sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (27)

/

குற்றம் குற்றமே! (27)

குற்றம் குற்றமே! (27)

குற்றம் குற்றமே! (27)


PUBLISHED ON : ஜூன் 02, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனர், கிருஷ்ணராஜின் மகனாக, 'டூ-வீலர் மெக்கானிக்' சந்தோஷை, நடிக்க சொன்னான், தாமோதர் மகன் விவேக். அவனும் அவ்வாறே நடித்து, குடும்பத்துடன் பங்களாவுக்கு வந்தான். அச்சமயம், ஐ.பி.எஸ்., சந்திரமோகனுடன், இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்து, கிருஷ்ணராஜை கைது செய்தனர்.

விவேக்கையும் கைது செய்ய உள்ளதாக கூற, 'அவன் இருக்கும் இடத்தை சொன்னால் என்னை விட்டு விடுவீர்களா...' என்றான், சந்தோஷ்.

'விவேக்கை எப்படி உனக்கு தெரியும்?' என, சந்திரமோகன் கேட்க, இடையில் புகுந்த சந்தோஷின் மனைவி, துப்புரவு தொழிலாளி மகன் தான், சந்தோஷ் என்ற உண்மையை போட்டு உடைத்தாள்.

இதை கேட்டு, தனா, குமார் மற்றும் கார்த்திகா ஆகிய மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சி விலகாதபடி தனஞ்ஜெயனைத்தான் பார்த்தாள், கார்த்திகா. அவன் ஸ்தம்பித்து விட்டிருந்தான். குமாரும் ஸ்தம்பிப்பில் தான் இருந்தான்.

''என்ன தனா இது... எங்க கோட்டை விட்டீங்க?'' என்று, அதிர்விலிருந்து மெல்ல விடுபட்டபடி கேட்டாள்.

ஆனால், சந்தோஷிடம் ஒரு ஆவேசம்.

''இல்ல, நான் தான் இவரோட மகன். இவங்க கைது பண்ணினாலும் பண்ணுவோம்ன்னு சொல்லவும், என் மனைவி பயந்துட்டா. அவள் சொல்றதை நம்பாதீங்க...'' என்று, சந்தோஷ் சமாளிக்கப் பார்த்தான். ஆனால், சுமதிக்குள் அது பயத்தையும், கோபத்தையும் தான் உண்டாக்கியது.

''போதும், நிறுத்துங்க. முறையா ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறந்து, அவங்களால வளர்ந்து ஆளாகிட்டு, இப்ப பணத்துக்காக இப்படியா மாறுவீங்க?

''இந்த பங்களா, கார், இவங்களோட ஆடம்பரமான வாழ்க்கைன்னு எல்லாமே பாவப் பணம். இந்த பாவப் பணத்துக்காக அப்பாவையே மாத்திக்குவீங்களா? இதை இறந்துட்ட உங்க உண்மையான அப்பாவோட ஆத்மா மன்னிக்குமா?'' என்று, பாறை வெடி போல, இடையில் புகுந்து வெடித்தாள், சுமதி. அதற்கு மேல் சந்தோஷாலும் ஏதும் பேச முடியவில்லை.

கிருஷ்ணராஜை கைது செய்ய வந்த சந்திரமோகனோ, சந்தோஷ் நடிப்பதை அந்த வினாடியே புரிந்து கொண்டவராய், ''மிஸ்டர்... நீங்க, இந்த கிருஷ்ணராஜை விட, பெரிய கிரிமினலா இருப்பீங்க போல இருக்கே?

''உங்களை இப்படி நடிக்க சொன்னது, அந்த விவேக்னு எங்களுக்கு இப்ப தெளிவா தெரிஞ்சுடுச்சு. உங்களுக்கும், விவேக்குக்கும் தொடர்பு இருக்கிறதும், உறுதி ஆயிடுச்சு. அவன், இப்ப எங்க ஒளிஞ்சிருக்கான்?

''இனியாவது உண்மையை பேசுங்க. இல்ல, உங்களையும் நாங்க கைது செய்ய வேண்டி வரும்,'' சந்திரமோகனின் கட்டளைக் குரல், சந்தோஷை மிரள வைத்தது; தன்னைப் பற்றிய உண்மையை போட்டு உடைத்த சுமதியை முறைப்பாக பார்த்தான்.

