sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அவனும் நல்ல அப்பாவே!

/

அவனும் நல்ல அப்பாவே!

அவனும் நல்ல அப்பாவே!

அவனும் நல்ல அப்பாவே!


PUBLISHED ON : மே 26, 2024

Google News

PUBLISHED ON : மே 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இன்னைக்கு எப்படியாவது அந்த, 'பிகரை கரெக்ட்' பண்ணிடணும்...' என முணுமுணுத்தபடி, மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான், ராகவன்.

''ஏய் வைதேகி... சீக்கிரம் காபி கொண்டு வா. முக்கியமான வாடிக்கையாளரை பார்க்க போகணும்,'' என்றான்.

'என்னடா அதிசயமா இருக்கு, 10:00 மணி ஆபீசுக்கு, 9:00 மணிக்கு எழுப்பினாலும் எழாத மனுஷன், 7:00 மணிக்கு குளிச்சு ரெடியா இருக்காரே, சம்திங் ராங்...' என, நினைத்துக் கொண்டாள், வைதேகி.

''ஏங்க அப்படி என்ன தலை போற அவசரமான வேலை. நம் பொண்ணு, சுதாவுக்கு இன்னைக்கு, 'ஸ்பெஷல் கிளாஸ்' இருக்கு. அவளை ஸ்கூல்ல விட்டுட்டு, நீங்க, உங்க வாடிக்கையாளரை பார்க்கலாம்,'' என்றாள்.

''என் தம்பி கணேசன் எங்கே போனான், அவனை கொண்டு விடச் சொல்லு. நான், 8:00 மணிக்குள்ள போயாகணும்.''

அப்போதுதான், 'ஜிம்'முக்கு சென்று வீட்டுக்குள் நுழைந்தான், ராகவனின் தம்பி, கணேசன்.

''டேய் கணேசா, சுதாவை ஸ்கூல்ல கொண்டு போய் விடு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.''

வேகமாக செல்லும் அண்ணனை ஒரு கணம் உற்று பார்த்து, ''அண்ணா, நீ ரொம்ப தப்பான வழியில போற...'' என்றான்.

அவன் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட, ராகவன், பதில் எதுவும் சொல்லாமல் பைக்கில், சிம்மக்கல் பஸ் ஸ்டாப் நோக்கி விரைந்தான்.

அங்கு, 15 முதல் 20 வயது வரையிலான இளம்பெண்கள், தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சுக்காக காத்திருந்தனர்.

ராகவனுக்கு, வயது 40. ஆனால், தன்னை, 20 வயது இளைஞனை போல் கற்பனை செய்து கொள்வான். முன் பின் தெரியாதவர் அவனிடம் பேசினால், தான் கல்லுாரியில் படித்துக் கொண்டிருப்பதாக பெருமையாக சொல்லிக் கொள்வான்.

தனியார் வங்கியில் காசாளராக பணிபுரிவதால், வங்கிக்கு வரும் இளம் பெண்களிடம் சிரித்து பழகி, அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் மிகவும் திறமைசாலி. ஆனால், தான் குடியிருக்கும் பகுதியிலோ, அலுவலகத்திலோ தன்னை மிக நல்லவன் போல் காட்டிக் கொள்வதில், கை தேர்ந்தவன். அவனுடைய லீலைகள் எல்லாம், முன் பின் தெரியாத இடத்தில் மட்டுமே.

சிம்மக்கல் பஸ் ஸ்டாப் பழக்கடை ஓரமாக பைக்கை நிறுத்தி, அங்கு, அழகிய இளம் பெண்ணை உற்றுப் பார்த்தபடி நின்றான், ராகவன்.

கடந்த, நான்கு நாட்களாக மாலை, 5:00 மணியளவில் சிம்மக்கல் பஸ்சிலிருந்து இறங்கும் தன்னை, உற்றுப் பார்க்கும் இவன், இப்ப காலையிலும் வர ஆரம்பிச்சுட்டானே. யார் இவன், எதுக்காக நம்மைத் துரத்திக்கிட்டு வருகிறான் என, ரம்யாவின் மனதில் கலக்கம்.

தைரியத்தை வரவழைத்து, ராகவனை நெருங்கி, ''சார், யார் நீங்க? உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனால், ஞாபகம் வரவில்லை. எதுக்காக என்னை பின்தொடர்ந்து வர்றீங்க?'' என்றாள்.

