
நடத்துனரின் நாசூக்கான அறிவிப்பு!
அண்மையில், சென்னை சென்று, தனியார் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பேருந்தில் பயணித்த இளம் காதல் ஜோடி ஒன்று, வயதானோர், குழந்தைகள் என, பலதரப்பட்டோர் பயணிப்பதை கவனத்தில் கொள்ளாமல், 'சில்மிஷம்' செய்தபடி வந்தனர்.
இது, பயணியர் அனைவரையுமே முகம் சுளிக்க செய்தது. 'சில்மிஷ' காதல் ஜோடியின் செயலை தடுத்து நிறுத்த, நாசூக்காக ஒரு காரியம் செய்தார், நடத்துனர். இருக்கையிலிருந்து எழுந்து வந்து, பயணியர் முன், 'இப்பேருந்தில் பயணிப்பவர்கள், கொண்டு வந்த பொருட்கள் களவு போய்விடும் என்ற பயமின்றி, உறக்கம் வந்தால், தைரியமாக உறங்குங்கள்.
'ஏனெனில், இப்பேருந்து முழுக்க, சி.சி.டி.வி., கேமரா பொருத்தி, இதில் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் கண்காணிக்கப்பட்டு, துல்லியமாக பதிவும் செய்யப்படுகிறது...' என, அறிவித்தார். அதன்பின், அந்த காதல் ஜோடி, 'கப்சிப்' ஆனது; பயணியரும் நிம்மதியடைந்தனர். நடத்துனரின் சமயோஜிதத்தை, அனைத்து பயணியருமே, பாராட்டினோம்!
—-மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.
வாழ நினைத்தால் வாழலாம்!
நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர், நண்பர். தந்தையின் பிசினசில், உதவியாக இருக்கிறார். நண்பருக்கு, கல்லுாரியில் படிக்கும் ஒரு தங்கை.
நண்பரின் தந்தை, 'ஓட்டுனர் தேவை' என, பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்ததை பார்த்து, இளைஞர் ஒருவர், வேலை தேடி வந்தார். கல்வி அறிவு குறைவாக இருந்தாலும், நல்லவராக தெரிந்ததால், அவரை பணியில் அமர்த்தினார்.
நண்பரின் தங்கையை, கல்லுாரிக்கு அழைத்துச் சென்று வரும் பணியையும், அந்த இளைஞரே செய்து வந்தார். காலப்போக்கில், அந்த பெண்ணும், இளைஞரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
படிப்பை முடித்ததும், அவளுக்கு வரன் பார்க்க துவங்கியபோது தான், அவள் காதலிக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தது. இளைஞர், வேறு மதத்தை சேர்ந்தவர் மற்றும் வசதியில் பின்தங்கியவர் என்பதால், சம்மதிக்கவில்லை, நண்பரின் தந்தை.
ஒருநாள், அந்த பெண், இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறினாள். குடும்பத்தார் எவ்வளவு முயன்றும், அப்பெண், தன் காதலில் பிடிவாதமாக இருந்ததால், நண்பரின் குடும்பம், அப்பெண்ணை ஒதுக்கி வைத்தது.
நண்பரின் தங்கை, தன் கணவருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, பொறுப்பை உணர செய்து, தன் சேமிப்பு பணத்தில், புதிய கார் ஒன்றை வாங்கி தந்தாள். இளைஞரும், காலம் நேரம் பார்க்காமல், கடுமையாக உழைத்து, இன்று, பல வாகனங்களை வாங்கி, பெரிய டிராவல்ஸ் நிறுவனம் வைக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
இரண்டு பிள்ளைகளுடன், தந்தையே வியக்குமளவுக்கு, நல்ல வசதியுடன் வாழ்கிறாள். அத்துடன், காதலரின் குடும்பத்தையும், தொழிலில் நஷ்டமடைந்து வறுமையில் வாடும், தன் பெற்றோரையும் பேணி, காப்பாற்றி வருகிறாள்.
இளைஞர்களே... காதலிப்பதும், திருமணம் புரிவதும் பெரிதல்ல. அதன்பின் வரும் வாழ்க்கையை, திறமையுடன் சமாளித்து சாதிப்பதே முக்கியம் என்பதை உணர்ந்து, காதலியுங்கள்.
— க.ஆ.சரோ ஆனந்த், சென்னை.
யார் அனாதை?
வெளியூர் செல்ல, பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். என் அருகில், பத்து வயது பையனும், அவன் அப்பாவும் நின்றிருந்தனர். அப்போது, ரோட்டில், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து சிறுவர்களை அழைத்துச் சென்றனர். அதைப் பார்த்த சிறுவன், 'இவங்கெல்லாம் யாருப்பா...' என்று, கேட்டான்.
'இவர்களெல்லாம் அனாதைங்க...' என்று, சுருக்கமாக கூறினார்.
'அனாதைன்னா யாருப்பா?' என்றான்.
'அம்மா, அப்பா இல்லாதவங்க...' என்றார்.
உடனே, 'உனக்கும் தான் அப்பா, அம்மா இல்லையே... அப்ப நீயும், அனாதையா...' என்று கேட்டான்.
கண் கலங்கி, 'இல்லப்பா, அவங்க, சாமி புள்ளைங்க...' என்று, குரல் தழுத்தழுக்க கூறினார்.
இதைக்கேட்ட என் மனம் நெகிழ்ந்தது. என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல், ஒரு சத்தியமான வார்த்தையை சொன்ன அந்தப் பையன், என் பார்வைக்கு, ஒரு ஞானியாக தெரிந்தான்.
பா.சச்சிதானந்தம், புதுச்சேரி.

