
இரவு, ஐ.டி., கம்பெனி பஸ்சில் வந்து இறங்கிய வினோத்திடம், ''சார்... உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு,'' என்று நீட்டினார், அடுக்கு மாடி குடியிருப்பின் செக்யூரிட்டி.
''கொடுங்க, நான் தான் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னேன்,'' என்று வாங்கி, அதை திருப்பித் திருப்பிப் பார்த்தபடி நடந்தான்.
சோப்பு டப்பா அளவுள்ள, எடை குறைவான பார்சல். இவனது முகவரியும், போன் நம்பரும் சரியாக இருந்தது. அனுப்பியவர் முகவரி இல்லை. மதியம் ஆபீசுக்கு டெலிவரி பையனிடமிருந்து போன் வந்தபோது, அதை செக்யூரிட்டியிடம் தந்து விட்டுப் போக சொல்லியிருந்தான்.
வினோத்திற்கு சொந்த ஊர், கோவை. இவன், 10வது படிக்கும் போது, இறந்து விட்டார், அப்பா. ஓரளவுக்கு சொத்து இருந்ததால், படித்து முடித்து, உடன்பிறந்த ஒரே தங்கையை கோவையிலேயே நல்ல இடத்தில் திருமணம் செய்து விட்டான்.
சென்னையில், ஐ.டி., கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்ததும், அம்மாவுடன் இந்த, குடியிருப்புக்கு வந்திருக்கிறான். இனி, இங்கேதான் வேலை நிரந்தரம் என்றதும், இவனுக்குத் தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அம்மா.
கோவையில் குளிர்ந்த அமைதியான பகுதியில் வசித்தவளுக்கு, சென்னை ஒத்துவரவில்லை. இவன் திருமணம் முடிந்ததும் மகள் வீட்டுக்கே சென்று விடுவது என்ற முடிவில் இருந்தாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் பார்சலை டீப்பாயின் மீது வைத்துவிட்டு, ''அம்மா, காபி...'' என்றபடி வாஷ்பேசினில் முகம் கழுவி திரும்பினான். தனக்கு தான் ஏதோ வாங்கி வந்திருக்கிறான் என்று நினைத்து, பார்சலை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள், அம்மா.
''என்னப்பா இது?''
''எனக்கும் தெரியலம்மா, யாரோ, 'கிப்ட்' அனுப்பி இருக்காங்கன்னு நினைக்கிறேன். அனுப்பினவங்க விலாசம் இல்லை. பிரிச்சுப் பார்க்கணும்,'' என்றவாறு காபியைக் குடித்துவிட்டு, பார்சலை பொறுமையாக பிரித்தான்.
உள்ளே... தரமான கம்பெனி, 'ஸ்மார்ட் வாட்ச்!' ரசீதில் விலை, 14 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது. தன் பிறந்தநாள் கூட சமீபத்தில் இல்லையே, 'சர்ப்ரைஸ்' ஆக, இதை யார் அனுப்பியிருப்பர் என்று குழம்பினான். கூடவே அம்மாவும்!
இரவு, 10:00 மணிக்கு, வினோத் மொபைல்போனில், 'பேஸ்புக்' பார்த்துக் கொண்டிருந்த போது, புதிய எண்ணிலிருந்து வந்த, 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்தியில், பார்சலுக்கான விடை கிடைத்தது.
'ஹாய் வினோ... நான் ஸ்வேதா, பெங்களூரு. வாட்ச் பிடிச்சிருக்கா? 'ரிப்ளை' செய்ய வேண்டாம். சண்டே நேரில் வருகிறேன்...' என்று இருந்தது.
ஸ்வேதா... காலேஜ் கிரிக்கெட், 'டீம்' வருணின் தங்கை. வருண், இவனுக்கு கல்லுாரியில் சீனியர். நன்கு கிரிக்கெட் விளையாடுவான். காலேஜ் டீமில் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாயினர்.
வருணுடன் ஓரிரு முறை அவன் வீட்டுக்குச் சென்ற போது, ஸ்வேதாவிடம் பேசியிருக்கிறான். வழக்கமாக கல்லுாரியில் மற்ற பெண்களிடம் பழகுவது போல தான், இவளிடமும் பழகியிருக்கிறான்.
வருணின் அப்பா, மத்திய அரசு அதிகாரி. அவருக்கு பெங்களூருக்கு மாற்றலாகி விட, குடும்பத்தினருடன் சென்று விட்டாள், ஸ்வேதா. மீதி படிப்பை, கரஸ்சில் தான் படித்தாள். வருண் மட்டும் ஹாஸ்டலில் தங்கி, படிப்பை முடித்தான்.
