
முன்கதைச் சுருக்கம்: கிருஷ்ணராஜின் மகன் என்று, 'டூ-வீலர்' மெக்கானிக்கான, சந்தோஷை போலியாக ஏற்பாடு செய்கிறான், தாமோதரின் மகனான விவேக். உண்மை தெரியாமல், சந்தோஷை தன் மகன் என்றே கருதி, அவனை வரவேற்க அமர்க்களமான ஏற்பாடுகளை செய்கின்றனர், கிருஷ்ணராஜும், அவர் மகள் கார்த்திகாவும்.
சந்தோஷின் மனைவிக்கு மட்டும், இவ்வாறு நடிப்பதில் துளியும் விருப்பமில்லாமல், அவ்வப்போது தன் கணவனுக்கு, அறிவுறுத்தி வந்தாள். ஆனால், சந்தோஷ் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
சந்தோஷுடன் அவ்வப்போது, போனில் பேசி, அவன் தான் சொன்னபடி சரியாக நடிக்கிறானா என்று சோதனை செய்து வந்தான், விவேக்.
சந்தோஷை அழைத்துக் கொண்டு, கிருஷ்ணராஜ் வீட்டுக்கு சென்றனர், தனாவும், குமாரும். அப்போது, விவேக் போன் செய்ய, ரகசிய குரலில் பேசினான், சந்தோஷ். இது, தனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கிருஷ்ணராஜின் பங்களாவுக்கு, போலீஸ் வாகனம் பிரவேசம் செய்தது.
சந்திரமோகன் ஐ.பி.எஸ்.,சுடன், மேலும், இரண்டு போலீஸ் ஆபீசர்கள் இருந்தனர். சிகப்பு நிற போலீஸ் ஷூ மற்றும் ஷர்ட்டின் முகப்பில் அணிந்திருந்த முத்திரையோடு கூடிய பெயர் வில்லையுடன் அவர்கள் காட்சி தந்தனர்.
அவர்கள் மூவரும் எவர் அனுமதியையும் பெறாமல் உள் நுழைந்தனர். ஹாலில் இருந்த வேலைக்காரன், அவர்களைப் பார்த்து சற்று திகைத்தான்.
அவனிடம், 'மிஸ்டர் கிருஷ்ணராஜ் இருக்காரா, பங்களாவுல வேற யாரெல்லாம் இருக்கீங்க?' என்று கேட்டனர்.
உள்ளே ஓடினான், வேலைக்காரன்.
அடுத்த சில வினாடிகளில், கார்த்திகாவும், தனஞ்ஜெயனும், குமாருடன் வெளியே வந்து மூவரையும் பார்த்து திகைத்திட, சந்தோஷும், சுமதியும் கூட, குழந்தைகளோடு ஹாலுக்கு வந்திருந்தனர்.
''சார், நீங்க?''
''ஐ ஆம் சந்திரமோகன். ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர். மிஸ்டர் கிருஷ்ணராஜ் எங்கே?''
''அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர் ஒரு பெட்ரிட்டன்...'' பதற்றமாக சொன்னாள், கார்த்திகா.
''அவர் இப்ப எந்த நிலையில் இருந்தாலும், நாங்க அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.''
சந்திரமோகனின் இறுக்கமான குரல், கார்த்திகாவை கலவரப்படுத்தியது.
இடைமறித்து, ''எக்ஸ்க்யூஸ்மி சார்... அவர், என்ன தப்பு செய்தார்? கடந்த ஒரு வருஷமாவே அவர் நடமாடவே முடியாத நிலையில இருக்கார். அப்படி இருக்க, அவரை கைது செய்யிறோம்ன்னா, எப்படி சார்?'' என்றான், தனஞ்ஜெயன்.
''உங்க கேள்விக்கெல்லாம், 'இன்டர்போல்'ங்கிற, இன்டர்நேஷனல் போலீஸ் தான் விரிவான பதிலை சொல்ல முடியும். நாங்க இன்டர்போலுக்கு துணை நிக்கிற கிரைம் பிராஞ்ச் ஆபீசர்ஸ். பை த பை... நாங்க, மிஸ்டர் கிருஷ்ணராஜை பார்க்கலாமா?''