''என் பெயர், கார்த்திக். அமெரிக்கன் காலேஜ்ல எம்.ஏ., லிட்ரேச்சர் படிக்கிறேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களோட நட்பா பழகலாம்ன்னு... உங்களை பற்றி தெரிஞ்சுக்க ஆசைபடுறேன்.''

'கையில புத்தகம் எதுவும் இல்லை. ஆனா, காலேஜ் படிக்கிறேன்னு சொல்றானே...' அவனை பார்த்து பதில் ஏதும் சொல்லாமல் சற்று தள்ளி நின்றாள், ரம்யா.

'இன்னைக்கு இது போதும். இந்த மாச இறுதிக்குள், இந்த பச்சைக்கிளி என் கைக்குள் வந்துடும். முதல்ல, பழைய புத்தக கடையில், எம்.ஏ., லிட்ரேச்சர் புத்தகம் வாங்கணும். நாம காலேஜ் மாணவன் தான்னு அவளை நம்ப வைக்கணும்.

'தினம் அவளை பின்தொடர்ந்து போனா, வீட்டுல சந்தேகம் வந்துடும். தம்பி கணேசன் பார்வையில் சந்தேகம் தெரியுது; பார்த்து பக்குவமா நடந்துக்கணும்...' என நினைத்துக் கொண்டான், ராகவன்.

தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வந்தாலும், ரம்யா கண்ணில் படாதவாறு மறைந்திருந்து, அவள் தன்னை தேடுகிறாளா என்று கவனிக்க தவறவில்லை, ராகவன்.

எங்கே மறுபடி வந்து விடுவானோ என்ற பயத்துடன், அக்கம் பக்கம் பார்க்க ஆரம்பித்தாள், ரம்யா.

'ஆகா, பட்சி சிக்கிடுச்சு. இனிமே, ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பஸ் ஸ்டாப்புக்கு போகணும். ஆனா, அவளை பார்க்காத மாதிரி, 'பாவ்லா' காட்டினா தான், கிளி நம் பக்கம் வந்து பேச ஆரம்பிக்கும். அப்புறம் பக்குவமா, 'ஹேண்டில்' பண்ணணும்...' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டான், ராகவன்.

புதன் கிழமை காலை, 7:00 மணிக்கு, புளு கலர் ஜீன்ஸ் பேன்ட், ஒய்ட் கலர் டி - ஷர்ட் அணிந்து, புத்தகங்களுடன் கிளம்பும் ராகவனை வியப்புடன் பார்த்தாள், வைதேகி.

''என்னங்க, இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க... கையில என்ன, புத்தகம்?'' என்றாள்.

''முதல் பாவம், உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது தான். இப்படி புறப்படும் போதே, தொண தொணன்னு கேள்வி கேட்கறியே... போன காரியம் உருப்பட்டாப்ல தான்,'' கோபத்தில் வார்த்தைகளை கொட்டி, சிம்மக்கல் பஸ் ஸ்டாப் நோக்கி விரைந்தான், ராகவன்.

'உங்க கணவர், ரொம்ப, 'ரொமாண்டிக்'கா போறார். போன வாரம், அவர், சிம்மக்கல் பஸ் ஸ்டாப்ல, யாரோ ஒரு சின்னப் பொண்ணுகிட்ட பேசிக்கிட்டிருந்தாராம். எங்க வீட்டுக்காரர் பார்த்திருக்கார். பார்த்து நடந்துக்கோ வைதேகி. ஆரம்பத்துல விட்டுட்டா, அப்புறம் பிடிப்பது கஷ்டம்...'

பக்கத்து வீட்டில் குடியிருக்கும், கல்யாணி, நேற்று சொன்னது முதல், வைதேகியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

'காலையில் அவளை பார்க்க தான், இப்படி அவசரமா போறாரா? இவருக்கு என்ன குறை வச்சேன். அவர் ஆசைப்பட்ட போதெல்லாம் மனம் கோணாம நடந்துக்கிட்டேனே. நான் அழகில்லையா, மத்தவங்க எல்லாம் என்னை பார்த்து, 'அழகா, மகாலட்சுமி போல இருக்க'ன்னு சொல்றாங்க. ஆனா, இவர் கண்ணுக்கு மட்டும் என் அழகு தெரியலையா?'