வினோத்தின் வீட்டிற்கு அடிக்கடி வருவான். அம்மாவிடமும் பாசத்துடன் பழகுவான். அந்தக் காலகட்டத்தில் தான், இருவரின் நட்பும் உறுதியானது. படிப்பு முடிந்து அவனும், பெங்களூரு சென்று விட, சில மாதங்கள் போனில் பேசி, பிறகு வேலைப்பளு காரணமாக அதுவும் குறைந்து போனது.
'வாட்ஸ் ஆப் மெசேஜ்' மட்டும் அனுப்பி, அதுவும் குறைந்து பிறந்தநாள், பண்டிகைகளுக்கு மட்டும், 'மெசேஜ்' அனுப்பிக் கொள்வர். அப்போது, வருண், ஸ்வேதாவைப் பற்றியும், அவளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் அனுப்பி வைப்பான். அதெல்லாம் முன்பு. இந்த ஒரு ஆண்டில் பெரிதாக இருவரும் தொடர்பில் இல்லை.
''யார் வாட்ச் அனுப்பினாங்கன்னு தெரிஞ்சுதா வினோத்?'' காலையில் வேலைக்கு கிளம்பியவனை உசுப்பினாள், அம்மா.
''வ... வருண்மா, பெங்களூரில் இருந்து அனுப்பி இருக்கிறான்,'' என்று அம்மாவிடம் முதல் முறையாக பொய் சொன்னான். உண்மையைச் சொல்லி காலையிலேயே அம்மாவை குழப்ப விரும்பவில்லை.
''காலேஜில் படிக்கும்போது நம் வீட்டுக்கு வருவானே, அவனா?''
''அவனேதாம்மா, இரவு தான் குறுஞ்செய்தி அனுப்பினான். நேரமாச்சு போயிட்டு வரேன்,'' என்றபடி இதற்கு மேலும் சமாளிக்க விரும்பாமல் கிளம்பினான்.
மாலை வேலை முடிந்து, வீட்டுக்கு போகாமல், 'பீச்'சில் சுண்டல்காரரிடம் வாங்கிய வறுகடலையை கொறித்தபடி குழப்பத்துடன் அமர்ந்திருந்தான், வினோத். சில முறையே பார்த்துப் பழகிய வரைக்கும் ஸ்வேதாவின் மேல் காதல் என்ற உணர்வு வந்ததில்லை. ஆனால், அது அவளுக்கு இருந்திருக்கும் போல.
வருணுக்குப் போன் செய்யலாமா என்று யோசித்து, நிராகரித்தான். 'ரிப்ளை' செய்ய வேண்டாம், நேரில் வருவதாக சொல்லி இருப்பதால், இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிறாள். மேலும், இது வருணுக்குத் தெரிந்திருந்தால் அவனே என்னை அழைத்திருப்பான்.
இன்று புதன் கிழமை. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் அம்மாவை சமாளிக்க வேண்டும் என்று எண்ணி, மொபைல்போனை எடுத்து ஸ்வேதாவின் எண்ணுக்கு, 'தேங்க்யூ' என்ற குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.
மறுநாள் மாலை, அம்மாவிடம் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தான்.
''அம்மா... அந்த வாட்ச்சை அனுப்பியது வருண் இல்லை.''
''தெரியும்பா, யார் அந்தப் பொண்ணு?''
அடிபட்ட பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
''நீ திணறும் போதே பொய் சொல்றேன்னு தெரிஞ்சுகிட்டேன். ஆனா, உன்னால அதை தொடர முடியாதுன்னும் எனக்கு தெரியும். அதான், நீயா சொல்லட்டும்ன்னு விட்டுட்டேன். சொல்லு, யாரது?''
''சாரிம்மா... மறைக்கணும்ன்னு நினைக்கல, வீணா குழம்பிடுவீங்கன்னு தான் சொல்லல. அது, வருணோட தங்கச்சி, ஸ்வேதா. நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. நானே சில தடவை தான் பார்த்திருக்கேன். அவ மேல இதுவரைக்கும் எந்தவித எண்ணமும் எனக்கு இல்லை. ஆனா, அவளுக்கு இருந்திருக்கும் போல...'' என்றான் பெருமூச்சுடன்.
''வருணுக்கு போன் செய்யலையா?''
''இல்லம்மா, இது அவனுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். 'என்னை, 'கான்டாக்ட்' பண்ண வேண்டாம். நானே ஞாயிற்றுக்கிழமை வரேன்'னு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கா,'' என்றான்.
''இங்கே வரப்போறாளா?'' என்று கேட்ட அம்மாவின் முகத்தில், ஆச்சர்ய அதிர்ச்சி.
