PUBLISHED ON : ஜூன் 09, 2024

கந்தன் கருணை படத்தில், முருகனாக நடிப்பதற்கு, 30 பேருக்கு ஒப்பனைச் சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வசன தேர்வும் வைக்கப்பட்டது.
படத்தில் குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம், காளைப் பருவம் என, முருகனின் மூன்று பருவத்தில் நடிக்க, மூன்று நடிகர்கள் தேவைப்பட்டனர்.
குழந்தைப் பருவ முருகனுக்கு குழந்தை அமைந்து விட்டது. வளர் இளம்பருவ முருகனுக்கு அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய, மாஸ்டர் ஸ்ரீதர் கிடைத்து விட்டார். காளைப் பருவத்தில் நடிக்க, சரியான ஆள் கிடைக்கவில்லை. அதற்கான நடிகனைத் தேடித்தேடி சலித்துப் போனார், ஏ.பி.என்.,
அப்போது அவரை சந்திக்க வந்தார், பட அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
'உங்க, கந்தன் கருணை படம், எவ்வளவு துாரம் வளர்ந்திருக்கு; எப்போ வெளியிடப் போறீங்க?' என்றார்.
'காளைப்பருவ முருகனாக நடிப்பதற்கு சரியான நடிகன் கிடைக்கவில்லை...' என்ற தன் மனக் குறையை சொன்னார், ஏ.பி.என்.,
'நம் நிறுவன திரைப்படத்தில் நடித்த, சிவகுமார் என்ற பையனை பாருங்க. அவன், முருகன் வேஷத்துக்கு பொருத்தமா இருப்பான்...' என்றார். ஏ.வி.எம்.,
உடனே அந்த பையனை வரவழைத்தார், ஏ.பி.என்., அதன்பின், கந்தன் கருணை படத்தில் நடிக்க, ஒப்பந்தமானார், சிவகுமார்.
திரைப்பட நடிகர்களுக்கு, பத்திரிகைக்காரங்க தயவு முக்கியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால், சில நேரங்களில் தெரிந்தும் மற்றும் அறியாமலும் சில தவறுகளைச் செய்து விடுவர்.
சில நேரங்களில் வணிக நோக்கத்துடன், 'கிசுகிசு'களையும் வெளியிடுவதுண்டு. அதனால், பெரிய விபரீதம் ஏற்பட்ட பின், 'வருந்துகிறோம்' என்று ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி, தப்பித்துக் கொள்வர்.
கந்தன் கருணை படத்தில், முருகனாக நடித்துக் கொண்டிருந்தார், சிவகுமார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார்.
'நீங்கள், இப்போது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கீறீர்கள்?' என்று கேட்டார், நிருபர்.
'ஜெமினி வாசன் எடுக்கும் படத்திலும், எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் ஒரு படத்தில் நடிக்கிறேன். அது, எனக்கு ஒரு திருப்புமுனைப் படமாக இருக்கும்...' என்று பேட்டியின் இறுதியில், நடிகர் சிவகுமார் சொன்னதாக, நிருபர் ஒரு வார்த்தையை சேர்த்து விட்டார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் போல், பல புதிய படங்களில் சிவகுமார் நடிக்கிறார் என்று எழுதி விட்டார், நிருபர்.
அதைப் படித்த, கந்தன் கருணை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.,சுக்கு கோபம் வந்துவிட்டது.
'என்னங்க இந்த புதுப் பையன், இப்படி பேட்டி கொடுத்திருக்கான். நாம இந்தப் பையனை போட்டு பிரமாண்டமான படமெடுத்துக் கொண்டிருக்கோம். அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல...' என்றார்.
அதே பேட்டி, இயக்குனர் ஏ.பி.என்.,னுக்கு வேறு ஒரு மாதிரியான கோபத்தை உண்டாக்கி இருந்தது. பழையன கழிதல்ன்னு நம்மள சொல்லியிருக்கான் என்று கோபப்பட்டார்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் கோபத்தில் இருப்பதை, ஏ.எல்.எஸ்.,சின் நிர்வாக மேலாளர் வீரய்யா, சிவகுமாரிடம் எடுத்துச் சொல்லி, 'இயக்குனரை எப்படியாவது சமாதானப் படுத்துங்கள்...' என்றாராம்.
