PUBLISHED ON : மே 19, 2024

குழந்தைகள் மருந்து மட்டும் அல்ல, சிறந்த நறுமணப் பொருட்களுள் ஒன்று, கஸ்துாரி. இதற்கு மணம் தருவது, 'மஸ்க்கோன்' எனப்படும் பொருள். இது நெடுங்காலம் நிலைத்திருக்கும், மணம் ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. மங்கலான கருமை கலந்த, சிவப்பாக சிறு சிறு மணிகளாக இருக்கும்.
கஸ்துாரி மானின் வயிற்றில் சுரக்கும் சுரப்பியிலிருந்து இது கிடைக்கிறது. அதனால், இதன் விலையும் அதிகம். அசாம் கஸ்துாரி, முதல் தரமானது, கருப்பாக இருக்கும். அடுத்து, நேபாள நாட்டின் கஸ்துாரி, நீல நிறத்தில் இருக்கும். இரண்டாம் - மூன்றாம் தரத்தில் உள்ளது. காஷ்மீர் கஸ்துாரி, கோதுமை நிறத்தில் இருக்கும்.
தலை நோய், கபம், ஜன்னி, காய்ச்சல் போக்கும். உடல் பளபளப்பைத் தரும், வசியத்திற்கும், பெண்களின் நாத விருத்திக்கும் ஏற்றது.
கஸ்துாரிக்கு வெப்பமாக்கும் தன்மை உண்டு. வலிகளை நீக்கும், வியர்வை பெருக்கும், சிறு நீர் பெருக்கும். பாம்புக்கடி நஞ்சை நீக்கும் மருந்துகளில் கஸ்துாரி இடம் பெறும்.
உயர் ரக கஸ்துாரியை, வேளைக்கு அரை அல்லது குன்றிமணி அளவு எடுத்து, தாய்ப்பால், தேன், வெற்றிலை சாறு இவைகளில் ஏதேனும் ஒன்றை அனுமானம் செய்து கொடுக்க, இதயத்தின் துடிப்பை சம நிலையில் இருக்கும்படி செய்யும்.
விஷ பேதி, கப ஜுரம் முதலியவற்றால் நாடி தவறியவர்களுக்கு, கஸ்துாரி கொடுத்து, சிகிச்சை தரலாம். கஸ்துாரி, கசப்பும், காரமும் கலந்தது. வாதம், பித்தம், கபம், சீதளம், துர்நாற்றம் போன்றவைகளை இது போக்கடிக்கும்; காலராவிற்கு கை கண்ட மருந்து.
வெற்றிலையுடன் கஸ்துாரி சேர்ப்பதன் மூலம், கர்ப்பிணி பெண்கள் நலமடைகின்றனர். கர்ப்ப வலி, கர்ப்ப வாயு முதலியவைகளுக்கு வெற்றிலையுடன் சேர்ந்த கஸ்துாரி சிறந்த நிவாரணம் தருகிறது.
பிரசவித்த பெண்ணுக்கு, கருப்பை திடீரென காலியாவதால், ரத்தம் வெளியேறி, நாடிகள் தளர்ந்து, வாதம் தப்பிக் கொண்டிருக்கும். உடல் சூடு குறைந்து விடும். அப்போது, நெல் அளவு கஸ்துாரி கொடுத்தால், பலமும், சக்தியும் பெறலாம்.
கஸ்துாரி அளவு மீறினால் அதுவே விஷமாகி விடும். மலச்சிக்கல், உடல் சூடு, ரத்தக்கேடு, பித்தம் மிகுதி போன்றவைகளை உருவாக்கும்.
வெங்காயத்தை நறுக்கி, அதே கையால் கஸ்துாரியை எடுத்தால், கஸ்துாரி மணம் இருக்க வேண்டும். அது தான் அசல் கஸ்துாரி.
உடலை வலுப்படுத்தும் மற்றும் வலிப்பு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை துாண்டுகிறது; ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மயக்கம், கபத்திற்கும் பயன்படுகிறது. ஆஸ்துமா தீவிரத்தை தவிர்க்கிறது.
குழந்தைகளின் கால், -கை வலிப்பு, ஆஸ்துமா, மயக்கம், வயிற்று நோய்கள், கட்டி, வாதம் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் கஸ்துாரி தைலம், பயனுள்ளதாக இருக்கும்.
தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்