''நம் சொந்தக்காரர் ஒருத்தர் தாம்பரத்தில் இருக்கார். அவரோட பொண்ணு ஜாதகம் உனக்குப் பொருத்தமா இருக்கு; ஞாயிற்றுக்கிழமை போய் பொண்ணைப் பார்த்துட்டு வரலாம்ன்னு இருந்தேன். அப்பவே ஜோசியர் சொன்னார், உனக்கு சொந்தத்தில் வரன் அமையாது. வரப்போறது புது சொந்தமாத்தான் இருக்கும்,'' என்றாள் பெருமூச்சுடன்.
''உங்ககிட்ட வேற எதையும் நான் மறைக்கல. உங்களோட மனநிலையில் தான், இப்போ நானும் இருக்கேன்மா. இன்னும் மூணு நாள் காத்திருப்போமே,'' என்றான் பரிதாபமாக.
ஞாயிறு ஜோராக விடிந்தது. எப்போதும், 10:00 மணி வரை துாங்குபவன், 8:00 மணிக்கே எழுந்தான், வினோத். வீட்டுக்குள் இருந்தால், இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள மிகவும் மெனக்கெட வேண்டும். எனவே, 'ஸ்போர்ட்ஸ் ஷூ' மாட்டிக் கொண்டு, பார்க் வரை போய் வருவதாக கூறி புறப்பட்டான்.
காலை, 9:00 மணிக்கு ஸ்வேதாவிடம் இருந்து, 'ஈவ்னிங், 3:00 மணிக்கு வரேன். எங்கேயும் போயிடாத...' என, குறுஞ்செய்தி வந்தது.
சில சிற்றுண்டி முன்னேற்பாடுகளுடன் இருவரும் காத்திருந்தனர். 3:10 மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. அம்மா கதவைத் திறக்க, ''நமஸ்காரம் ஆன்ட்டி, ஹாய் வினோத்...'' என்றபடி உள்ளே வந்தாள், ஸ்வேதா.
எளிய, 'மேக் - அப்' மற்றும் சிறிய புன்னகையுடன் அன்று பார்த்ததைப் போல அப்படியே இருந்தாள்.
''வாம்மா... நீ மட்டும் தான் வந்தியா?'' என்றபடி அவள் பின்னால் கண்களால் துழாவினாள், அம்மா.
''ஆமாம் ஆன்ட்டி... பேசுவோம், முதல்ல காபி தரீங்களா? நீயும் உட்காரு வினோத்,'' என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.
வினோத்தை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தபடி, சமையலறைக்கு சென்றாள், அம்மா. 'இது நமக்குச் சரியா வருமாடா?' என்றது, அந்த பார்வை.
''சொல்லு வினோத், வாட்ச் பிடிச்சிருக்கா?'' என்று நேரடியாக ஆரம்பித்தாள், ஸ்வேதா.
''பிடிச்சிருக்கு. எப்படி என் விலாசம் உனக்கு தெரிஞ்சுது?''
அவன் வெறும் கையைப் பார்த்து, சற்று ஏமாற்றத்துடன், ''உன் பிரெண்ட் கேசவோட சிஸ்டர் என்னோட தான் பெங்களூருல வேலை பார்க்கிறா. அவள் மூலமா வாங்கினேன். சரி, அந்த வாட்ச் எங்கே?'' என்றாள்.
''இதோ, இங்கே தான் இருக்கு. இது எதுக்குன்னு புரியல. நீ வரட்டும்னு தான்,'' என்றபடி, காபி கொண்டு வந்த அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
சட்டென பெட்டியிலிருந்து வாட்ச்சை எடுத்து, ''கையை நீட்டு...'' என்றாள்.
இந்த செய்கையால் வினோத்தும், அம்மாவும் ஒன்றாக திடுக்கிட்டனர்.
''இதோ பாரும்மா, பெரியவங்க இல்லாம, நீ நடந்துக்கும் முறை கொஞ்சங் கூட சரியில்லை. நீயும் படிச்சவ தானே? எப்பவோ பார்த்த ஒரு பையன்கிட்ட, அவன் அம்மா முன்னாடியே இப்படியா நடந்துக்குவாங்க?'' என்றாள் கோபமாக.
வினோத்திடம் திரும்பி, ''நீ, வருணுக்கு போன் செய்டா,'' என்று ஆணையிட்டாள்.
இதனால் பதறிப் போவாள் என்று நினைத்து, ஸ்வேதாவைப் பார்த்த இருவரும் ஏமாந்தனர். அமைதியாக அமர்ந்திருந்த அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.
''அண்ணனுக்கு தாராளமா போன் செய்யுங்க. ஆனா, அவன் எடுக்க மாட்டான்,'' என்றாள்.
''ஏன்?'' என்று காட்டமாகக் கேட்டாள், அம்மா.
''அவன் உயிரோட இல்லை.''