''அவங்களை ஏன் முறைக்கறீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க,'' என்று, அவனை தன் பக்கம் திருப்பினார், சந்திரமோகன்.

''அவர், எங்க இருக்காருன்னு எல்லாம் எனக்கு தெரியாது, சார். போனில் பேசுவார். அவர் சொல்றபடி நானும் நடந்துக்கிட்டேன். அவ்வளவு தான்...''

''அப்ப, அவன் போன் நம்பர் இருக்கு தானே?''

''அது, அவராதான் கூப்பிடுவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நம்பர்லேர்ந்து பேசுவார்.''

''கடைசியா பேசின நம்பர் இருக்கு தானே?''

''இருக்கு சார்.''

''அதை போட்டு, அவனை இப்ப கூப்பிடு. போனை, 'ஸ்பீக்கர்'ல போட்டு, நாங்க சொல்ற மாதிரி சொல். மாத்தி பேசி, அவனை எச்சரிக்கை பண்ணப் பார்த்த தொலைச்சுடுவேன்,'' சந்திரமோகனின் அதட்டல், சந்தோஷை திணறச் செய்தது; கட்டியும் போட்டது.

''கூப்பிடுங்க, இன்னும் என்ன யோசனை? இனியாவது நேர்மையா நடந்து, இந்த கூட்டத்தை விட்டு வெளியே வாங்க,'' சுமதியும் அவனை துாண்டினாள்.

அவ்வளவையும் பார்த்த, தனஞ்ஜெயனும், குமாரும், கார்த்திகாவும் வெறித்தபடி இருக்க... கிருஷ்ணராஜின் கண்களில் மட்டும் கண்ணீர்.

சந்தோஷ், தன் போனில் விவேக்கை கூப்பிடவும், 'ரிங்' போனது. அவனும், தொடர்புக்கு வந்தான்.

''என்ன சந்தோஷ், அந்த பங்களாவுக்கு போய், கிருஷ்ணராஜை பார்த்துட்டியா?'' ஸ்பீக்கர் போனில், அவன் குரல் எல்லாருக்கும் கேட்டது.

ஒரு தாளில் அவன் பேச வேண்டியதை வேக வேகமாய் எழுதி காண்பிக்கத் துவங்கினார், சந்திரமோகன். அதில், 'ஆமாம்ன்னு சொல்' என்றிருந்தது.

மிதமான குரலில், ''பார்த்துட்டேன் சார்...'' என்றான், சந்தோஷ்.

''வெரிகுட், யாரும் சந்தேகப்படலியே?''

கேள்விகளும், பதில்களும் தொடர்ந்து துவங்கின.

''இ... இல்லை சார்!''

''ஏன் தயங்கித் தயங்கி பேசற... உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி. இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து அந்த கிருஷ்ணராஜை கைது பண்ணிடுவாங்க. இனி, அங்க உன் மூலமா என் ராஜ்யம் தான்.''

''நீங்க இப்ப எங்க சார் இருக்கீங்க?''

''அது எதுக்கு உனக்கு. என்னையும் போலீஸ் தேட ஆரம்பிச்சுடுச்சு. அந்த மலேசியா ராமகிருஷ்ணன் எல்லாரையும் காட்டிக் கொடுத்துட்டான். துரோகிப்பய, அவனால நானும் தலைமறைவாகும்படி ஆயிடுச்சு.''

''அப்ப, நீங்க இனி தலைமறைவா தான் இருப்பீங்களா?''

''வேற வழி... அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் வாழ்க்கையே எப்பவும் இப்படித்தான். நீ கவலைப்படாத, நான் மாறுவேஷம் போட்டு, எப்படியாவது வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிடுவேன். போறதுக்குள்ள, கிருஷ்ணராஜோட அவ்வளவு சொத்தையும் நம்ம வசப்படுத்தி அதை விற்று, ஹவாலா முறையில டாலராக்கிடணும்.

''நீ விரும்பினா, உன் பெண்டாட்டி பிள்ளையோட, என் கூட வெளிநாட்டுக்கு வந்துடலாம். அது உன் விருப்பம். விருப்பம் இல்லேன்னா, அந்த கிருஷ்ணராஜ் சொத்துல, உனக்கு ஒரு பங்கை கொடுத்துடறேன். அதை வெச்சு நீ சந்தோஷமா வாழலாம்... என்ன சொல்ற?''

