடிக்கப் போகிறார்.
* நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள இருக்கும், நடிகை அதிதி ராவ், ஹைதரி அரச குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா, 1869 முதல் 1941 வரை, ஹைதராபாத் பிரதமராக இருந்தவர்.
* ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்திருக்கும், இந்தியன்- 2 படம், ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்ளோதான்!