இருவரும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தனர்.
''எப்படிம்மா?''
''மூணு மாசம் முன், அப்பாவும், அவனும் பைக்ல போகும்போது, விபத்து ஏற்பட்டு, ரெண்டு பேருமே, ஸ்பாட் அவுட்...'' என்றாள்.
அம்மா அவள் அருகே வந்து அமர்ந்து, ஆதரவாகத் தோளைப் பற்றிக் கொண்டாள். இந்த சம்பவத்தால் ஏதோ மனது பாதித்திருக்கும் போல, அவள் மேல் இப்போது பரிதாபம் ஏற்பட்டது.
''அப்பாவுமா? எங்களுக்குத் தெரியாதும்மா. ஏன்டா, உனக்கு கூடவா தகவல் தெரியல?'' என்று வினோத்திடம் கேட்டாள்.
அதிர்ச்சியிலிருந்து மீளாத வினோத், ''அவன் எனக்கு சீனியர்மா, அவனோட நண்பர்கள் யாருமே எனக்குப் பழக்கம் இல்லையே,'' என்றான், வேதனையுடன்.
கண்களைத் துடைத்துக் கொண்ட ஸ்வேதா பேசத் துவங்கினாள்...
அந்த வாட்ச்சை கையில் எடுத்து பார்த்தபடி, ''பெங்களூருவில், எனக்கு வேலை கிடைச்ச நேரம் இப்படி ஆயிடுச்சு. இரட்டை இழப்பு. ஒரு மாசம் பைத்தியம் பிடிச்ச மாதிரி வீட்லயே இருந்தேன். அம்மாவையும் நார்மலுக்குக் கொண்டு வர ரொம்பவும் சிரமப்பட்டேன். எப்பவும் அப்படியேவா இருந்துட முடியும்? மறுபடி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.
''அண்ணன் இந்த பிராண்ட் வாட்ச் தான் வாங்கணும்ன்னு ரொம்பவும் ஆசைப்பட்டான். இந்த வருஷம் அவனோட பிறந்தநாளுக்கு என் சம்பளத்தில் அதை, 'சர்ப்ரைஸா' வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருந்தேன். ப்ச்... போய் சேர்ந்துட்டான்.
''அப்பாவுக்கு மாற்றலாகி நாங்க பெங்களூரு போனதுக்கு அப்புறம், அவனுக்கு, நீதான் ரொம்பவும் உதவியா இருந்தியாம். அதை அடிக்கடி சொல்வான். உன் வீட்டுக்கு வந்தா, நல்லபடியா கவனிச்சுக்கிறாங்கன்னு, உன் அம்மாவைப் பற்றியும் பெருமையா சொல்வான். பெங்களூரு வந்ததுக்கு அப்புறம் அவனோட தொடர்பை நீ படிப்படியா குறைச்சுட்டியாம்,'' என்றாள்.
அவளது பார்வையை சந்திக்க முடியாமல் குற்ற உணர்வுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டான், வினோத்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள் தொடர்ந்தாள்...
''உனக்கு வாட்ச் வந்ததே, அந்த செவ்வாய்க்கிழமை தான் அவனுக்குப் பிறந்தநாள்.''
வினோத்திற்கு மனதுக்குள், 'சொரேர்' என்றது.
''ரொம்பவும், 'பீல்' பண்ணாத, என்னோட திருப்திக்காக, உன்னை அவனா நினைச்சு, இந்த வாட்ச்சை வாங்கி அனுப்பினேன். கையைக் குடு...'' என்றபடியே அவன் கையை உரிமையுடன் பிடித்து வாட்ச்சை கட்டி விட்டாள்.
அம்மாவிடம் திரும்பி, ''மன்னிச்சிடுங்க அம்மா, முன்னாடியே இதைச் சொல்லாம விட்டது என்னோட தப்பு தான். நீங்களும் வீணா குழம்பிட்டீங்க. எனக்கு ஆறு மாசம் முன்னமே கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. அவர், துபாயில் இருக்கார்.
''அடுத்த மாசம் இந்தியா வந்ததும் கல்யாணம். கல்யாண பத்திரிகையோட வரேன், நீங்கதான் வந்து முன்னே நின்னு நடத்திக் கொடுக்கணும்,'' என்றபடி அவள் காலில் விழுந்து எழுந்து, ''போயிட்டு வரேன்,'' என்றபடி வீட்டை விட்டு வெளியேறினாள்.
இருவரும் கலங்கிய கண்களுடன் செய்வதறியாது நின்றனர். வினோத் கையை திருப்பி வாட்ச்சை பார்த்தான். இப்போது, அது அவனுக்கு, ராக்கி கயிராக தெரிந்தது.
என். எஸ். பார்த்தசாரதி