
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 21 வயது பெண். எனக்கு பள்ளியில் படிக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். நான், கல்லுாரியில் படித்து வருகிறேன்.
எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே அவளுடன் பழகி வருகிறேன். எங்கு போனாலும், என்ன செய்தாலும் நாங்க எப்பவுமே ஒன்றாக தான் இருப்போம். அவளும் என்னுடன் தான் கல்லுாரியில் படிக்கிறாள்.
சமீபகாலமாக, அவள் ஒரு பையனை காதலிக்கிறாள். இதனால் என்னுடன் அதிகமாக பேசுவதில்லை; வெளியே எங்கும் என்னுடன் வருவதுமில்லை.
அவர்கள் எங்காவது வெளியில் சென்றால், என்னுடன் தான் செல்வதாக, அவள் வீட்டில் பொய் சொல்லி விட்டு செல்கிறாள், தோழி. இது, எனக்கு சங்கடமான நிலையை உருவாக்கிவிட்டது.
நான் தான் அவளை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று, அவள் படிப்பை கெடுத்து விடுவதாக குறை கூறுகின்றனர், தோழியின் பெற்றோர்.
அவர்களது வீட்டில், எனக்கான மதிப்பு குறைந்து போனதாக கருதுகிறேன். என் நிலையை அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
ஏதாவது, 'அட்வைஸ்' செய்தால், 'நுாற்றுக்கிழவி மாதிரி பேசாதே. கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' செய்து கொள்...' என்கிறாள், தோழி.
இதெல்லாம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கான ஆலோசனை தாருங்கள்.
— ‑இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:
* உன் தோழியின் காதல் மெய்யானதா அல்லது வெறும் இனக்கவர்ச்சி சார்ந்ததா என, தணிக்கை செய். மெய்யான காதலாக இருந்தால், மாதம் ஒருமுறை சந்திப்புடன் படிப்பு முடியும் வரை, வேலை கிடைக்கும் வரை, காதலை ஆரோக்கியமாக தொடரச் சொல்.
அவளது காதல், இனக்கவர்ச்சி சார்ந்ததாக இருந்தால், காதலை கத்தரித்துவிட்டு, படிப்பில் முழு கவனத்தை திருப்பச் சொல்.
காதலனால் காமமும், பணமும், உணவும், பொழுது போக்கும் நிறைய கிடைத்துக் கொண்டிருந்தால், உன் அறிவுரை, அவள் காதுகளில் ஏறாது. நரித்தந்திரமாய் உன்னை மூளைச்சலவை செய்து, தனக்கு கூட்டுக்காரி ஆக்குவாள். இரையாகி விடாதே, நைச்சியமாக தப்பித்துக் கொள்.
* தோழி திருந்த மூன்று மாதம் அவகாசம் கொடு. திருந்தாவிட்டால், 'அம்மா தாயே... உனக்கும் எனக்கும் ஒத்து வராது. அவரவர் வழியில் தனித்தனியாக பயணிப்போம். குட்பை...' எனக்கூறி, அவளிடமிருந்து நிரந்தரமாக விலகி விடு.
விலகிய பின், உனக்கு கிடைக்கும் சாந்தியும், சமாதானமும் பூமிப்பந்தை விட பெரியது. அவளது மொபைல் எண்ணை 'பிளாக்' செய் அல்லது நீ புது மொபைல் எண்ணுக்கு மாறு.
தோழியுடனான விலகலை வெளிப்படையாக அறிவித்து விடு. இருதரப்பு பெற்றோர் மற்றும் தோழியரும் அறிந்து கொள்ளட்டும். ஏன் விலகினாய் என யாராவது கேட்டால், எதாவது ஒரு காரணம் கூறி, சமாளி.
* தொடர்ந்து முட்டல் மோதல் இல்லாமல், தோழி உன்னிடமிருந்து விலகிக் கொண்டால் சரி. விடாமல் உன்னை துரத்தினால், நீ சிறிதும் தாமதிக்காதே.
தோழியின் அம்மாவை தனியாக சந்தித்து, அவளது காதலை போட்டு உடைத்துவிடு. அஹிம்சை வழியில் தோழியின் காதலை கத்தரித்து விட, அவளது அம்மாவுக்கு யோசனை கூறு.
* தினம் கல்லுாரியில் நடப்பதை உன் அம்மாவிடம் பகிர்ந்து கொள். ஏட்டுக் கல்வியிலும், வாழ்க்கைக் கல்வியிலும் கிரியா ஊக்கமாய் இருக்கும் தோழியருடன் நட்பு பாராட்டு.
கல்லுாரி நேரம் தவிர, மீதி நேரம் வீட்டில் இருக்க பார். ஆண் நிர்வாகம் செய்து, ஆண் நண்பர்களை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்து.
வாரா வாரம் கோவிலுக்கு போ. உல்லாசம் கேளிக்கை கொண்டாட்டங்களை, 25 வயதுக்கு பின் தள்ளிப் போடு.
உன்னுடைய தினசரி நடவடிக்கைகள் பெற்றோர் கண்களுக்கு வெளிப்படை தன்மையாய் அமையட்டும். தங்கையை தோழியாக வரித்துக் கொள். வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.