''நோ... அப்பாவை, அப்படி எல்லாம் எல்லாரும் பார்த்துட முடியாது. 'இம்யூன் பிராப்ளம்' வரும்ங்கிறதால டாக்டரோட அனுமதி முக்கியம்...'' சந்திரமோகனை தடுக்க பார்த்தாள், கார்த்திகா.
''சரி, டாக்டர் எங்கே? அவசியப்பட்டா, நாங்க, 'கொரோனா கிட்' என்ற, பி.பி.இ., - 'பர்சனல் புரொடக்டிவ் எக்யூப்மென்ட் கிட்'டை அணிஞ்சுகிட்டு, அவரை பார்க்கறோம்.''
''இப்ப அந்த, 'கிட்'டுக்கு எங்க போக?''
''கவலைப்படாதீங்க, நாங்க கொண்டு வந்திருக்கோம்,'' என்றபடியே சந்திரமோகன், தன் சக ஆபீசர்களில் ஒருவரை பார்க்க, தாங்கள் வந்த வாகனத்தில் இருக்கும் அதை எடுத்து வர ஓடினார்.
''திடீர்ன்னு வந்து ஒரு பேஷண்டை கைது செய்யுறோம்னா எப்படி சார். மிஸ்டர் கிருஷ்ணராஜ், சொசைட்டியில பெரிய மனுஷன். அவரை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு.''
''நீங்க?''
''நான், அவர் செகரட்டரி. என் பெயர், தனஞ்ஜெயன்.''
''மிஸ்டர் தனஞ்ஜெயன், உங்க வரையில பெரிய மனுஷனா தெரியற மிஸ்டர் கிருஷ்ணராஜ், உண்மையில், சர்வதேச குற்றவாளி. தங்கம், சாமி சிலை, போதை பொருட்கள்ன்னு எல்லாத்தையும் கடத்தின ஒரு கூட்டத்தோட தமிழ்நாட்டு ஏஜென்ட் தான், மிஸ்டர் கிருஷ்ணராஜ்.''
''சார், இவர் அப்பாவி. தாமோதர் என்கிறவர் தான் உண்மையில் ஏஜென்ட். இவர், யாருன்னு தெரியாம அவர் கூட பழகினவர். அதுவும் கூட எப்பவோ, இப்ப கிடையாது.''
''மிஸ்டர் தனஞ்ஜெயன், அந்த தாமோதரை நாங்க, 'அரஸ்ட்' பண்ணிட்டோம். அவரும் கிருஷ்ணராஜும், கூட்டாளிகள் என்பதற்கான ஆதாரங்கள் எங்ககிட்ட நிறையவே இருக்கு. நீங்க விவாதம் பண்ணாம, எங்களை வேலை செய்ய விடறீங்களா?'' என்று, சந்திரமோகன் கூறிட, 'பி.பி.இ., கிட்' வந்ததும், மூவரும் வேகமாய் அதை அணிந்து கொண்டனர்.
''ஒரு நிமிஷம் சார்... நாங்க எங்க வக்கீலை கூப்பிடறோம், அவர் அனுமதிச்சா, நீங்க கைது செய்து கூட்டிக்கிட்டு போங்க,'' என்றான், தனஞ்ஜெயன்.
அப்போது, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, 'க்ரீச்' சத்தத்துடன் அவர்களை நோக்கி வந்தார், கிருஷ்ணராஜ்.
சந்திரமோகனை பார்த்து, ''ஆபீசர்ஸ்... நான் குற்றவாளி தான், ஒத்துக்கிறேன். என்னை கைது செய்யுங்க. 'ஹேண்ட் லாக்' இருக்கா? கமான்...'' என்று, தன் இரு கைகளையும் கைவிலங்குக்காக துாக்கினார்.
''அப்பா...'' என்று அலறினாள், கார்த்திகா.
''வருத்தப்படாத, கார்த்திகா, நான் குற்றவாளின்னு தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே? நானே போலீஸ்ல சரண்டர் ஆகணும்ன்னு தானே இருந்தேன். அதான் நல்ல படியா முடிஞ்சுடிச்சே. உன் அண்ணனும் வந்துட்டான். அவன் ஒரு பக்கம், தனஞ்ஜெயன் ஒரு பக்கம். நீ, அதை நினைச்சு சந்தோஷப்படு.