பஸ் ஸ்டாப்பில் ரம்யாவை பார்த்தும் பார்க்காதது போல் பாவனை செய்தான், ராகவன். அவள் பார்க்கும் போது, கையில் வைத்திருந்த புத்தகத்தை புரட்டி படிப்பது போல் நடித்தான்.

ஆண்களின், 'சைக்காலஜி' தெரியாதா பெண்களுக்கு.

'நான் பார்க்க வேண்டும் என்றே இப்படி, 'பாவ்லா' செய்கிறானோ. இதை வளர விடக்கூடாது. அவன் திரும்ப நம்மிடம் பேச வந்தால், அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்...' என முடிவெடுத்தாள், ரம்யா.

அவசரப்பட்டு பேசக் கூடாது. பிறகு ஏதாவது வில்லங்கம் வந்துவிடும் என, உள்ளுணர்வு சொல்ல, அவளைப் பார்ப்பதை தவிர்த்தான், ராகவன்.

ஞாயிறு காலை, மொபைல் போன் ஒலிக்க, எடுத்தான், ராகவன்.

''என்னது கீழே விழுந்துட்டாரா... ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கீங்களா,'' படபடத்தான், ராகவன்.

சமையல் அறையிலிருந்து வந்த வைதேகி, ''என்னங்க, என்ன ஆச்சு...'' என்றாள்.

''ஒண்ணும் பதட்டப்படாத. உன் அப்பா, பாத்ரூம்ல கால் சறுக்கி விழுந்துட்டாராம். வடமலையான் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்களாம். அத்தை போன்ல சொன்னாங்க,'' என்றான்.

''அய்யோ அப்பா...'' என்று கதறினாள், வைதேகி.

''நீ, சுதாவை கூட்டிட்டு முதல்ல ஆஸ்பிட்டலுக்கு போ. நான் பின்னாடியே வரேன்,'' என்றான், ராகவன்.

உடனே, சுதாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனை விரைந்தாள், வைதேகி.

மருத்துவமனை சென்று மாமனாரைப் பார்த்தான், ராகவன். காலில் பெரிய கட்டுடன் மாமனார் ராமநாதன் படுத்திருக்க, பக்கத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள், வைதேகி.

''டாக்டரிடம் கேட்டேன், ஒரு வாரத்தில், 'டிஸ்சார்ஜ்' பண்ணிடலாம்ன்னு சொன்னார். மாமாவுக்கு சரியாயிடும். ஒரு வாரத்துக்கு உன் அப்பா கூடவே இருந்து பார்த்துக்க. அத்தை வீட்டிலிருந்தே சுதா ஸ்கூலுக்கு போகட்டும்,'' என்று ராகவன் சொல்ல, சரி என தலையசைத்தாள், வைதேகி.

'அப்பாடா ஒரு வாரம் நிம்மதியா இருக்கலாம். காலை, 7:00 மணிக்கு புறப்பட்டால், யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த ஒரு வாரத்துக்குள் அந்த, 'பிகரை கரெக்ட்' பண்ணிடணும்...' என, குதுகலித்தான், ராகவன்.

இரண்டு நாள் பஸ் ஸ்டாப் பக்கமே வரவில்லை, ராகவன்.

'தேடட்டும், நன்றாக தேடட்டும். தானா பழுத்து என் மடியில் விழும். அதுவரை பொறுமையாக காத்திருப்போம்...' என, மனதுக்குள் நினைத்தான், ராகவன்.

காலையில் வண்டியூர் கண்மாயில், 'ஜாகிங்' செய்து கொண்டிருந்தபோது, சாலையோர பெஞ்சில் தன்னுடன் வங்கியில் வேலை செய்யும், பியூன் மாயாண்டியை பார்த்தான், ராகவன்.

''என்ன மாயாண்டி, இந்த பக்கம்...'' என்றான், ராகவன்.

''என்னத்த சொல்ல, மனசே சரியில்லை, சார். என் பொண்ணு காலேஜ் போறச்ச, ஒரு காவாளிப் பய, அவளை, பின்தொடர்ந்து வர்றானாம். என் பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம். நாளைக்கு, நீங்க என் கூட வந்தீங்கன்னா, அவனை உண்டு இல்லேன்னு ஆக்கிடலாம்,'' என்றான், மாயாண்டி.