''உங்க விருப்பம். இப்ப, நான் உங்களை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்க விரும்பறேன்.''

''ஆசிர்வாதமா... இது என்ன பைத்தியக்காரத்தனம்?''

''என் வரையில நீங்க தானே கடவுள்!''

''கடவுளாவது, மண்ணாவது... என் வரையில, கடவுள் ஒரு அழகான கற்பனை. அப்படி ஒரு சக்தி உண்மையில இருந்தா, நாங்க கடத்தி விற்ற கடவுள் சிலைகளுக்கு, அது, எங்களை எரிச்சு சாம்பலாக்கி இருக்கணும்.''

''உங்களுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா, என் வரையில கடவுளான நீங்க இருக்கீங்களே.''

''உன் விசுவாசத்தை பாராட்டறேன். நான் இப்ப ஒரு இடத்துல இல்லை; நிற்காம கார்ல ஓடிக்கிட்டே இருக்கேன்; அதுவும் மாறுவேஷத்துல. கொல்லிமலைக்கு போய் ஒளியப் பார்த்தா, என் அப்பாவை போலீஸ் மடக்கி பிடிச்சுடுச்சு. அதனால, நான் மூவ் ஆகிகிட்டே இருப்பேன்.''

''அப்ப, எப்படி நான் உங்களை பார்க்கறது?''

சந்திரமோகன் வேக வேகமாக எழுதிக் காட்ட, சந்தோஷும் அப்படியே பேசினான்.

''நீ ஒண்ணு பண்ணு, நான் இப்ப ரெட்ஹில்ஸ் தாண்டி ஊத்துக்கோட்டை வழியா, ஆந்திராவுக்குள்ள நுழையப் போறேன். உனக்காக ஊத்துக்கோட்டை ஆந்திரா பார்டர்ல, என் காரில் காத்திருக்கிறேன். என் கார் நம்பர் சொல்றேன் குறிச்சிகிட்டு வா, நாம சந்திக்கலாம்; அப்படியே நம்ம திட்டங்களை பற்றியும் பேசலாம்.

''பை த பை, எதையும் யார்கிட்டயும், அதாவது, உன் மனைவி உட்பட யார்கிட்டயும், 'டிஸ்கஸ்' பண்ணாத. நீயும், இப்ப என் கூட்டத்துல ஒருத்தன். 'அண்டர்கிரவுண்ட்' வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு இனிதான் நீ தெரிஞ்சுக்க போற... ரைட்?''

''ரைட் சார்... வெச்சுடறேன்,'' என சொல்லி, போனை, 'கட்' செய்தான், சந்தோஷ்.

அடுத்த நொடி அவன் போனை வாங்கிக் கொண்ட சந்திரமோகன், ''கமான் புறப்படுங்க... உங்களை வெச்சு தான், அவனை நாங்க பிடிக்கணும். ஒழுங்கா ஒத்துழைச்சா, உங்க ஆள் மாறாட்ட குற்றத்தை மன்னிச்சு, உங்களையும், 'அப்ரூவர்' ஆக்கி, விடுதலை அளிப்போம். இல்ல, நீங்களும் கம்பி எண்ணணும். என்ன சொல்றீங்க?'' என்று அவனோடு புறப்பட்டார், சந்திரமோகன்.

''சார், அவரை விட்டுடுங்க. அவர் தான் நீங்க சொன்னபடி நடந்துக்கிட்டாரே,'' என்றாள், சுமதி.

''அந்த விவேக்கை கைது செய்துட்டு, சில நடைமுறை எல்லாம் இருக்கு. அதை எல்லாம் முடிச்சுட்டு விட்டுடுவோம்மா. நீங்க கவலைப்படாதீங்க,'' என்றார், சந்திரமோகன்.

அடுத்த சில நிமிடங்களில், கிருஷ்ணராஜ், ஒரு ஆம்புலன்ஸ் வேனிலும், சந்தோஷ், சந்திரமோகன் ஒரு காரிலும் ஏறி, அங்கிருந்து புறப்பட்டனர்.

கண்ணீரோடு மெயின் கேட் வரை சென்றாள், கார்த்திகா. கூடவே தனஞ்ஜெயனும், குமாரும் சென்றனர்.

