
பா - கே
மாலை நேரம்...
நண்பர்கள் அனைவரும், 'பீச்'சில் குழுமியிருந்தோம். இதமான காற்று வீசி, பகல் நேர வெப்பத்தை விரட்டிக் கொண்டிருந்தது.
'சென்னை வாழ் மக்களுக்கு, 'பீச்' ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்...' என்றேன்.
'சரியா சொன்ன மணி... கோடை காலம் முடியும் வரை, தினமும் இங்கு வரலாமே...' என்றார், அன்வர்பாய்.
'தினமும் வர முடியாது. அடிக்கடி வர முயற்சிப்போம்...' என்று கூறி, மணலில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.
'மணி... சற்று நேரம் காலார நடந்துட்டு வரலாம்...' என்று, திண்ணை நாராயணன் கூற, அவருடன் மணலில் நடக்க ஆரம்பித்தேன்.
கடல் நீரில் காலை நனைத்தபடி சற்று நேரம் நின்றோம். பின், அங்கிருந்த படகின் ஒரு முனையில் அமர்ந்து, ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை ரசிக்க ஆரம்பித்தோம். படகின் மறு முனையில் பெரியவர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அமர்ந்திருந்தனர். பெரியவர், அந்த இளைஞனுக்கு, 'அட்வைஸ்' செய்து கொண்டிருந்தது காதில் விழுந்தது.
'வர வர என் பேர்லயே, எனக்கு நம்பிக்கை இல்லை சார்...' என்றார், இளைஞர்.
'உனக்கு, தன்னம்பிக்கை குறைய ஆரம்பிச்சுருக்குன்னு அர்த்தம். அது ரொம்ப ஆபத்து. அதை அப்படியே விட்டுடக் கூடாது. உடனடியாக பரிகாரம் தேடணும்.
'இன்னைக்கு பலருக்கு மனம் சுலபமா ஓய்ஞ்சு போயிடுது. எதைப் பார்த்தாலும், அலுப்பா இருக்கு, எதுலயும் கலந்துக்கிறதில்ல; உற்சாகம் இல்லை. மனச்சோர்வு வந்துடுது...' என்றார், பெரியவர்.
'மனச்சோர்வு தீர்றதுக்கு மருந்து என்ன?'
'மருந்து, கடையில் இல்லை; நம்மகிட்டயே தான் இருக்கு.
'நல்ல துணிமணிகள், தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுவதாக, ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதனால, முடிஞ்ச அளவுக்கு நல்லா, 'டிரஸ்' பண்ணணும். அப்புறம் நிறைய விஷயங்களை தெரிஞ்சு வச்சுக்கணும்.
'அது உபயோகப்படுதா, இல்லையாங்கிறதைப் பற்றி கவலை இல்லை. இது, தன்னம்பிக்கையை வளர்க்கும்ன்னு ஆராய்ச்சிகள் மூலமா நிரூபணம் ஆகியிருக்கு.
'ஒவ்வொரு நாளும், புதுசா ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும்ன்னு சபதம் எடுத்துக்க. உன்னை யாராவது அலட்சியமா நினைக்கிற மாதிரி தெரிந்தால், அவங்க பக்கம் தலை வச்சுக் கூட படுக்க வேணாம்.
'உன்னை யாராவது மட்டம் தட்டுறாங்களா, உன் மனசு சோர்ந்து போற மாதிரி பேசுறாங்களா? அவங்களையெல்லாம் உதறித் தள்ளு.
'இந்த உலகத்துல, எல்லாரும் ஒரே மாதிரி தான் பொறந்திருக்கோம். அதனால, அலட்சியப் படுத்தறவங்களை, நீயும் அலட்சியப் படுத்திப் பாரு, அப்புறம் நீதான் ராஜா. உனக்கே பிடிக்காதது ஏதாவது உன்கிட்ட இருப்பதாக தெரியுதா, உடனே, அதை ஒதுக்கித் தள்ளு.
'உடல் எடையை குறைக்கணுமா, உடற்பயிற்சி ஆரம்பிக்கணுமா, குடிப்பழக்கத்தை நிறுத்தணுமா? எதுவா இருந்தாலும் உடனே நடவடிக்கை எடு; ஒத்திப் போட வேணாம். உன்னை வேதனைப்படுத்தற விஷயம் எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி பேசறதை உடனே நிறுத்து.