''அதுக்கென்ன மாயாண்டி, காலையில் உன் கூட வரேன். அவனை, நாலு தட்டு தட்டி, போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடலாம். நீ கவலைப்படாம வீட்டுக்கு போ,'' என்று சொல்லி, சிம்மக்கல் நோக்கி விரைந்தான், ராகவன்.

'சே, இந்த மாயாண்டிகிட்ட பேசப் போய், நம் பச்சைக்கிளி ரம்யாவை, 'மிஸ்' பண்ணிட்டோமே. சரி, நாளைக்கு எப்படியாவது அவளிடம் பேசிடணும். முதல்ல மாயாண்டி விஷயத்தை கவனிப்போம். பிறகு, ரம்யாவை பார்த்துக்கலாம். கிணத்து தண்ணீய கடலா கொண்டு போகப் போகுது...'

மறுநாள்-

''என்ன மாயாண்டி, அந்த பய வந்தானா?'' என்றான், ராகவன்.

''சார், 7:00 மணிக்கு, சிம்மக்கல் பஸ் ஸ்டாப்புக்கு அந்த பய வருவான்னு, என் பொண்ணு சொல்லிச்சு. வாங்க, நாம இப்ப போனா சரியா இருக்கும்,'' என்று மாயாண்டி சொல்ல, ராகவனுக்கு, 'திக் திக்' என, அடித்துக் கொண்டது.

'ஆனா, இந்த மாயாண்டி பொண்ணு, ரம்யாவா இருக்க முடியாது. அவளோட அழகு எங்கே... இவனோட கறுப்பு நிறம் எங்கே. இவன் பொண்ணு வேறு யாராவதா இருக்கும். ரம்யா முன் நம்ம, 'ஹீரோ'யிசத்தை காட்டிட வேண்டியது தான். அவனை, நாம அடிக்கிற அடியில, ரம்யாவே ஆடிப் போயிடணும்...' என, நினைத்துக் கொண்டான், ராகவன்.

யாரை பற்றி அப்பாவிடம் புகார் சொன்னோமோ அவனே அப்பாவுடன் வருவதை பார்த்த, ரம்யா, ஒரு கணம் திகைத்து போனாள்.

'வேலியில போற ஓணான், தானே வலையில் வந்து மாட்டிக்கிடுச்சு. டேய் மாப்ளே இன்னைக்கு உனக்கு சங்குதான்டீ...' என்று நினைத்தாள், ரம்யாவின் தோழி நர்மதா.

''ரம்யா, இவர், நான் வேலை செய்யிற வங்கியில, கேஷியரா இருக்கார்; பேர், ராகவன். ரொம்ப நல்ல மனிதர். உன் பிரச்னையை சொன்னதும், 'நானும் வரேன், அவனை, நாலு தட்டு தட்டி போலீஸ்ல ஒப்படைச்சுடலாம்'ன்னு, என் கூட வந்திருக்கார். அவன் யாருன்னு காட்டு, உண்டு இல்லேன்னு பண்ணிடுறேன்,'' என்றார், மாயாண்டி.

ராகவனுக்கு கை, கால் நடுங்க ஆரம்பித்தது.

'ரம்யா, என்னை காட்டிக் கொடுத்து விட்டால், நம் மானம், மரியாதையெல்லாம் கப்பல் ஏறி விடும். வங்கியில் இதுவரை எடுத்த நல்ல பெயர் போய், மாயாண்டியால், என்னோட கீழ்த்தரமான செயல் வெளிச்சத்துக்கு வந்துடும். கடவுளே முருகா... இந்த சிக்கலிலிருந்து எப்படியாவது என்னை காப்பாத்து...' என்று, மனதார வேண்டிக் கொண்டான், ராகவன்.

''அப்பா, அவன் இப்பத்தான் அந்த பக்கம் போனான். உங்க ரெண்டு பேரையும் பார்த்து பயந்துட்டான் போல. இனிமே, அவன் என்னை தொந்தரவு செய்ய மாட்டான்னு நினைக்கிறேன். இனி, எந்த பொண்ணுங்க பின்னாடியும் போக மாட்டான். நான் சொல்றது சரிதானே, அங்கிள்,'' என, ராகவனிடம் சொன்னாள், ரம்யா.

பலி கொடுக்க கட்டிப் போட்டிருக்கும் ஆட்டைப் போல, பேந்த பேந்த விழித்தான், ராகவன்.