''எப்படி இருந்தாலும், இன்னும் சில வாரங்களோ, இல்ல சில மாதங்களோ, உயிர் வாழ்ந்தா, அதுவே பெருசு. சாகறதுக்கு முன், நீதிக்கு தலை வணங்கி தண்டனையை ஏத்துக்கிட்டு செத்தா தான், நான் திருந்தினதுக்கும் அர்த்தம் இல்லையா?'' என்று, நா குழற கேட்டார்.
கார்த்திகாவின் கண்களில் பொல பொலவென்று கண்ணீர்.
மகன் என்று சொல்லி வந்திருக்கும், சந்தோஷோ, நடப்பதை, நாடகம் போல் பார்த்தபடி இருந்தான். ஆனால், அவன் மனைவி சுமதியிடமோ பெரும் சலனம்.
''ஆமா, இவர் யார்?'' என்று, கிருஷ்ணராஜ் கையில் விலங்கு மாட்டியபடி, சந்தோஷைப் பார்த்து கேட்டார், சந்திரமோகன்.
''இவர் தான் எங்க சாரோட ஒரே மகன்...'' என்று, சந்தோஷை பார்த்தபடியே சொன்னான், தனா.
''ஒரு டாட்டர் மட்டும்தான்னு, 'ரிக்கார்ட்ஸ்'ல இருக்கு.''
''அப்கோர்ஸ்... அது நேத்து வரை. இப்ப மகள் மட்டுமில்ல, மகனும் உண்டு.''
''அவசியப்பட்டா, அப்ப இவரையும் நாங்க கைது செய்ய வேண்டி வரும்,'' என்று சந்திரமோகன் சொல்ல, அடுத்த வினாடியே பதறினாள், சுமதி.
''இவர், ஒரு தப்பும் பண்ணலியே சார்... இவரையும் கைது செய்வோம்ன்னா எப்படி சார்?'' குறுக்கில் புகுந்து கேட்டான், குமார்.
''எப்படி அப்பாவோட சொத்துல மகனுக்கு பங்கு உண்டோ, அதே மாதிரி குற்றங்கள்லயும் உண்டு. அப்பாவுக்காக, மகன் குற்றச் செயல்களில் இறங்கி இருக்கலாம் இல்லையா?''
''சார், இவ்வளவு நாள் இவர் கூடவே இல்லை. நாங்க இவரை படாதபாடுபட்டு கண்டுபிடிச்சு கூட்டிகிட்டு வந்துருக்கோம். இன்னும் சொல்லப் போனா, மிஸ்டர் கிருஷ்ணராஜ், தன் மகனையே இப்பதான் பார்க்கிறார். அதான் உண்மை,'' என்று அழுத்தம் கொடுத்து சொன்னான், தனா.
அதை கேட்டு இளக்காரமாய் சிரித்தார்.
''என்ன சார் சிரிக்கிறீங்க?''
''ஒரு இன்டர்நேஷனல் கிரிமினல் எப்படி எல்லாம், நாடகம் போடுவார்ன்னு எங்களுக்கு தெரியும். இப்போதைக்கு மிஸ்டர் கிருஷ்ணராஜோட சொத்துக்களை நாங்க, 'பிளாக்' பண்ணாம இருக்க, அவருக்கு ஆண் வாரிசு இருக்கிறதா நீங்க சொல்றதா, நான் சொல்றேன். அதுக்கு நீங்க என்ன சொல்வீங்க?''
''அப்படின்னா, இவரோட, 'பார்ட்னர்' மிஸ்டர் தாமோதருக்கும், விவேக்குன்னு ஒரு பையன் இருக்கான். அவனையும் கைது செய்வீங்களா?''
''அதுல என்ன சந்தேகம்? விவேக் தான் இப்ப தாமோதர் இடத்திலிருந்து எல்லா காரியங்களையும் செய்யிறதா, எங்களுக்கு தகவல் கிடைச்சுருக்கு. எங்க, 'லிஸ்ட்'ல அவர் பேரும் இருக்கு. அவர் எங்கேயும் தப்பி ஓடிடாம இருக்க, எல்லா விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்திருக்கோம்; அவர் பாஸ்போர்ட்டையும், 'பிளாக்' பண்ணிட்டோம்.''