'உன்கிட்ட நிவர்த்தி செய்ய முடியாத குறைகள் சிலது இருக்கலாம். அப்படிப்பட்ட குறையோட வாழ்க்கையில முன்னுக்கு வந்தவங்களைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டு, அவங்க செஞ்ச சாதனைகளை நினைச்சுப் பாரு. அது, உன்னை உற்சாகப்படுத்தும்.
'உனக்குன்னு ஒரு தனித்தன்மை ஏதாவது இருக்கும். அது, எதுன்னு புரிஞ்சுக்கிட்டு முழுசா மனசை அதுல செலுத்து. உனக்குள்ள ஏதாவது ஒரு சிறப்பு அம்சம் இருக்கும். அழகான கண்ணு, கருப்பான கூந்தல், நீளமான விரல், லேசான புன்னகை, நுட்பமான புத்திசாலித்தனம்...
'இப்படி ஏதாவது இருக்கும். அதை முதலில் கண்டுபிடிக்கணும். அதை சிறப்பா வெளிப்படுத்தணும். அது பற்றிய உணர்வோட இருக்கணும்.
'எப்பவாவது, மனம் சோர்ந்து போனா, உன் தனித்தன்மையில மனசை செலுத்தினால் போதும், சரியா போயிடும். ரொம்ப கட்டுப்பாடா இருக்கிறவங்க, ரொம்ப ஆர்வமா இருக்கிறவங்கலாம் உள்ளூர குமைஞ்சுக்கிட்டு தான் இருப்பாங்க.
'உன்னை சுற்றி இருக்கிறவங்கள்லாம் ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவங்கன்னு நினைச்சுடாத. அவங்களுக்கும் உள்ளுக்குள்ள உதறல் தான்; வெளியில நடிச்சுக்கிட்டு இருப்பாங்க. அச்சம் தேவை தான். ஆனா, அதை வெளியே காட்டிக்கக் கூடாது.
'ரொம்ப அடக்கமா இருக்கறேன்னு சொல்லிட்டு, வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்காதே. வெளியில வா. தினமும் ஒரு விஷயத்தை நிறைவா செய். சாதாரண, அற்ப விஷயமா இருந்தா கூட, எடுத்த காரியத்தை சிறப்பா முடிக்கணும். அது, ஒரு மன நிறைவை கொடுக்கும்.
'இந்த வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடிச்சுப் பார்த்துட்டு, அதுல பலன் கிடைச்சுதுன்னா, என்கிட்ட வந்து சொல்லு...'
- இப்படி கூறி முடித்தார், அந்த பெரியவர்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்க எவ்வளவு சுலபமா வழி சொல்லிட்டார் என்ற பிரமிப்பு ஏற்பட்டது எனக்கு.
என்ன வாசகர்களே... அந்த பெரியவர் சொன்னதில், உங்களுக்கும் உடன்பாடு தானே!
இருள் கவிய துவங்கியது. லென்ஸ் மாமா எங்களை தேடி வர, அங்கிருந்து கிளம்பினோம்.
ப
ஒருசமயம், பாரீசில் உள்ள, பெரிய ஆடம்பரமான ஹோட்டலில் தங்கினார், பிரபல அறிவியல் மேதை, ஐன்ஸ்டின்.
ஊரைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில், ஹோட்டலை விட்டு இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பித்தார். வேடிக்கை பார்த்தபடி, ரொம்ப துாரம் போய் விட்டார். திரும்பி வரும் வழி தெரியவில்லை; அதுமட்டுமில்ல, அவர் தங்கியிருந்த ஹோட்டல் எது என்பதையும் மறந்துவிட்டார்.
வழியில் சென்றவர்களிடம் எல்லாம் நிறுத்தி, 'சார், நான் தங்கியிருந்த ஹோட்டல் எதுன்னு உங்களுக்கு தெரியுமா?' என்று, கேட்டார்.
எல்லாரும், ஒரு மாதிரியாக இவரை பார்த்து, விலகி போயினர்.
இவரை பார்த்து, 'அது சரி... உங்க பேரு என்னன்னாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?' என்று, விளையாட்டாக கேட்டார், கிண்டல் ஆசாமி.
உடனே இவர் சீரியஸாக, 'ஓ... நன்றாக ஞாபகம் இருக்கு. என் பெயர் ஐன்ஸ்டின்...' என்றார்.
இவர் பெயர், உலகம் முழுவதும் பரவியிருந்த நேரம் அது. பெயரை சொன்னவுடனே, ஹோட்டலில் விட்டுட்டு வந்தாராம், அந்த ஆசாமி.
மேதைகளில் பலர் இப்படித் தான் ஞாபகமறதிக்காரர்களாக இருந்திருக்கின்றனர்.
-எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.