
இப்படியும் செய்யலாமே!
மிகுந்த வசதி படைத்தவர், நண்பர். அதேசமயம், அனைவரையும் சமமாக பாவிக்கும், சமத்துவத்தை நேசிக்கும், முற்போக்கு சிந்தனையும் கொண்டவர். அவரின் மகனுக்கு, அண்மையில் திருமணம் நடந்தது. அது, வரதட்சணை வாங்காமல் நடந்த, காதல் திருமணம்.
விசாலமான பெரிய மண்டபத்தில், வெகு விமரிசையாக நடந்த அத்திருமணத்தில், பட்டாசுகள் வெடிப்பதற்கும், 'பாஸ்ட் புட்' உணவு வகைகளுக்கும், தடை விதித்திருந்தார், நண்பர். மேலும், இசை நிகழ்ச்சி, ஆடல் பாடல் போன்ற பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்து, சிந்தனைக்கு விருந்தளிக்கும் படி, புதுமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
மண்டபத்தினுள் தனி மேடை அமைத்து, தெருக்கூத்து கலைஞர்கள் மூலமாக, வரதட்சணையின் தீங்கு, வன்கொடுமையின் பின்விளைவு, போதையின் தீமைகள், லஞ்சம், ஊழல் மற்றும் ஜாதி வெறியின் பாதிப்பு போன்ற, பல்வேறு சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்ட நாடகங்களை நடத்தி, கூத்துக் கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்து உதவினார்.
இது, திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்ததோடு, மனதில் நற்சிந்தனையையும் விதைத்தது. நண்பரின் நல்ல செயலை, அனைவருமே பாராட்டினோம்!
— பொ. தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.
தேங்காய் உடைக்க...
சமீபத்தில், ஆன்மிக பயணமாக, 10 நாட்கள், குடும்பத்துடன் பல்வேறு தமிழக கோவில்களுக்குச் சென்றோம். ஒரு கோவிலினுள் சென்றபோது, அங்கு வாசலிலிருந்த கடையில், பூஜைத்தட்டு வாங்கினோம். அதை எங்களிடம் தரும்போதே, 'தேங்காயை பக்தர்களே உடைத்து, பூஜைத் தட்டில் வைத்து அர்ச்சகரிடம் தர வேண்டும்...' என்று கூறினார், கடைக்காரர்.
அதேபோல், கோவிலுக்குள் சென்று, தேங்காயை உடைக்க முயலும்போது, அங்கிருந்தோர், 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் காட்டினர். 'அவரிடம், ஐந்து ரூபாய் கொடுத்தால், சரி பாதியாக உடைத்துத் தருவார்...' என்றனர். சொன்னது போலவே, அவரிடமே தந்து உடைத்துத் தரச் செய்தோம். அவரும், சரி பாதியாக உடைத்துத் தந்தார்.
வழிபாடு முடித்து, கோவில் வளாகத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும்போது, தேங்காய் உடைத்துத் தருபவரிடம், அதுபற்றி வினவினேன். 'குடும்பத்தார் ஆதரவில்லாததால், இந்தக் கோவில் வாசலில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து, 'பக்தர்கள், முறையில்லாமல் தேங்காய் உடைச்சு, கோவிலை அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், ஒழுங்காக உடைக்கத் தெரியாமல், தேங்காயை சிதைச்சு, மனம் சங்கடப்படுகின்றனர். தேங்காய்க்கு, ஐந்து ரூபாய் வாங்கி, உடைச்சுக் கொடுக்கிற வேலையை பாருங்க...' என்றனர், கோவில் நிர்வாகத்தினர்.
'பிச்சையெடுக்கிறதை விட, உழைக்கிறது தான் கவுரவம்ன்னு, இந்த வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். இதில் தினமும் சராசரியாக, 200 ரூபாய் கிடைச்சுடும். விசேஷ நாட்களில், 500 ரூபாய் வரை சம்பாதிச்சிடுவேன்...' என்றார்.
பிச்சையெடுக்க வந்தவரை, உழைப்பாளியாக மாற்றி உதவிய, கோவில் நிர்வாகத்தினருக்கு, பாராட்டுகளைத் தெரிவித்து வந்தோம்.
— ஆ.வீரப்பன், திருச்சி.
பள்ளி நிர்வாகத்தின் முடிவு!
பள்ளியில் கொடுத்ததாக கூறி, சிறு நோட்டீஸ் ஒன்றை காட்டினான், என் மகன். அதில், 'மாணவர்கள், தாங்கள் பயன்படுத்திய பழைய நோட்டு, புத்தகங்களை, எடைக்குப் போட்டு, அதன் மதிப்புக்கு ஏற்ப, புதிய நோட்டுகளும், பேனா, பென்சில் போன்ற பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்...' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
மறுநாள், பள்ளியில் அது பற்றி விசாரித்தேன். நிறைய பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, இரண்டு நாட்களாக பழைய புத்தகங்களை சேகரிக்கும், சில மாற்றுத் திறனாளிகள் குழுவை பற்றி கூறினர்.
'நிறைய வீடுகளில், மாணவர்களின் பழைய புத்தகங்கள், பயன்படுத்திய நோட்டுகள் போன்றவற்றை எடைக்குப் போட்டு காசு வாங்கி கொள்வர். ஆனால், இவர்கள், மாணவர்களின் படிப்புக்கு தேவையான, 'ஸ்டேஷனரி' பொருட்களையே வழங்குகின்றனர்.
'அதிலும், அளவு குறைவாக ஒன்றிரண்டு புத்தகமோ, நோட்டோ கொண்டு வந்தாலும், அதற்கும் பேனாவோ, பென்சிலோ வழங்குகின்றனர். இரண்டு நாட்கள் பள்ளியில், மாலையில், வகுப்புகள் முடிந்ததும், இதைச் செய்கின்றனர்.
'பள்ளியில், மொத்தமாய் மாணவர்களிடம் பழைய புத்தகங்கள் எடுத்து, அதை விற்பனை செய்வதில் அவர்களுக்கு சிறிய லாபம் கிடைக்கும்.
'அதே நேரம், பழைய புத்தகங்கள், நோட்டுகளுக்குப் பதில், புதிய நோட்டு, பேனா, பென்சில் பெறுவதில், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி. மாற்றுத் திறனாளிகளின் உழைப்பை ஊக்கப்படுத்த, இந்த விஷயத்துக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியது...' என்றார், அந்த பள்ளி அலுவலர்.
மாற்றுத் திறனாளிகளின் உழைப்பையும், பள்ளி நிர்வாகத்தின் செயலையும், மனதாரப் பாராட்டி வந்தேன்.
— மகா, திருப்பூர்.