sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (10)

/

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (10)

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (10)

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (10)


PUBLISHED ON : ஜூன் 02, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரஸ்வதி சபதம் படத்தில், சக்தியின் அருளால் கோழையாக இருந்து, வீரம் பெற்ற மல்லனாக மாறும் வேடத்தில் நடித்தார், ஜெமினி கணேசன். ஆசாத் என்ற பெயர் கொண்ட இன்னொரு மல்லனாக நடிப்பவரை, அலேக்காக துாக்கி எறிய வேண்டிய காட்சி. அவர் சுமார், 136 கிலோ எடையுள்ளவர்.

ஜெமினியிடம், 'அந்த மல்லனை கொஞ்சம் கொஞ்சமாக துாக்குகிற மாதிரி எடுத்துக் கொள்ளலாம். உன் பாதுகாப்பு தான் முக்கியம். உனக்கு ஒண்ணுன்னா, சாவித்ரிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது மாப்ளே...' என்றாராம், ஏ.பி.என்.,

ஆனால், அந்தக் காட்சியில், மல்லனை ஒரே துாக்காக துாக்கி எறிந்து விட்டாராம், ஜெமினி.

அப்போது, 'மாப்ள, நீ காதல் மன்னன் மட்டுமில்ல; உண்மையிலேயே வீரமல்லனும் தான்...' என்று கூறியுள்ளார், ஏ.பி.நாகராஜன்.

கந்தன் கருணை படத்தை தானே தயாரிப்பதாக இருந்தார், கண்ணதாசன். அதற்காக, 'கந்த லீலா' என்ற கதையை தயார் செய்தார். ஒரு பாடலும் எழுதி பதிவாகி விட்டது. பின்னர், அந்த கதை எழுதிய கோப்பை, தன் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனிடம் கொடுத்து, 'படத்தை நீங்களே எடுங்கள்...' என்று கூறி சென்று விட்டார், கண்ணதாசன்.

அதன்பின், அக்கதையை, புராணக்கதைகளை சிறப்பாக இயக்கும், ஏ.பி.நாகராஜனிடம் கொடுத்தார், ஏ.எல்.எஸ்., கதையை மேலும் செழுமைப்படுத்தி, கந்தன் கருணை என்று பெயரிட்டு, மிகச் சிறப்பான படமாக எடுக்க ஒப்புக் கொண்டார், நாகராஜன்.

ஏ.பி.என்., தான், கந்தன் கருணை படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார், ஏ.எல்.சீனிவாசன். இதற்கு, அவருக்கும், ஏ.பி.நாகராஜனுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த நட்பே காரணம்.

அக்கதையை படமாக்க, ஏ.பி.நாகராஜனிடம் பலமுறை நினைவுபடுத்தினார், ஏ.எல்.எஸ்., இப்படத்தை எடுக்க நாகராஜனுக்கும் ஆசை தான். ஆனால், நேரமின்மை காரணமாக அதில் ஈடுபட முடியாமல் காலதாமதம் ஆனது.

நாகராஜனின் பெரும்பாலான புராணப் படங்களின் படப்பிடிப்புகள், ஏ.எல்.எஸ்.,சின் சாரதா படப்பிடிப்பு தளத்திலேயே நடைபெறும்.

அந்த உரிமையின் காரணமாக, ஒருநாள் படத்தின் பெயர் கொடுக்காமல், 'சிவாஜி கணேசன் நடிக்கும், ஏ.பி.நாகராஜன் இயக்கும், எமது அடுத்த படம் தயாராகிறது...' என்று, பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து விட்டார், ஏ.எல்.எஸ்.,

இந்த விளம்பரத்தைப் பார்த்த ஏ.பி.என்.,னின் மேலாளர் வைத்தியநாதன், அதைக் காட்டி, 'என்ன அய்யா, எங்களுக்கு கூடத் தெரியாமல், ஏ.எல்.எஸ்.,க்கு வாக்குறுதி கொடுத்துட்டீங்களா...' என்றார்.

விளம்பரத்தைப் பார்த்தார், ஏ.பி.என்., அதே நேரம், சிவாஜியின் திரைப்பட நிறுவனத்திலிருந்து ஏ.பி.என்.,னுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

'நீங்க, ஏ.எல்.எஸ்.,க்கு சிவாஜி நடிப்பாரென்று வாக்குறுதி ஏதும் கொடுத்தீங்களா விளம்பரம் வந்திருக்கிறதே...' என்று கேட்டனர்.