சந்திரமோகன், விவேக் பற்றி சொன்ன மறு வினாடியே, அதுவரை இறுக்கமாய் இருந்த சந்தோஷ் முகத்திலும் பலத்த மாற்றங்கள். மனைவி சுமதியோ, அவனை தனியே அழைத்துச் சென்று, தழைந்த குரலில் புலம்பத் துவங்கினாள்.
''கேட்டீங்களா... இனி, கோடீஸ்வரன் நான்னு மார் தட்டிக்கிட்டீங்களே... உங்களையும் பிடிச்சு உள்ளே போடுவாங்களாம். இதுக்கா நாம இங்க வந்துருக்கோம்... நீங்க உள்ளே போயிட்டா, இந்த இரண்டு பெண் குழந்தைகளையும் வெச்சுகிட்டு, நான் என்னங்க பண்ணுவேன்?''
''வாயை மூடு. அந்த ஆபீசர் சும்மா மிரட்டிப் பார்க்கிறாரு. கோடி ரூபாய் ஒண்ணும் சும்மா வந்துடாது. அப்படியே கைது பண்ணினா தான், என்ன இப்போ? நீ, இந்த பங்களாவுல ராணி மாதிரி இருந்துகிட்டு, நல்ல வக்கீலை வெச்சு, என்னை வெளியே எடுக்க பாரு.''
''இது என்ன சாதாரண வழக்கா... இன்டர்நேஷனல் குற்றம்ங்க. நீங்க, உள்ளே போனா போனது தான். உங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு, நான் மட்டும் சந்தோஷமா வாழ முடியுமா?''
இருவரும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்ள, கார்த்திகா அவர்கள் அருகில் வந்து, ''அண்ணே, அண்ணி... நடக்கிறதை எல்லாம் பார்த்து பயந்துட்டீங்களா? ஒருவேளை, உங்களை கைது பண்ணினாலும், நாங்க, சுலபமா உங்களை வெளியே கொண்டு வந்துடுவோம். நீங்க இவ்வளவு நாள் எங்க கூட இல்லைங்கிறதுக்கு, எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கு. அனாவசியமா பயப்படாதீங்க,'' என்றாள்.
''பார்த்தியா, நீ தேவையே இல்லாம பயப்படறியே...'' என்றான், சந்தோஷ்.
அதே வேகத்தில், ''ஆமா, அந்த விவேக்கை கைது செய்துட்டாங்களா... இல்லை, கைது செய்யப் போறாங்களா?'' என்று, கேட்டான்.
அது ஸ்பெஷல் ஆபீசர் சந்திரமோகன் காதிலும் விழுந்தது.
''நாங்க தேடறது தெரிஞ்சு, அவன் தலைமறைவாய் ஆயிட்டான். ஆனா, நிச்சயம் பிடிச்சுடுவோம்,'' என்றார்.
உடனே, சந்திரமோகனோடு தனியே ஒதுங்கிச் சென்ற சந்தோஷ், ''சார், அவன் இருக்கிற இடம் எனக்கு தெரியும். நான் அதை சொன்னா, என்னை விட்டுடுவீங்களா?''
''நீங்களே இப்பதான் வந்திருக்கிறதா சொன்னாங்க. அப்படி இருக்க, அந்த விவேக்கை எப்படி உங்களுக்கு தெரியும்?'' என்று போட்டு வாங்கினார், சந்திரமோகன்.
''சார், இவர் ஒரு சாதாரண மெக்கானிக். கார்ப்பரேஷன்ல வேலை பார்த்த, ஸ்வீப்பரோட மகன். இந்த சர்வதேச கடத்தல் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. இவருக்கு பணத்தாசை காட்டி நடிக்கச் சொன்னான், அந்த விவேக். இவரும் சரின்னுட்டாரு.
''இதான் சார் சத்தியம், இதான் நிஜம். உண்மையில், அந்த பெரிய மனுஷனோட மகன் யாரோ, எங்க இருக்காரோ? எங்களுக்கு மட்டுமில்ல, யாருக்கும் தெரியாது...'' என்று உண்மைகளை போட்டு உடைத்தாள், சந்தோஷின் மனைவி சுமதி.
தனஞ்ஜெயன், குமார் மற்றும் கார்த்திகா என, சகலரிடமும் இடி விழுந்தது போல், ஒரு அதிர்ச்சி.
— தொடரும்.- இந்திரா சவுந்தர்ராஜன்