''ரொம்ப தேங்க்ஸ், அங்கிள். நீங்க அப்பாவோட வந்ததுக்கு,'' என்று, கேலியாக ரம்யா சொல்ல, பேருக்கு சிரித்து வைத்தான், ராகவன்.

அவர்கள் இருவரும் சென்றதும், ''ஏன்டீ, அவனை உங்க அப்பாகிட்ட காட்டிக் கொடுக்கல,'' என்று கேட்டாள், தோழி நர்மதா.

'சே, எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்ட பார்த்தோம். நல்லவேளை, கடவுள் காப்பாற்றி விட்டார்...' என, நினைத்துக் கொண்டான், ராகவன்.

வீட்டுக்கு பைக்கில் திரும்பிய போது, தெரு முனையில் ஒரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தும், பார்க்காமல் குனிந்தபடி சென்றான், ராகவன்.

''என்னங்க...'' என்ற அழைப்பைக் கேட்டு, வண்டியை நிறுத்தினான், ராகவன்.

'அட, நம் வைதேகி. என் மனைவியா இவ்வளவு அழகா இருக்கா. இவளை விட்டுட்டு இப்படி கண்டபடி அலைஞ்சேனே....'

''என்னம்மா, இங்க நிற்கிற. மாமாவுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே,'' பதட்டத்துடன் கேட்டான், ராகவன்.

இதுவரை, வாடி போடி என்றே, அழைப்பது வழக்கம். இப்போது, என்னம்மா என்றதும், வைதேகிக்கு மிகுந்த ஆச்சரியம்.

''நம் சுதா, வயசுக்கு வந்துட்டா. என் போன், 'ரிப்பேர்' ஆயிடுச்சு. யாரோட நம்பரும் நினைவுக்கு வரல. உங்க தம்பி கணேசனும், ஏதோ வேலை விஷயமாக, சென்னைக்கு போனதால, நீங்க, 'ஜாகிங்' முடிச்சு இந்த பக்கம் தான் வருவீங்கன்னு உங்களுக்காக காத்திருக்கேன்,'' என்றாள், வைதேகி.

வைதேகியுடன் வீட்டுக்கு விரைந்த, ராகவன், வராண்டாவில் ஓரமாக சுதா, தாவணியுடன் அமர்ந்திருப்பதை பார்த்ததும், அவனது கண்கள் கலங்கியது. அது அழுகையால் அல்ல; ஆனந்தத்தால்.

'நம் மகள் சுதா மாதிரி தானே ரம்யாவும். நாம ரம்யாகிட்ட நடந்த மாதிரி யாராச்சும் சுதாவுக்கு தொந்தரவு செஞ்சா, மாயாண்டி மாதிரி நாமளும் வருத்தப்பட வேண்டியிருக்கும்...' என, தன் கீழ் தரமான செயலை எண்ணி, வேதனையுடன் தலைகுனிந்தான், ராகவன்.

சடங்கு விசேஷமெல்லாம் முடிந்து, பள்ளி செல்ல தயாரானாள், சுதா.

கண்ணாடி முன் தலை சீவிய ராகவன், ஆங்காங்கு நரை முடி தெரிவதை பார்த்து சிரித்தான்.

''சுதா, இருடா... அப்பா உன்னை ஸ்கூல்ல கொண்டு விடுறேன்...'' என்ற ராகவனை, வியப்புடன் பார்த்தாள், வைதேகி.

''என்ன அப்படி பார்க்கிற, இனி, எப்பவும் நீ ஆசைப்பட்டபடி தான் நடந்துக்குவேன். பை பை வைதேகி. சாயந்தரம் ரெடியா இரு, சினிமாவுக்கு டிக்கெட், 'புக்' செய்திருக்கேன். சுதாவோட நாம படத்துக்கு போறோம்.''

'முதல்ல, வைதேகிக்கு நல்ல, 'ஸ்மார்ட் போன்' வாங்கி தரணும். இனிமே இவங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா பார்த்துக்கிடணும்...' மனதில்

நினைத்தவாறே, பைக்கை ஓட்டத் துவங்கினான், ராகவன்.

இனி, அவனும் ஒரு நல்ல அப்பா தான்.

- வேமுகி ஆதவன்






      Dinamalar
      Follow us