
பா - கே
நண்பர் வீட்டு திருமணம் ஒன்றுக்கு, நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். மேடையில், திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு வந்திருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், நான். திடீரென, துாரத்தில் தெரிந்த ஒருவரை, அருகில் வர சொல்லி கை அசைத்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
யாரென்று திரும்பி பார்த்தேன். கம்பீரமான தோற்றத்துடன் ஒருவர், எங்களை நோக்கி வந்தார்.
'மணி... இவர், மைசூர் உயிரியல் பூங்காவில், கண்காணிப்பாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றி நன்கறிந்தவர். 'வைல்ட் - லைப்' போட்டோகிராபியிலும் ஆர்வம் உள்ளவர்...' என்று, அறிமுகப்படுத்தினார்.
அவரை பார்த்தால், 45 வயது தான் மதிக்க முடியும். அடர்த்தியான தலைமுடியில், ஆங்காங்கு நரைத்திருந்தது. உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
அவரிடம், 'ஹலோ...' சொல்லி, மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். லென்ஸ் மாமாவும், அவரும் கதைக்க ஆரம்பித்தனர்.
அப்போது, எங்களுக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த, 'பெரிசு'கள் இருவர், சத்தமாக பேசுவது காதில் விழுந்தது.
அதில் ஒருவர், 'என்ன சார், வீட்டம்மாவை கல்யாணத்துக்கு அழைச்சுட்டு வரலையா?' என்றார்.
'நான் ரெடியாகி, ஒரு மணி நேரம் வாசலில் காத்திருந்தது தான் மிச்சம். அதுவரை, அலங்காரம் செய்து முடிஞ்சபாடில்லை. அது, கிளம்பும் வரைக்கும், நான் காத்திருந்தா, இங்க, கல்யாணமே முடிஞ்சு போயிடும். அதான், நான் மட்டும் ஓடி வந்துட்டேன்...' என்றார், மற்றொருவர்.
அவர் இதை சொல்லும்போது, ஏதோ பந்தயத்தில் ஜெயித்த மாதிரி ஒரு வெற்றி களிப்பு அவர் குரலிலும், முகத்திலும் தெரிந்ததைப் பார்த்தேன்.
'தன் மனைவிக்கு அவர் கொடுக்கும் மரியாதை இவ்வளவு தான் போலிருக்கு...' என்று நினைத்தேன்.
இந்த, 'டயலாக்'கை லென்ஸ் மாமாவும், அவர் நண்பரும் கூட கேட்டிருப்பர் போல... உடனே பின்புறம் திரும்பி, 'நீங்க, உங்க மனைவியை பற்றி இப்படி கேவலமா பேசியது, நாரைகளுக்கு தெரிஞ்சா, ரொம்ப கோபப்பட்டு, நேரா வந்து, உங்களை கொத்தி ரணகளமாக்கி விடும்...' என்றார், அந்த விலங்கு ஆர்வலர்.
பெரிசுகள் இரண்டும், தலைதெறிக்க அவ்விடத்தை விட்டு ஓடினர்.
நாரையை மனுஷனோடு கோர்த்து விடுவதற்கான காரணம் புரியாமல் பார்த்தேன். லென்ஸ் மாமாவுக்கும் இதே சந்தேகம் வர, நண்பரிடம் கேட்டே விட்டார்.
அதற்கு அவர் கூறியது:
பரிவு - பாசம் இது எல்லாம் நம்மிடம் மட்டும் தான் இருக்குன்னு நினைச்சுக் கிட்டிருக்கீங்களா? ஆனா, சில பறவைகள்கிட்ட இருக்கிற பாசம் இருக்கே, நினைத்தே பார்க்க முடியாது.
'சாரஸ் ஸ்கிரீன்'னு, நாரை இனம். இவை, இந்தியாவின் ராஜஸ்தான் மாநில காடுகளில் அதிகமாக இருக்கிறது. நாரை வகையில, இந்த இனம் தான், மனிதன் உயரத்துக்கு வளரும் தன்மை கொண்டது.
இதோட தலை, சிவப்பு நிறமாகவும், உடம்பு, நீல நிறமாகவும் இருக்கும். ரொம்ப உயரத்தில் பறக்கும் சக்தி கொண்டது. ஜோடியா வானத்துல பறக்கும்போது, மேகம் மிதந்து போவதைப் போல் அவ்வளவு அழகாக இருக்கும்.
பறவைகளில், சாரஸ் ஸ்கிரீன் ஜோடிகள், ரொம்ப அன்பாகவும், நெருக்கமாகவும் வாழக் கூடியது. ஒரு முறை ஜோடி சேர்ந்ததுன்னா, கடைசி வரைக்கும் இணை பிரியறதில்லை.
