sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 19, 2024

Google News

PUBLISHED ON : மே 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 25 வயதான பெண். எனக்கு, ஒரு தம்பி. அப்பா, மிலிட்டரியில் பணிபுரிகிறார். அம்மா, இல்லத்தரசி. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன்.

நான், மூன்று ஆண்டுகளாக ஒருவரை காதலிக்கிறேன். இரு வீட்டாரின் சம்மதத்திற்காக காத்திருக்கிறோம். என் மீது மிகவும் அன்புடன் இருப்பார், காதலர். அதுவே எனக்கு சில நேரங்களில், தொல்லையாக அமைந்து விடுகிறது.

எனக்கு பொருத்தமாக, வசதியாக இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு பிடித்த, அவர் சொல்லும் உடைகளை தான் அணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவருக்கு பிடித்த உணவுகளை மட்டுமே, 'ஆர்டர்' செய்வார். எனக்கு என்ன பிடிக்கும் என்று கூட கேட்க மாட்டார்.

எப்படி முடி அலங்காரம் செய்ய வேண்டும், என்ன பூ வைக்க வேண்டும் என்பதை கூட, அவரே முடிவு செய்வார். இதுபோல் இன்னும் பலவற்றை பட்டியலிடலாம்.

அவர், என் மீது, 'பொசசிவ்' ஆக இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும், இது தொடர்ந்தால், வாழ்வு இனிக்குமா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.

இவர், எனக்கு ஏற்றவர் தானா அல்லது தவறான ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டேனோ என்ற குழப்பமும் வருகிறது.

தயவுசெய்து என் மனக் குழப்பம் தீர, நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

காதலரும், நீயும் மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறீர்கள். அவரின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து மானசீகமாக பட்டியலிடு. அவருடைய செயல்பாடுகளில் அப்பழுக்கற்ற காதல் வழிந்தோடி இருக்கிறதா அல்லது அடிமைக்கு கட்டளையிடும் எஜமானனின் தொனி பீரிடுகிறதா என பார்.

காதலருக்கு தெரியாமல், சாதாரணமாக கேட்பது போல, அவரது நண்பர்களிடம் அவரின் குண நலன்களை விசாரி. காதலரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பற்றி எல்லாம் விபரங்கள் சேகரி.

நீ விசாரிப்பது, துப்பறிவாளரின் தோரணையில் இல்லாமல், வெள்ளந்தியின் அறியாமை கேள்விகளாய் இருக்கட்டும். காதலரை வாழ்நாள் கூட்டணியில் இணைத்துக் கொள்வதா அல்லது கூட்டணியை உடனடியாக துண்டித்துக் கொள்வதா என்பது, மில்லியன் டாலர் கேள்வி.

காதலர், முகநுால் பயன்படுத்துபவராக இருந்தால், அவரது பக்கத்துக்கு போய், கடந்த மூன்று ஆண்டு பதிவுகளை நோட்டமிடு. அந்த பதிவுகளில் காதலரின் உள்ளும், புறமும் அப்பட்டமாகும். பெண்கள், அரசியல், மதம், சினிமா மற்றும் இசை பற்றிய காதலரின் விருப்பு, வெறுப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

திருமண பந்தம் பற்றி என்ன நினைக்கிறாய்? திருமணத்தில் என்னென்ன எதிர்பார்க்கிறாய்? இந்த காதலரை திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்னையும் இல்லாமல், ஆயுளுக்கும் திருமணம் தொடருமா? உன்னுடைய பலம் எது, பலவீனம் எது?

உனக்கு வரும் வரன் பற்றி, உன் பெற்றோரும், தம்பியும் என்ன எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்? திருமணத்திற்கு பின், உன்னை வேலையை விட்டு நிறுத்தி விடுவாரா, காதலர்? உன்னுடைய தனித்தன்மையும், சுதந்திரமும் திருமணத்திற்கு பின் பாதுகாக்கப்படுமா?

கணவரின் கண்காணிப்பில் கூண்டுக் கிளியாய் ஒதுங்கி வாழ்தல் போதும் என, திருப்தி கொள்கிற பெண்ணா நீ என, தனிமையில் அமர்ந்து தீவிரமாக அலசி ஆராய்ந்து பார்.

காதலருக்கு புகைபிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் உண்டா என, விசாரி.

என்னை பொறுத்தவரை, காதலர், காதலின் முகமூடியில் ஒளிந்திருக்கும் சர்வாதிகாரியாக தோன்றுகிறது. 19வது நுாற்றாண்டில் வாழ வேண்டிய பத்தாம்பசலி.

மூன்று ஆண்டுகள் பழகிய பாவத்துக்காக, காதலர் நீட்டிய திருவோட்டில், எதிர்காலத்தை துாக்கி போட்டு விடாதே. வேண்டாம் என முடிவெடுத்தால், அவரிடமிருந்து மெதுமெதுவாக விலகு. நீ விலகினால், காதலர் எளிதாக உன்னிடமிருந்து விலகிக் கொள்ள மாட்டார். வன்முறையாக நடந்து, ரகளை பண்ணுவார்.

உன் மொபைல் போன் எண்ணை மாற்று. உன்னிடம், மோசமாக அவன் நடந்து கொண்டால், அவனது பணியிடத்தில் புகார் செய். அதற்கும் மசியவில்லை என்றால், மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு. அவன் உனக்கு கொடுத்த பரிசுகளை திருப்பிக்கொடு. நீயும், அவனும் இருக்கும் ஒளி படங்களை, சலனப்படங்களை அழித்து விடு.

பெற்றோரிடம் சொல்லி, உனக்கு வரன் பார்க்கச் சொல். உன் அலைவரிசையுடன் ஒத்துபோகும் வரனை தேர்வு செய்து, மணந்து கொள்.

பொது இடத்தில், நீ, நீயாக இரு. உன் கணவன், அவன், அவனாக இருக்கட்டும். வீடு என்று வந்து விட்டால், இருவரும் ஒருவராக இணைந்திடுங்கள்.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us