
சோ ராமசாமி எழுதிய, 'திரையுலகில் திரும்பிப் பார்க்கிறேன்' என்ற நுாலிலிருந்து:
தமிழில், மிகவும் அதிகமான படங்களைத் தயாரித்த, தயாரிப்பாளர், பி.ஆர்.பந்துலு.
நாடக நடிகராக ஆரம்பித்து, தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தவர். தன் உழைப்பால் உயர்ந்தும், சற்றும் அகம்பாவமோ, கர்வமோ இல்லாதவர்.
அவருக்கு கோபம் வரும்போது, ஸ்டுடியோவே அதிரும். ஆனால், சில வினாடிகளிலேயே, கோபித்துக் கொண்ட மனிதர் இவரா எனும் அளவுக்கு சாந்தமாகி விடுவார்.
தன்னை, யாரோ அவமதித்து விட்டனர் என்றோ, மரியாதை குறைவாக நடந்து கொண்டனர் என்றோ, இவர் யார் மீதும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே, இவருக்கு அடிக்கடி கோபம் வரும்.
நையாண்டி செய்வதில் நிபுணர். அதில், விசேஷம் என்னவென்றால், மற்றவர் செய்யும் நையாண்டியையும் சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்.
பல ஆண்டுகளுக்கு முன், அவர் நடித்த, நாம் இருவர் படத்தில், அவர் பேசிய வசனமும், அதை சொல்லும் பாணியும் எனக்கு நினைவில் இருந்தன. ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில், பலரிடமும், அதை மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருந்தேன். இதை யாரோ அவரிடம் சொல்லி விட்டனர்.
என்னை அழைத்தார், பந்துலு.
'என்னய்யா என்னை மாதிரிப் பேசி, கிண்டல் பண்றீயாமே?' என்று உரக்கக் கேட்டார். அவரிடம் தகவல் சொல்லியவருக்குப் பரம திருப்தியாக இருந்திருக்கும்.
'சும்மா விளையாட்டுக்குப் பண்ணிக் காட்டிக்கிட்டிருந்தேன் சார்...' என்றேன்.
'அது சரி, மத்தவங்க, 'என்ஜாய்' பண்ணினா போதுமா? நான், 'என்ஜாய்' பண்ண வேண்டாமா? எனக்கு பண்ணிக் காட்டு...' என்றார், பந்துலு.
நான் எவ்வளவோ மறுத்தும், அவர் பிடிவாதம் பிடிக்க, அவரையே கிண்டல் செய்து பேசி காட்டினேன்.
விழுந்து விழுந்து ரசித்துவிட்டு, 'ஆனாலும் ரொம்ப ஓவராத்தான் கிண்டல் பண்றீங்க...' எனக் கூறி தொடர்ந்தார்...
'என்னை பற்றி ஒரு கதை தெரியுமா? நான் உணர்ச்சிமயமாக நடிக்கும் காட்சிகளுக்காக கொஞ்சம், 'மூட் டெவலப்' பண்ணிப்பேன். இதை கிண்டல் பண்ணி, ஒரு கதை சொல்வாங்க.
'அதாவது, ராமநாதபுரத்திலே எனக்கு படப்பிடிப்பாம். உணர்ச்சிமயமான காட்சின்னு எங்கிட்ட சொல்லிட்டாங்களாம்.
'அதனால், நான் எழும்பூர் ஸ்டேஷனில், டிக்கெட் எடுக்கும்போதே, 'மூட் டெவலப்' பண்ணிக்கிட்டு, டிக்கெட் கவுன்டர்ல இருந்தவரிடம், விம்மி, விம்மி அழுதுகிட்டே, 'அய்யா, எப்படியாவது எனக்கு ராமநாதபுரத்துக்கு ஒரு டிக்கெட் கொடுத்திடுங்க; மறுக்காதீங்க' என்று ஸ்டேஷன் கலங்கும்படியாக கதறினேனாம்.
'இப்படி ஒரு கதை சொல்வாங்களே... அது தெரியாதா உமக்கு? இனிமேல், கிண்டல் பண்றப்ப அதையும் சேர்த்துக்க. சுவாரசியமாய் இருக்கும்...' என, சொல்லிவிட்டு சென்றார்.
என்னைப் பற்றி பெரிதாக தகவல் எடுத்துச் சென்று, அவரிடம் புகார் சமர்ப்பித்தவருக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம். இந்த மாதிரி, தன்னைப் பற்றிய நையாண்டியை ரசித்துக் கொள்ளும் பண்பு, உண்மையான பெரிய மனிதரிடம் தான் இருக்கும்; பந்துலுவிடம் இருந்தது.
- நடுத்தெரு நாராயணன்