சாப்பிடறப்போ கூட, ரெண்டும் ரொம்பவும் நெருக்கமா நின்னுட்டுத்தான் இருக்கும். பறக்கறப் போதும் ரொம்ப நெருக்கமாத்தான் பறந்து போவும். தனியா எங்கேயும் போவதில்லை.
ராஜஸ்தானில் உள்ள கிராமங்களில், குஞ்சு பறவையா இருக்கும்போதே இந்த நாரைகளை பிடித்து வந்து, வீடுகளில் வளர்ப்பாங்க.
இது எதற்கு என்றால், நாய் மாதிரி விசுவாசத்தோடு இருக்கும்; வீட்டையும் காவல் காக்கும்.
இந்த பறவைக்கு, நடனம் கூட தெரியும். அழகா நடனம் ஆடும். அதுக்கு, 'நாரை நடனம்' என்றே பெயர் உண்டு.
முதல்ல ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் நின்று, வண்டிச்சக்கரம் சுத்தறது மாதிரி சுத்திக்கிட்டே, தலையை மேலேயும், கீழேயும் ஆட்டும். தரையில் கிடக்கிற இறகுகளையும், சின்ன சின்ன கல்லையும் தன் வாயால் கவ்வி, அப்படியே அண்ணாந்து மேலே துாக்கிப் போடும். அழகான தன் இறக்கைகளை வேகமா அடிச்சுக்கிட்டே தாவித்தாவி ஓடும்.
இந்த நடனம் சுமார், 10 நிமிடம் வரை அரங்கேறும். கூட்டத்தில, ஒரு பறவை எதாவது காரணத்திற்காக நடனம் ஆட ஆரம்பிச்சதுன்னா, அங்குள்ள மற்ற பறவைகளும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆட ஆரம்பிச்சுடும்.
கூட்டமா சேர்ந்து ஆடற அந்த காட்சியை பார்க்கறதுக்கே ரொம்ப அழகா இருக்கும்.
இது சத்தம் போட்டா, 'டிரம்பட்' வாசிக்கிற ஒலி எழும்.
பாசமுள்ள இந்த பறவை இனத்தை யாராவது பார்க்க ஆசைப்பட்டா, ராஜஸ்தானுக்கு ஒரு நடை போயிட்டு வாங்க.
- இப்படி கூறி முடிக்கவும், 'இவரை, ஒருமுறை அலுவலகத்துக்கு வரவழைத்து, நிறைய விஷயங்கள் கேட்க வேண்டும்...' என்று, நினைத்துக் கொண்டேன்.
'போன வேலையை விட்டுட்டீங்களா?' என்று தானே கேட்கிறீர்கள். அதை மறப்போமா? மணமக்களை வாழ்த்தி, விருந்துண்ட பிறகு தான் அங்கிருந்து கிளம்பினோம்.
ப
இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த காலம். சேலத்தில், வழக்கறிஞரா தொழில் நடத்திக் கொண்டிருந்தார், ராஜாஜி.
ஒருநாள், தன்னிடம் வேலை செய்துகிட்டு இருந்த பணியாளர் ஒருவரை கூப்பிட்டு, 'இந்த அஞ்சல் தலையை, தபால் கவரில் ஒட்டிக்கிட்டு வா...' என்றார்.
அந்த ஆள் உடனே, கவரையும், அஞ்சல் தலையையும் வாங்கிட்டு போய், பசை தடவி ஒட்டி வந்து, ராஜாஜியிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்ததும், சிரிக்க ஆரம்பித்து விட்டார், ராஜாஜி.
அந்த பணியாளரிடம், 'ஏம்பா, நாங்க எல்லாரும் எவ்வளவோ பாடுபட்டு முயற்சி பண்ணி போராடிகிட்டு வர்றோம். எங்களால முடியல. ஆனால், அந்த காரியத்தை, நீ, ஒரு நிமிஷத்துல செஞ்சுட்டியே...' என்று சிரித்தார், ராஜாஜி.
'ஒண்ணும் புரியல. என்ன விஷயம்...' என்று கேட்டார், பணியாளர்.
'ஆமாப்பா... நீ, ஒரு நிமிஷத்துல, பிரிட்டிஷ் மன்னரை கவிழ்த்துட்டியே...' என்றார், ராஜாஜி.
அப்புறம் தான் விபரம் புரிந்தது.
மன்னர் உருவம் பொறித்த தபால் தலையை, கவரில், தலைகீழாக ஒட்டியிருந்தார், அந்த பணியாளர். அதை பார்த்துவிட்டு தான், ராஜாஜி அப்படி சொன்னார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.