
கிராமப்புறங்களில் மட்டுமல்ல, சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட, முனியம்மா என்ற பெயர் கொண்ட பெண்கள் அதிகம் உள்ளனர்.
யார் இந்த முனியம்மா, இந்த அம்மனுக்கு எங்காவது கோவில் இருக்கிறதா... இதோ, சில விசேஷத் தகவல்கள்...
முனி என்ற சொல், முனிவர் என்பதன் சுருக்கம். முனிவர்கள் என்றால், பெரும்பாலும் ஜடாமுடி தரித்திருப்பர். புலித் தோல், மான் தோல் உடை அணிந்து, எளிமையான தோற்றத்தில் இருப்பர். பெரும்பகுதி நேரத்தை தவம், தியானத்தில் செலவழிப்பர்.
இப்படி பார்த்தால், உலகின் முதல் முனிவர் யார் என்றால், சிவபெருமானைத் தான் சொல்ல வேண்டும். சிவனை வணங்கும் பக்தர்கள், தாங்களும் சிவமாகவே மாற வேண்டும் என்ற உத்வேகத்தில், சிவனைப் போலவே வேடம் தரித்திருப்பர்.
சிவனும், ஜடாமுடி தரித்தவர் தான். இவரை பெரும்பாலும் நாம், லிங்க வடிவிலேயே தரிசிக்கிறோம். அதனால், அவரது ஜடாமுடியைத் தரிசிக்கும் பாக்கியம், நமக்கு குறைவே.
தென்காசி மாவட்டம் சிவசைலம், சிவசைல நாதர் கோவிலில், லிங்கத்துக்கே ஜடாமுடி இருப்பதை, சிவன் சன்னிதியின் பின்புறம் இருக்கும், பலகணி எனும் கல் ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோவிலின் மூலவர் சன்னிதியை யாராலும் வலம் வர முடியாது. வலம் வர இடமிருந்தும், வலம் வராததற்கான காரணம் தெரியுமா?
இங்குள்ள, ஐயாறப்பர் ஜடாமுடி, சன்னிதியின் பின்பக்கம் யார் கண்ணுக்கும் புலப்படாமல், விரிந்து கிடக்கிறதாம். இதனால், அதை மிதித்து விடக்கூடாது என்று, சன்னிதியை முழுமையாக வலம் வருவதில்லை.
ஆக, முனிவர் என்ற சொல்லிலிருந்து வந்தது தான், முனியப்ப சுவாமி என்ற பெயர். கிராம மக்கள், சிவாம்சமான முனியப்பனை தங்கள் காவல் தெய்வமாக வணங்கினர். அவர், சிவாம்சம் என்பதால், முனீஸ்வரர் கோவில்களில் சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
முனீஸ்வரரின் பெண் அம்சமே, முனியம்மா எனும் முனீஸ்வரி. பார்வதி தேவியே முனியம்மையாக கிராமக் கோவில்களில் அருள்பாலிக்கிறாள் என்றும் சொல்வதுண்டு.
பெரும்பாலும், முனீஸ்வரருக்கே சிலைகளை நாம் பார்க்க முடியும். முனியம்மையை சிலை வடிவில் தரிசிக்க, நாம் செல்ல வேண்டிய இடம், சேலம்- - வேலுார் சாலையில், அரூரிலிருந்து வடக்கே, 17 கி.மீ., துாரத்திலும், ஊத்தங்கரையிலிருந்து தெற்கே, 10 கி.மீ., துாரத்திலும் உள்ள அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலாகும்.
ஆஞ்சநேயர் இங்கு பிரசித்தம் என்றாலும், சிவன் தான் மூலவர். இவரை, தீர்த்தகிரீஸ்வரர் என்பர். இந்தக் கோவிலின் அருகிலுள்ள ஏரிக்கரையில், காவல் தெய்வமாக முனீஸ்வரரும், முனியம்மையும் உள்ளனர்.
இங்குள்ள தென்பெண்ணையாற்றில், அனுமன், கங்கையிலிருந்து கொண்டு வந்த தீர்த்தம் கலந்துள்ளதாகவும், இந்த தீர்த்தத்தை தரிசித்தாலே பாவங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
முனியம்மா என்ற பெயர் கொண்டவர்கள் தனித்துவம் மிக்கவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பர். இந்த அரிய குணங்கள் பெண்களுக்கு அவசியம் தேவை. தேவையை நிறைவேற்ற, முனியம்மையை வணங்கி வரலாமே!
தி. செல்லப்பா