சுமதியும், அவள் குழந்தைகள் இருவரும், ஓரமாக நின்று பார்த்தபடி இருக்க, கார்த்திகா அவர்களிடம் சென்றாள். சுமதியின் கையைப் பற்றி, ''ரொம்ப நன்றிம்மா... நீ மட்டும் உண்மையை சொல்லாம இருந்திருந்தா, நான் ரொம்பவே ஏமாந்திருப்பேன்,'' என்றாள்.

''உங்களுக்கு ரொம்ப பெரிய மனசும்மா... அடிச்சு துரத்த வேண்டிய எங்ககிட்ட நன்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்களே.''

''உன் புருஷன் பண்ணின தப்புக்கு, நீ என்ன செய்வ? எப்படியோ, அந்த விவேக் மாட்டப் போறான்; அவனோட அப்பனும் சிக்கிட்டான். எனக்கு, இப்ப அதுதான் பெரிய ஆறுதல்,'' கண்ணீரை துடைத்துக் கொண்டே சொன்னாள், கார்த்திகா.

''மேடம்... நானும், குமாரும், வக்கீலை பார்த்து, சாரை, ஜாமின்ல எடுக்க பார்க்கறோம். அவரோட உடல்நிலை காரணமே, நிச்சயம் ஜாமினுக்கு, உதவியா இருக்கும். இப்ப முதல் வேலையே அதுதான்...'' என்ற தனஞ்ஜெயனை, வறண்ட புன்னகையோடு பார்த்தாள், கார்த்திகா.

''என்ன மேடம்... அண்ணன் விஷயம் பொய் ஆயிடுச்சேன்னு வருத்தமா இருக்கா? சாரை ஜாமின்ல எடுத்துட்டு, உங்க அண்ணனை தேடி கண்டுபிடிக்கிறது தான் எங்கள் முதல் வேலையே. கட்டாயம் கண்டுபிடிச்சுடுவோம், மேடம்...''

''எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு, தனா, அதே சமயம், அப்பாவோட உடல்நிலை பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். அவருக்கு எதாவது ஒண்ணு ஆகறதுக்குள்ள, அண்ணனை கண்டுபிடிச்சு, அவர் முன் கொண்டு போய் நிறுத்தணும். அப்பதான், அப்பா நிம்மதியா கண்ணை மூடுவார்.''

''ஏன் மேடம், அவர் கண்ணை மூடறத பற்றி, இப்ப நாம பேசணும்? அவரை நிச்சயம் பூரணமா குணமாக்க முடியும். ஏன்னா, இப்ப அவர் திருந்திட்ட நல்ல மனுஷன். அதனால, எந்த, 'ஸ்ட்ரெஸ்'சும் அவருக்கு இருக்காது.

''வியாதிகளுக்கு மூல காரணமே, 'ஸ்ட்ரெஸ்'ங்கிற மன அழுத்தம் தானே? அதனால, அவரை குணப்படுத்தறதும் சுலபம். அடுத்து, அவர் கிட்டத்தட்ட ஒரு, 'அப்ரூவர்!' அந்த தாமோதர் மற்றும் விவேக்கை போல தப்பி ஓடப் பார்க்கல.

''ஆகையால, கோர்ட் அவரை விடுவிக்கவும் வாய்ப்பு இருக்கு. நாம, 'பாசிட்டிவா' நினைப்போமே?'' தனஞ்ஜெயன் நம்பிக்கையாக பேசியதும், அவனை நெருங்கி வந்தாள், சுமதி.

''சார்... அந்த குப்பை தொட்டி குழந்தையை பற்றி, மாமனார் என்கிட்ட பேசியிருக்கார். ஒருநாள், அதை அவர், குரோம்பேட்டை, 'சாரதா சைல்ட் ஹோம்'ல கொண்டு போய் ஒப்படைச்சதா சொன்னார். அங்க போனா, நிச்சயம் அது யார்னு தெரிய வரும், சார்,'' என்றாள்.

தனஞ்ஜெயனுக்கும், குமாருக்கும் சந்தோஷத்தில் எகிறிக் குதிக்க வேண்டும் போலிருந்தது.

''குமார், காரை எடு. நாம இப்ப அந்த, 'சைல்ட் ஹோம்' போறோம்,'' என்று பரபரப்பானான், தனா.

அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் கார், அந்த பங்களாவை விட்டு சீறிக் கிளம்பியது.

அடுத்த இதழில் முடியும்.- இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us