'ஏ.எல்.எஸ்.,க்கு படம் இயக்குகிறேன்னு எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லை. அப்படியிருக்கும் போது, சிவாஜி நடிப்பார் என்று எப்படி சொல்வேன்...' என்றார், ஏ.பி.என்.,

குழப்பத்துக்குக்கு மேல் குழப்பம், கேள்விக்கு மேல் கேள்வி வரவே, அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, ஏ.எல்.எஸ்.,சை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

'தினசரியில் விளம்பரம் கொடுத்திருக்கீங்களே... என்ன விஷயம்...' என்றார், ஏ.பி.என்.,

'நானும், உங்களிடம் பலமுறை, என் தம்பி கண்ணதாசன் கொடுத்த, 'கந்த லீலா' கதையை, நீங்க இயக்கணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். நீங்க ஒண்ணும் பதில் சொல்ற மாதிரி தெரியல. அதனால தான், அதிர்ச்சி வைத்தியமா இருக்கட்டுமேன்னு விளம்பரம் கொடுத்தேன்...' என்றார், ஏ.எல்.எஸ்.,

அதன் பின், எல்லாம் நல்லபடியாக முடிந்தது. கண்ணதாசனின், 'கந்த லீலா' கதை, கந்தன் கருணை என்ற பெயரில் திரைப்படமாகி, வெற்றி பெற்றது.

இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது, ஒருநாள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க விழாவுக்குச் சென்றிருந்தார், ஏ.பி.என்.,

விழாவில், கடவுள் வணக்க பாடலாக, 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்...' என்ற பாடலை, சூலமங்கலம் சகோதரிகள் பாடினர். குன்னக்குடி வைத்யநாதன் இசை அமைத்திருந்தார்.

அப்பாடலை தான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் சேர்த்துக் கொள்ள நினைத்தார், ஏ.பி.என்., கந்தன் கருணை படத்திற்கு, இசை, கே.வி.மகாதேவன்.

பொதுவாக, ஒரு இசை அமைப்பாளர், தான் இசை அமைத்த படத்தில், பிறர் இசை அமைத்த பாடலை சேர்த்துக் கொள்ள மாட்டார். ஆனால், அப்பாடலை, கந்தன் கருணை படத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதித்தார், மகாதேவன். அப்பாடல் தான், குன்னக்குடி வைத்யநாதன் என்ற இசை அமைப்பாளரை, சினிமா உலகுக்கு அடையாளம் காட்டியது.

கந்தன் கருணை படத்தில், புலவர் நக்கீரர், ஒரு பாடல் பாடுவதாக காட்சி.

'அறுபடை வீடு கொண்ட திருமுருகா' என்ற பாடலை, சீர்காழி கோவிந்தராஜன் பாட வந்தார். அப்போது, இயக்குனர் நாகராஜன், சீர்காழி கோவிந்தராஜனை பார்த்து, 'நீங்களே, இப்படத்தில் நக்கீரராக நடித்து, பாடலையும் பாடி விடுங்கள்...' என்றார்.

'நீங்கள் இருக்கும் போது நான் நக்கீரராக நடிக்கவா... திருவிளையாடல் படத்தில், நீங்கள் வசனம் பேசியது போல என்னால் பேச முடியாது...' என்றார், கோவிந்தராஜன்.

'அவர், பேசும் நக்கீரர். இப்படத்தில் வரும் நக்கீரர், பாடும் நக்கீரர். என்னால் பாட முடியாது. உங்களால் தான் பாட முடியும். அதனால், இப்படத்தில் நீங்கள் தான் நக்கீரர்...' என்றார், ஏ.பி.என்.,

அதன்படி, சீர்காழி கோவிந்தராஜனே பாடலையும் பாடி, நக்கீரராகவும் நடித்தார்.

கந்தன் கருணை படத்தில், முருகனாக நடிக்க தேர்ந்து எடுப்பதற்கு, கொண்டைய ராஜு என்பவர் வரைந்த, காலண்டர் படமொன்றுதான் ஆதாரமாக இருந்தது. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படம் தான் முன் மாதிரி.

அதன்படி, முருகனாக நடிப்பவருக்கு, 21 வயது இருக்கணும், கன்னம் ஒட்டி இருக்கக் கூடாது, 'புசு புசு'ன்னு இருக்கணும். மூக்கு துவாரம் பெரிதாக இருக்கக் கூடாது. கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கக் கூடாது. கண்கள் தீட்சண்யமாக இருக்கணும்.

கழுத்தில் சுருக்கம் இருக்கக் கூடாது, ஆணாக இருந்தாலும், பெண்மைத் தன்மை இருக்கணும், தமிழில் லகரம், ழகரம் சுத்தமா பேச தெரியணும். இவ்வளவு தகுதி உள்ள ஒருவரை, வலை போட்டு தேடினார்.

இறுதியில் முருகனாக நடிக்க தேர்ந்தெடுத்த நபர் யார் தெரியுமா?



—தொடரும்

நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.

- கார்த்திகேயன்







      Dinamalar
      Follow us