
'அந்த ஆளு என்னை கன்னாபின்னான்னு திட்டிட்டான் சார். அதை நினைச்சா, ரொம்ப வருத்தமாயிருக்கு...' என்று, பெரியவரிடம் சொல்லி கவலைப்பட்டார், ஒருத்தர்.
'இதுல கவலைப்படறதுக்கு என்ன இருக்கு?' என்றார், பெரியவர்.
'என்ன சார் இப்படி சொல்றீங்க. ஒருத்தர் நம்மை பார்த்து திட்டினா வருத்தமா இருக்காதா?' என்றார்.
'அது எப்படி வருத்தமா இருக்கும். திட்டறதுங்கறது என்ன? அது வெறும் சப்தம் தானே...' என்றார், அந்த பெரியவர்.
அந்த பெரியவர் சொல்வதில் விஷயம் உள்ளது. அதை நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம் என்றால், நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா என தெரியவில்லை. இருந்தாலும் அந்தப் பெரியவர் கொடுத்த விளக்கத்தை பார்ப்போம்...
ரயிலில் ஹரித்துவார் போய் கொண்டிருந்தார், சாது. ஏகப்பட்ட கூட்டம். டிக்கெட் வாங்கி, பாதி பேர். 'எதற்கு அனாவசியமா டிக்கெட்...' என்ற நினைப்பில், பாதி பேர்.
சாது அமர வேண்டிய இடத்தில், ஒரு ஆள் படுத்திருந்தான். கொஞ்சம் முரட்டு ஆசாமி. அவன் கால் பக்கத்தில் கொஞ்சம் இடம் இருந்தது. அங்கு போய் உட்கார்ந்தார், சாது.
ராத்திரி முழுவதும் இவரை காலால் உதைத்தபடியே இருந்தான், அந்த ஆள்.
சாதுவுக்கு அது அவமானமாக இருந்தாலும், சகித்து கொண்டார். பொழுது விடிந்ததும், ஹரித்துவார் வந்து சேர்ந்தார்.
அங்கே ஒரு பெரிய ஞானியை சந்தித்தார்.
ராத்திரி ரயிலில் அந்த ஆள் உதைத்ததையும், அதனால், தனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் அவரிடம் கூறினார்.
'ஏன் சுவாமி, எனக்குத் துக்கம் ஏற்பட்டதே, அது தவறா?' என்று கேட்டார், சாது.
'தவறு தான்...' என்ற ஞானி, தொடர்ந்தார்...
'உனக்கு இன்னமும் தேக அபிமானம் போகவில்லை என்பதை இது காட்டுகிறது. யாராவது தன்னை வந்தனை செய்தால், உண்மையான ஞானி, அதற்காக சந்தோஷப்பட மாட்டார்ன்னு சொல்றார், அஷ்டாவக்கிரர்.
'நிந்தனைங்கறது ஒரு ஒலி தான். தேக அபிமானம் இருக்கும்வரைக்கும், இந்த ஒலி நம்மை வேதனைப்படுத்தும். நான் தேகம் இல்லை, ஆத்மா என்ற நினைவு இருந்தால், இந்த ஒலி நம்மைப் பாதிக்காது.
'ஒரு சாதகன் பாராட்டுதலை விஷம் என, நினைத்து பயப்பட வேண்டும்; அவமானத்தை அமிர்தமாக நினைத்து சந்தோஷப்பட வேண்டும் என்கிறார், மனு என்பவர்.
'நிந்தனை - அபகீர்த்தி - அவமானம் எல்லாம் ஆண்டவன் கொடுக்கிற பிரசாதமாக நினைக்க வேண்டும். அப்போது தான் உண்மையான ஞானிக்கு பாதிப்பு ஏதும் இருக்காது...' எனக் கூறி முடித்தார், ஞானி.
நமக்கெல்லாம் இந்த பக்குவம் வருமா? வந்தால் மகிழ்ச்சி தான்.
பி. என். பி.,