ஏ.பி.என்.,னை சந்தித்தார், சிவகுமார்.
பொதுவாக திரையுலகினர் மத்தியில் ஏ.பி.என்., கோபப்படாதவர் என, பெயர் எடுத்தவர். ஆனால், அன்று, கோபத்தின் உச்சத்திலிருந்தார்.
சிவகுமாரை கண்டதும், 'நாங்கள் எல்லாம் பட்டினியும், பசியுமா கிடந்து, நான்கு வயதிலிருந்து, 30 வயது வரைக்கும், நாடக மேடையில் போராடி போராடி, திரைத்துறைக்கு வந்தோம். 10 - 15 வருஷமா திரைத் துறையில் போராடி, 50 வயதில் முன்னேறி, இந்த இடத்தைப் பிடிச்சுருக்கோம்.
'எங்களை எல்லாம் நீங்க, பழையன கழிதல்ன்னு சொல்றீங்க அப்படித்தானே... அத்துடன், நீங்களெல்லாம் ஒரு பிரஷ்ஷை எடுத்துக்கிட்டு வருவீங்க. உங்களுக்கு நாங்க இடம் கொடுத்துட்டுப் போயிடணும் இல்லையா...' என்று பொரிந்து தள்ளி, கோபத்தை கொட்டித் தீர்த்தார், ஏ.பி.என்.,
'சத்தியமா நான் அப்படி சொல்லலே அண்ணா... அந்த நிருபர், தானாகவே, பழையன கழிதல் புதியன புகுதல்னு ஒரு வார்த்தையைத் சேர்த்துக்கிட்டாரு...' என்று, தன்னிலை விளக்கமளித்தார், சிவகுமார்.
அந்த தன்னிலை விளக்கமும், அதன் வார்த்தைகளும் உதட்டிலிருந்து வரவில்லை. உள்ளத்தின் அடியிலிருந்து வருகிறது என்பதை புரிந்து, ஒருவாறு சமாதானமடைந்தார், ஏ.பி.என்.,
ஏ.பி.என்., இயக்கத்தில், சிவாஜி நடித்த திரைப்படம், திருவருட்செல்வர். அப்படத்தில் திருஞான சம்பந்தராக நடிக்க, மாஸ்டர் பிரபாகரை தேர்ந்தெடுத்தார், ஏ.பி.என்.,
முதல் நாள், மாஸ்டர் பிரபாகருக்கு கோவளம் அருகே, சிவாஜியுடன் படப்பிடிப்பு. திருஞானசம்பந்தரான மாஸ்டர் பிரபாகர், அப்பரான சிவாஜியை பிரிந்து போகும் காட்சியை படமாக்க வேண்டும். ஒப்பனையுடன் படப்பிடிப்புக்கு வந்து விட்டார், சிவாஜி.
ஞானசம்பந்தராய் நடிக்கும் சிறுவனான பிரபாகரைப் பார்த்ததும், 'என்ன ஏ.பி.என்., பையன் நல்லா நடிப்பானா...' என்று சந்தேகத்துடன் கேட்டார், சிவாஜி.
'பையன் உங்களுக்கு ஈடு கொடுத்து நன்றாக நடிப்பான்...' என்று கூறியுனார், ஏ.பி.என்.,
அன்றைய படப்பிடிப்பு ஆரம்பித்து சிறப்பாக நடந்து முடிந்தது. ஏ.பி.என்.,னைப் பார்த்து, 'அண்ணே, நீங்க சொன்ன மாதிரியே பய பயங்கர கில்லாடி தான்...' என்றாராம், சிவாஜி.
முதள் நாள் படப்பிடிப்பிலேயே, அதுவும் சிவாஜியே, 'கில்லாடி' என்று சொல்லி விட்டார் என்றால், அதைவிட பிரபாகர் நடிப்புக்கு வேறு என்ன சான்று வேண்டும்.
திருவருட்செல்வர் படத்தில், ஒரு காட்சியை ஏ.பி.என்., எடுத்தது பற்றி, பத்திரிகையாளர்களை அழைத்து, தன் கருத்தைப் பதிவு செய்தார், ஆதீனத் தலைவர் ஒருவர். இச்செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி, பரப்பரப்பாக பேசப்பட்டது.
பிறகு என்ன நடந்தது?
— தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.
கார்த்திகேயன்

